பாக்யா 12-10-2012 இதழில் 86ஆம் அத்தியாயமாக வெளியாகிய இசை தரும் நோயற்ற வாழ்வு கட்டுரையின் இறுதிப் பகுதியை மகிழ்வுடன் அளிக்கிறோம்
ச.நாகராஜன்
மேளகர்த்தா ராகங்கள் எனப்படும் அடிப்படை ராகங்கள் 72.
“அவை உடலில் உள்ள 72 முக்கிய நாடிகளைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பிட்ட ராகத்தின் லக்ஷணத்தை உணர்ந்து அனுபவித்துப் பாடுபவர் அதற்குரிய நாடியைக் கட்டுப்படுத்துவார்” என்று பழைய இசை நூல்கள் தெரிவிக்கின்றன. சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ ஸ்வாமிகள், முத்துசாமி தீக்ஷிதர் சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் வாழ்வில் நடந்த ஏராளமான சம்பவங்கள் இசையின் ஆற்றலை உணர்த்துபவை.
ஜோதிஸ்வரூபிணி என்ற ராகத்தை இசைத்து குத்துவிளக்கை நெருப்புக்குச்சியின் உதவியின்றி தியாகராஜ ஸ்வாமிகள் ஏற்றி அருகிலிருந்தோரை வியக்க வைத்தார். ராகத்தின் ஸ்வரங்களுக்கு ஏற்ப எரியும் சுடர் ஓங்கியும் மங்கியும் எரிந்ததையும் அனைவரும் பார்த்து அதிசயித்தனராம். பிலஹரி ராகத்தில் அமைந்த அவரது நா ஜீவ தாரா என்ற கீர்த்தனை இறந்தவனை எழுப்பிய சம்பவமும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. முத்துசாமி தீக்ஷிதரின் நவகிரக கீர்த்தனைகளைப் பாடினால் வயிற்று வலி நீங்கும் (குறிப்பாக ப்ருஹஸ்பதே என்று தொடங்கும் குரு பகவானைப் பற்றிய கீர்த்தனை) என்பதும் சியாமா சாஸ்திரிகளின் துரு சுகு கீர்த்தனை ஆரோக்கியத்தை மேம்படச் செய்யும் என்பதும் இசை விற்பன்னர்களின் நம்பிக்கை.
ரத்தக் கொதிப்பை நீக்க அசாவேரி, தலைவலி போக சாரங்கா, தர்பாரி
மற்றும் ஜய்ஜயவந்தி காச நோய் போக மேகமல்ஹார் நெஞ்சு வலி நீங்க தர்பாரி, கோபமும் படபடப்பும் போக ஜய்ஜயவந்தி புன்னாகவராளி, ஸஹானா, மனச்சோர்வை நீக்க நடநாராயணி, தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்க அசாவேரி, வயிற்று வாயு நீங்க ஜோன்புரி பக்கவாதம் நீங்க பைரவி மற்றும் ஆஹிர்பைரவி பசியுணர்வு இல்லாமல் இருப்பதைப் போக்க தீபக் இதய சம்பந்தமான நோய்களைத் தீர்க்க கல்யாணி., சங்கராபரணம் மற்றும் சாருகேசி என்று நோய் தீர்க்கும் ராகங்களின் பட்டியல் நீளுகிறது.
குறிப்பிட்ட ஒரு இசையைக் கேட்டவுன் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. எண்டார்பின், கார்டிஸால் ஏசிடிஹெச் இண்டர்ல்யூகின்-1 இம்யூனோக்ளோபிலுன்-ஏ போன்ற பயோகெமிக்கல்கள் இசையைக் கேட்டவுடன் பெரும் மாறுதலை அடைகின்றனவாம். எண்டார்பின்கள் சிக்கலான மூளை அமைப்பில் உணர்வுகளைத் தூண்டுகின்றனவாம். நல்லதொரு இசையைக் கேட்டால் இவை நமது நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பலவற்றை சீராக ஆக்குகின்றனவாம்.இவை அறிவியல் ஆராய்ச்சிகள் தரும் தகவல்கள்!
