இடி ஓசையை மிஞ்சும் புகழ் ஓசை! (Post No.3358)

Written by London Swaminathan

 

Date: 16 November 2016

 

Time uploaded in London: 4-51 am

 

Post No.3358

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

நாலடியாரில் ஒரு நல்ல பாடல்.

 

முரசொலி பெரிதா, இடி ஓசை பெரிதா, புகழோசை பெரிதா என்று ஒப்பிடுகிறார் ஒருபுலவர்.

 

நாலடியார் என்பது 18 கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. சமண முனிவர்களால் பாடப்பட்ட பாடல்கள் இதில் அடக்கம். திருக்குறள் போலவே நீதிநெறியை இயம்பும் பாடல்கள்.

 

கடிப்பிடு கண்முரசங்  காதத்தோர் கேட்பர்

இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்

அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்

கொடுத்தாரெனப்படுஞ் சொல்

 

பொருள்:-

குறுந்தடியால் அடிக்கப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரை கேட்கலாம். மேகம் இடித்து எழுப்பும் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரை கேட்கலாம். இவர் ஏழைகளுக்குக் கொடுத்து உதவினார் என்று சான்றோர் சொல்லும் சொல் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் ஆகிய மூன்று உலகக்ங்களிலும் கேட்கும்.

 

(காதம் என்பது ஏழரை மைல், யோசனை என்பது 30 மைல் என்று ஒரு கணக்கு உண்டு. யோசனை என்பது எட்டு மைல் என்று சொல்வோரும் உண்டு.)

 

ஈரேழு பதினான்கு உலகங்களையும் சுருக்கமாக மூவுலகம் என்றும் சொ ல்லுவர். மேலுலகம் நடு உலகம் கீழ் உலகம் என்ற பொருளில் இப்படிக் கூறுவதும் அல்லது கிருதகம், அகிருதகம், கிருதகாகிருதகம் என்ற மூன்று வகை என்போரும் உளர்.

 

கிருதகம் என்றால் செய்யப்பட்ட உலகங்கள் அதாவது பூமி, பாதாளம் முதலியவை. அகிருதகம் என்றால் செய்யப்படாதவை. அவை தபோலோகம் சத்தியலோகம் முதலானவை. கிருதகாகிருதகம் என்றால் செய்யப்பட்டதும் செய்யப்பபடாததுமாயுள்ள உலகங்கள். அதவது சொர்கம் முதலியவை.

 

இந்திரன் கோவில் முரசொலி

 

முரசொலி என்றவுடன் புறநானூற்றூப் பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. ஆய் அண்டிரன் இறந்தவுடன் அவன் கொடைத் தன்மையைக் கருதி அவனை,  இந்திரன் முரசு அறைந்து வரவேற்றானாம். இதைச் சொல்லுபவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவார்.

 

 

திண்தேர் இரவலர்க்கு ஈத்த, தண்தார்,

அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி

வச்சிரத்தடக்கை நெடியோன் கோயிலுள்

போர்ப்புறு முரசம் கறங்க

ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே (புறம் 241)

 

வச்சிரத்தடக்கை நெடியோன் = இந்திரன்.

 

பொருள்:-

பெரிய, வலிய தேர்களை வறியவர்களுக்கு வழங்கியவன்; குளிர்ந்த மாலையை உடையவன்; ஆய் வள்ளல் வருகின்றான் என, இந்திரன் கோவிலில் முரசம் முழங்குவதால், வானத்திலும் இடியொலியாகிய பேரொலியும் எழுகின்றதே.

 

-subham–