இடும்பாசுரன் காவடியாகத் தூக்கி வந்த மலைகள்! (Post No.5458)

Written by S NAGARAJAN

Date: 23 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-35 AM (British Summer Time)

 

Post No. 5458

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

இடும்பாசுரன் காவடியாகத் தூக்கி வந்த மலைகள்!

 

ச.நாகராஜன்

 

சூரபன்மனின் குரு இடும்பாசுரன். சூரபன்மனுக்கு அஸ்திர சஸ்திர வித்தைகளைக் கற்றுக் கொடுத்து வந்தவன் அவன். முருகபிரான் அசுரர்களை அழித்த பின் இடும்பாசுரனுக்கு நல்லறிவு வந்தது.

உடனடியாகத் தன் மனைவியோடு பொதியமலை வந்தான். அங்கிருந்த முனிவர் குழாத்துடன் வசித்து வந்தான். அங்கே அகத்தியப் பெருமான் இருந்ததைக் கண்டு அவரிடம் அவன் அடைக்கலம் புகுந்தான்.

அகத்தியர் அவனிடம் வடக்கே சென்று, அங்கே கேதாரத்தில் பூர்ச்சவனத்தில் உள்ள சிவ, சக்தி ஆகிய இரு மலைகளைக் கொண்டு வந்தால் அவனுக்கு போகம், முக்தி இரண்டும் கிடைக்கும் என்று கூறி அருளினார்.

அகத்தியர் உபதேசித்த திருவுருவத்தைத் தியானம் செய்து கொண்டே இடும்பாசுரன் சிவ, சக்தி ஆகிய இரு மலைகளையும் தோள் சுமையாக, காவடியாகத் தூக்கி வந்தான்.

வழியில் வில் அம்பு ஏந்தி முருகப் பிரான் காவலனைப் போல் இருந்து இடும்பாசுரனை எதிர்த்தார்.

வழி தெரியாமல் இடும்பன் திருவாவினன் குடியை (பழனியை) அடைந்தான். பசி, தாகம் இரண்டும் அவனை வருத்த தன் தோளில் இருந்த மலைகளைக் கீழே இறக்கி வைத்தான்.

 

பசி தாகம் நீங்கிய பின்னர் மலைகளை மீண்டும் தூக்கினான்.

ஆனால் மலைகள் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. சந்தேகம் கொண்ட இடும்பன் மலைகளின் மீது ஏறிப் பார்த்தான். தண்டம் தாங்கிய இளைஞன் ஒருவன் அங்கே இருப்பதை  அவன் கண்டான். அவன், இடும்பனை நோக்கி, “அசுரனே, இந்த மலைகளை இங்கேயே விட்டுச் செல்” என்றான்.

கோபம் கொண்ட இடும்பன் குமாரவேளின் மேல் பாய, நடந்த சண்டையில் இடும்பன் மாய்ந்தான்.

இதை அறிந்த இடும்பி குமரவேளைத் துதித்து அருள் வேண்டினாள்.

முருக கிருபையால் இடும்பன் உயிர் பிழைத்தான். முருகனைத் துதித்தான். தனக்குக் குற்றேவல் செய்து வருமாறு இடும்பனை முருகன் பணித்தார்.

இதையெல்லாம் அறிந்த அகத்திய முனிவர் இடும்பனை நோக்கி, “நீ முருகப்பிரானுக்கு குற்றேவல் செய்து வந்தாயானால், முக்தியை அடைவாய்’ என்று கூறினார்.

அப்படிப்பட்ட சிவ சக்தி மலைகள் இருக்கும் இடம் கொங்கு மண்டலம்.

இந்த வரலாற்றை உள்ளடக்கியுள்ள கொங்கு மண்டல சதகத்தின் 23ஆம் பாடலை கீழே காணலாம்:

 

அலைகொண்ட பாற்கடற் சற்ப சயனத் தரியயனுந்

தலைகொண் டிரைஞ்சும் பதாம்புயத் தாருக்குச் சற்குருவாய்

நிலைகொண் டிருக்குஞ்செவ் வேளுக் கிடும்பன்மு னீண்டசிவ

மலைகொண்டு வந்ததும் வைகாவூர் சூழ்கொங்கு மண்டலமே

 

இப்பாடலில் திரண்ட பொருள் :-

திருமாலும் அயனும் வணங்கும் பரமசிவனுக்குச் சற்குருவான திருவாவினன்குடி முருகப்பிரானுக்கு இடும்பன், சிவமலை கொண்டு வைத்ததும் கொங்கு மண்டலம் என்பதாம். (பழனிக்கு திருவாவினன்குடி, வைகாவூர் என்ற பெயர்களும் உண்டு)

இந்த வரலாற்றைப் பழனிப் புராணமும் கீழ்க்கண்ட பாடல் மூலம் எடுத்துரைக்கிறது :

“அன்னதுணை மால்வரைக ளன்பினனி காலின்

மன்னிடு மிடும்பன்மணிநீல மொருதட்டும்

தன்னிகரில் மாமணியொர் தட்டினு நிறைத்து

நன்னரி னிறுக்குமொரு நாயகனை நிகர்த்தான்”

 

பழனியில் இடும்பனுக்குத் தனிக் கோவில் உள்ளது.

–subham–