அமெரிக்க மருத்துவமனைகளில் சிலவற்றில் கோரக் கல்யாண் ராகம் ஹைபர்டென்ஷன் நோயைத் தீர்ப்பதற்கு இசைக்கப்படுகிறது! ராக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஓஜே.ஷ்லெர் எலும்பு மஜ்ஜை பதியம் செய்து கொண்ட நோயாளிகளுக்கு வலியைக் குறைக்கவும் புதிய மஜ்ஜைகள் ரத்த செல்களை உருவாக்கவும் இசையின் உதவியை நாடுகிறார்.
மேளகர்த்தா ராகங்களான 72ஐத் தவிர்த்து ஜன்ய ராகங்கள் எனப்படும் ராகங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. ஆக ராகங்கள் சங்கீதத்தை ஒரு சாகரமாக ஆக்குகின்றன.
சென்ற நூற்றாண்டில் திரைப்படத் துறை உருவானவுடன் புதிய இசைப் புரட்சி ஒன்று உருவானது. ராக சாகரத்தில் முத்துக் குளித்து நூற்றுக்கணக்கான திரைப்பட இசையமைப்பாளர்கள் பல்லாயிரக்கணகான பாடல்களுக்கு இசையை அமைக்க ஆரம்பித்தனர். திரைப்படங்கள் ஜன ரஞ்சகமாய் ஆகவே திரைப்படப் பாடல்கள் மெல்லிசையாக மலர்ந்து கோடிக் கணக்கானோரைப் பரவசப்படுத்த ஆரம்பித்தன.இவற்றில் அநேகமாக பிரபலமான ராகங்கள் அனைத்தும் கையாளப்பட்டு விட்டன!
தமக்குப் பிடித்த ராகங்களையும் அவற்றில் அமைக்கப்பட்ட
பாடல்களையும் அட்டவணைப்படுத்திக் கொண்டு அவற்றைக் கேட்டு மகிழ்ந்து உடல்நலத்தை யார் வேண்டுமானாலும் மேம்படுத்திக் கொள்ளலாம். அத்தோடு உரிய நிபுணர்களை அணுகி வியாதியைப் போக்கிக் கொள்ள அறிவுரைகளைக் கேட்டு சிகிச்சை பெற்று பூரண குணத்தையும் அடையலாம்.
இந்த வகையில் உதாரண முயற்சியாக சில ராகங்களும் அவற்றில் அமைக்கப்பட்ட சில திரைப்படப் பாடல்களும் கீழே தரப்பட்டுள்ளன. இது சிறிய “மாதிரி அட்டவணை” தான் என்பதால் இதைப் பார்த்து ஏராளமான ராகங்களையும் அவற்றில் அமைக்கப்பட்ட பாடல்களையும் வாசகர்களே அமைத்துக் கொள்ளலாம்; இசை தரும் நோயற்ற வாழ்வைப் பெற்று மகிழலாம்!
========================================================================
ராகம் பாடல் படம்
========================================================================
மோஹனம் ஆஹா இன்ப நிலாவினிலே மாயாபஜார்
சுபபந்துவராளி ஆயிரம் தாமரை மொட்டுக்களே அலைகள்
ஓய்வதில்லை
சிந்துபைரவி அன்னக்கிளி உன்னைத் தேடுதே அன்னக்கிளி
ப்ருந்தாவன சாரங்கா சிங்காரக் கண்ணே வீரபாண்டிய கட்டபொம்மன்
சுத்த தன்யாசி சிறு பொன்மணி கல்லுக்குள் ஈரம்
கமாஸ் சித்திரம் பேசுதடி சபாஷ் மீனா
ஹிந்தோளம் அழைக்காதே மணாளனே மங்கையின் பாக்கியம்
கௌரி மனோஹரி கவிதை அரங்கேறும் நேரம் அந்த 7 நாட்கள்
புன்னாகவராளி நாதர் முடி மேலிருக்கும் திருவருட்செல்வர்
கானடா பொன் என்பேன் போலீஸ்காரன் மகள்
—————————————————————————————————————————–
அறிவியலும் பாரம்பரிய அனுபவமும் ஒன்று சேர்ந்து அபூர்வமான பலன்களை ஒரேமனதாக அறிவிக்கும் துறை இசை தான் என்பது எவ்வளவு வியப்பான விஷயம்!! இசை மூலம் ஆல்பா நிலையை அனைவரும் எய்தலாமே!
Last in the series written by Santanam nagarajan; for 600 more English and Tamil articles, please browse through the blog; swami_48@yahoo.com
*********
You must be logged in to post a comment.