சச்சரி, குச்சரி, பிச்சரின் பிதற்றல் — கம்பனின் சங்கீத அறிவு (Post No.3786)

Written by London swaminathan

 

Date: 4 APRIL 2017

 

Time uploaded in London:- 6-59 am

 

Post No. 3786

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

தமிழர்களின் அபார இசை அறிவை விளக்கும் சில பாடல்களைக் காண்போம்:-

 

நச்சு எனக் கொடிய நாகக் கள்ளொடு குருதி நக்கி

பிச்சரின் பிதற்றி அல்குல் பூந்துகில் கலாபம் பீறி

குச்சரித் திறத்தின் ஓசை களம் கொள குழுக்கொண்டு ஈண்டி

சச்சரிப் பாணி கொட்டி நிறை தடுமறுவாரும்

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்

 

பொருள்:

அரக்கியர் சிலர் பாம்பின் விஷம் என்று கூறத்தக்க கள்ளையும், பல வகைப் பிரணிகளின் குருதியையும் குடித்து மயங்கினர்; அதனால் குச்சரி என்னும் பண்ணின் தன்மை குரலில் கலக்க, பைத்தியக்காரர் போலப் பிதற்றினர்; சச்சரி என்னும் தோல் கருவி போலக் கைகளைத் தட்டினர். அல்குலின் மீது அணிந்த மெல்லிய ஆடையையும், கலாபம் என்னும் 25 கோவையுள்ள இடையணியையும் கிழித்துக்கொண்டு மனநிலை  தடுமாறினர்.

 

இந்தப் பாட்டில் இன்னொரு விஷயமும் உள்ளது. 25 கோவையுள்ள கலாபம் என்ற இடையணியையும் அரக்கியர் அணிந்து கொண்டிருந்தனர். வராஹமிஹிரர் என்னும் அறிஞர் 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் என்சைக்ளோபீடியவில் (கலைக் களஞ்சியத்தில்) ஏராளமான கோவையுள்ள முத்து மாலைகளைப் பட்டியலிடுகிறார். உலகிலேயே அதிக நகைகளை அணிந் தவர்கள் இந்துக்கள் இதை 2200 ஆண்டுகளுக்கு முன்னுள்ள பார்ஹுத் சிற்பங்களில்கூடக் காணலாம்.

இன்னொரு பாட்டில் அரக்கியர் வீட்டில் கேட்ட சங்கீத ஒலிகளைக் கம்பன் பாடுகிறான்.

 

சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ

பொங்கு பல்முரசம் ஆர்ப்ப இல்லுறை தெய்வம் பேணி

கொங்கு அலர் கூந்தல் செவ்வாய் அரம்பையர் பாணிகொட்டி

மங்கல கீதம் பாட மலர்ப் பலி வகுக்கின்றாரை.

 

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்

 

 

பொருள்:

கூந்தலையும் செவ்வாயயையும் உடைய தேவ மகளிர், தாளம் போட்ட படி மங்கலப் பாடல்கள் பாடினர். சங்கு வளையல், சிலம்பு, மேகலை, பாதரசம் ஆகிய அணிகலன்களின் ஒலிகள் தாழுமாறு பலவகையான முரசுகள் முழங்கின. அச்சூழலில் இல்லுறை தெய்வத்தை வணங்கி, மலரினால் அருச்சனை செய்யும் அரக்க மகளிரை, சீதையத் தெடிச் சென்ற அனுமான கண்டான்.

 

 

இங்கு அரக்கர் வீட்டில் மங்கல கீதம் ஒலித்தது, முரசுகள் முழங்கியது ஆகிய சங்கீத விஷயங்களைச் சொல்லும் கம்பன், ஆரிய-திராவிட இனவாதப் புரட்டர்களுக்கு ஆப்பு வைப்பதையும் பார்க்க வேண்டும்.

சில வெளிநாட்டு அரைவேக்காடுகளும், திராவிடப் புரட்டர்களும், ராவணன் என்பவன் திராவிடன் என்றெல்லாம் கதைகட்டி, அரசியல் செய்து வருவதை நாம் அறிவோம். ஆனால் இங்கே அரக்க மகளிர் வீட்டிலுள்ள பூஜை அறைகளில் மலர்கொண்டு பூஜை செய்ததைக் கூறுகிறான். ஒவ்வொரு வீட்டிலும் இப்படி இல்லுறை தெய்வம் இருந்ததையும் அந்த தெய்வங்களுக்குத் தமிழர்கள் மலர், இலை (வில்வம், துளசி), புல் (அருகம் புல்) முதலியன கொண்டு பூஜை செய்ததையும் கபிலர் முதலான சங்கப் புலவர்கள் பாடியிருப்பதையும் கவனிக்க வேண்டும், அரக்கர்கள், இத்தோடு, தீய குணங்களுடன் வாழ்ந்தனர் என்பதையும் அறிதல் வேண்டும்.  நமது ஊரிலுள்ள திருடர்களும்   , ஏமாற்றுப் பேர்வழிகளும், கொள்ளையர்களும் கூட தெய்வத்தை பூஜிப்பது போன்றது இது.

 

xxxx

 

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய “இசைத் தமிழ் அதிசயங்கள்” என்ற கட்டுரையின் ஒரு பகுதியை மட்டும் கீழே தருகிறேன். முழுக்கட்டுரையும் வேண்டுவோர் இதே பிளாக்கில் 4 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரையைக் காண்க.

 

இசைத் தமிழ் அதிசயங்கள்

posted on 31 January 2013; by London swaminathan

1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திருக்கிறார்:

துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

 

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

 

 

 பத்துப் பாட்டில்

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

“ திண்வார் விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

 

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

 

சிலப்பதிகார உரையில்

சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாகத் தரும் பாடல்:
பேரிகை படக மிடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை
திமிலை குழமுழாத் தக்கை கணப்பறை
தமருகந் தண்ணுமை தாவிறடாரி
யந்திர முழவொடு சந்திர வலைய
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளந்த் துடுமை சிறுபறையடக்க
மாறி றகுனிச்சம் விரலேறு பாகந்
தொக்க வுபாங்கந் துடிபெறும் பாஇயென
மிக்க நூலோர் விரித்துரைத்தனரே
(தோற் கருவிகள்: தண்ணூமை, முழவு, தட்டை, முரசு, பறை, பம்பை, குளிர், தொண்டகச் சிறுபறை, கிணை, பதலை, ஆகுளி, துடி, தடாரி, எல்லரி, மத்தரி.

 

–subham–