கடவுள் பெயர் என்ன? எல்/அல்- ஈலா- இடா – அல்லா!!!

EL, chicago037-1
El at Chicago Museum

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1336 ; தேதி அக்டோபர் 9, 2014.

எல் மற்றும் அல் என்பது பாபிலோனிய சுமேரிய நாகரீகங்களில் கடவுளரைக் குறிக்கும் சொல். இதே சொல் வேதங்களிலும் தமிழிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒற்றுமையைக் காணும்போது மனித குலம் ஒன்றே — அவனுக்கு இறைவனும் ஒருவனே — என்ற எண்ணம் மேலோங்கும்.

எல் என்ற தமிழ் சொல் சங்க இலக்கியத்தில் பல இடங்களிலும் கையாளப்படும் சொல் ஆகும். எல் என்றால் சூரியன், ஒளி, பெருமை, நாள், வெளிச்சம் என்று பல பொருள்கள் இருக்கின்றன. எல்லி என்பது இரவைக் குறிக்கும். வேறு சில எல் சொற்கள்:–

எல்லியறிவன் = சேவல்
எல்லிநாதன் = சந்திரன்
எல்லு = சூரியன்
எல்லிப் பகை = சூரியன்
எல் = நாள், பகல், சூரியன், பெருமை
எல்லவன் = சந்திரன், சூரியன்
எல்லம்மா = கிராம தேவதை

இதில் எல்லம்மா என்ற கிராம தேவதையும் எல் என்ற சூரியனும் இந்துக்கள் வழிபடும் தெய்வங்களாகும்.

வேதத்தில் ஆப்ரி சூக்தம் என்னும் பகுதி ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களிலும் இருக்கிறது. இதில் பாரதி, ஈலா/ இடா- சரஸ்வதி – என்று மூன்று பெண் தெய்வங்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஈலா என்பதும் ஈடா என்பதும் ஒன்றே. ல=ர=ட ஆகிய மூன்று எழுத்துக்களும் இடம் மாறும் என்பது மொழியியல் விதி. தமிழ் மொழியிலும் இதைக் காணலாம்.

பல்+ பொடி= பற்பொடி (ல=ர)
கள்+ குடியன் = கட்குடியன் (ள=ட)

((இது தெரியாத சில மொழியியல் “அறிஞர்கள்” — ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தவுடன் ‘ட’ என்னும் சப்தம் ‘ல’ என்று மென்மை யுற்றதாக உளறிக்கொட்டி கிளறி மூடியிருப்பதைக் கண்டு ரசிக்கலாம். இங்கு மட்டும் அல்ல. பசிபிக் தீவு மொழிகளிலும் இப்படி மாறி இருப்பதை என் முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். உலகில் தமிழ் மொழிக்கு மிக நெருங்கிய மொழி சம்ஸ்கிருதம் அல்லது சம்ஸ்கிருத மொழிக்கு மிக நெருங்கிய மொழி தமிழ் என்றும் சொல்லலாம். இரண்டும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள்!))

ரிக்வேதத்தில் வரும் ஈலா தேவி இன்றும் கூட குஜராத்தியர் தன் புதல்விகளுக்குச் சூட்டும் பெயர். புதன் என்னும் கிரகத்தின் மனைவி பெயரும் ஈலா. இவளே மொழிக்கும் பூமிக்கும் உரிய தேவதை என்று சாயனர் போன்ற பல பெரியோர் உரை பகரும். இந்த ஈலாவை பசுவுடன் தொடர்பு படுத்தும் வேதம். யாகங்களில் ஈலா வழிபடப்படுவதால் நெய் கையுடையாள், நெய்க் காலுடையாள் என்றும் போற்றப்படுகிறாள்.

இன்னொரு சுவையான விஷயம்—இளாவ்ருத என்ற பெயரில் பாபிலோனிய, அக்கடிய பண்பாட்டில் ஒரு கடவுள் இருக்கிறார். இவர் அனு என்னும் பெரிய கடவுளின் எடு பிடி.

இந்துக்களும் இளாவ்ரத என்ற பெயரில் ஜம்புத்வீபம் போல ஒரு பெரிய நிலப்பகுதி இருப்பதாகச் சொல்லுவர். அதன் மத்தியில்தான் மேரு ((சுமேரு)) – தங்க மேரு இருக்கிறது என்று புராணங்கள் வருணிக்கின்றன.

el-cannanite-god
Canaanite God El

மெசபொடோமியாவில் எல் – இலு – அல் — அல்லா
செமிட்டிக் இன மொழிகளில் ‘எல்’ என்பது கடவுள் என்ற பொருளில் வழங்குகிறது. அதை காளை மாட்டுடன் தொடர்பு படுத்துவர். வலிமைக்கும் மதிப்புக்கும் பெயர் எடுத்த காளையை ரிக் வேதம், இந்திரனுடன் ஒப்பிடும். சிந்து சமவெளி முத்திரைகளிலும் அதிகம் காணப்படும் விலங்கு இது.

எல் என்ற சொல் இஸ்ரேல் என்ற நாட்டின் பெயரிலும் அராபிய மொழி அல்லா (கடவுள்) என்ற பெயரிலும் வருகின்றன. எபிரேய மொழிப் பெயர்களில் ‘எல்’ சப்தம் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

பைபிளில் 230 முறை எல் பயன் படுத்தப்படுகிறது. சிரியா பகுதி உகாரிதிக் நூல்களில் 500க்கு மேலான இடங்களில் வருகின்றது. இவைகளில் பாதி இடங்களில் எல் என்ற பெயரில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடவுளைக் குறிக்கும் சொல்லாக வரும்.

கானான் பகுதி மக்கள் “எல்” என்னும் கடவுளை வழங்கினர்.

Budhadeva
Budha (planet mercury) and Ila

இதிலிருந்து அறிவது என்ன?
மானுடர் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள் — நம்முடைய மூதாதையர்கள் இந்தப் பூமியின் ஏதோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு காலத்தில் வசித்தபோது வனங்கிய கடவுளர் காலப்போக்கில் புதுப்புது உருவங்களையும் பெயர்களையும் பெற்றனர். அதன் எச்ச சொச்சங்களையே மேலே கண்டோம்.

அல்லாவும் ஈலாவும் ஒன்றே! எல்லும் அல்லும் எல்லம்மாவும் ஒன்றே!

“ஒன்றாகக் காண்பதே காட்சி” – அவ்வையாரின் வாக்கு!!!