Article: written by S NAGARAJAN
Post No.2218
Date: 6 October 2015
Time uploaded in London: 10-06 am
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
வாழ்வியல் அங்கம்
போப்பின் பிஸ்ஸா (பீட்ஸா)!
((தமிழ்நாட்டில் ‘பிஸ்ஸா’ என்று எழுதுவதன் சரியான இதாலிய மொழி உச்சரிப்பு பீட்ஸா (peetza); English Spelling Pizza)
ச.நாகராஜன்
போப்புக்கு, இதாலி நாட்டில் நேபிள்ஸ் நகரத்தில, ஒரு அன்பர், பிட்ஸா அளித்தார்.
கையில் லண்டனிலிருந்து வெளி வரும் டைம்ஸ் இருந்தது. 5-9-2015 தேதியிட்ட இதழ்! சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்த வேளையில் மனைவி முன்னே வரப் பின்னால் பதுங்கியவாறே எனது புத்திரர்கள்!
ஆஹா! வழக்கமான விஷயத்திற்கு வந்து விட்டார்களோ! இப்படிப்பட்ட வேளைகளில் நான் எப்படி நடந்து கொள்வேன் என்று தெரிந்ததால் பாதுகாப்புடன் அம்மாவைக் கேடயமாக வைத்து வருகிறார்கள்!
“என்ன?” – நான்
“ஒண்ணுமில்லை. லேசா உடம்பு சரியில்லை. அதுனாலே வெளியிலேர்ந்து..”
“வெளியிலேர்ந்து..” – கொஞ்சம் குரலில் கடுமை தொனிக்க – நான்
“ பிஸ்ஸாவை (Pizza) ஆர்டர் பண்ணி வாங்கலாமான்னு..?!”
நான் மௌனமாக இருந்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். ஏனெனில் இதற்குள் கூரை விழுமளவு ஒரு கூச்சல் போட்டிருப்பேன்.
“எத்தனை பிஸ்ஸா?’ – இது அவர்களுக்கு ஆச்சரியமான ஒரு திருப்பம்.
அவசரம் அவசரமாக தைரியமாக முன்னே வந்த பையன்கள்,” ஒண்ணு போதும். உங்களுக்கோ பிடிக்காது. நாங்கள் மூணு பேரும் ஒண்ணையே எடுத்துக்கறோம். ஆர்டர் பண்ணவா?”
“நாலா ஆர்டர் பண்ணு. எனக்கும் சேர்த்துத் தான்!”
‘ஹோ’ வென்ற கூச்சலுடன் பையன்கள் அலற, மனைவியோ எனக்கு ‘நட்டு’ கழண்டு விட்டதோ என்ற பாவனையில் பார்த்தாள்.
ஒரு வேளை ஏமாற்று வித்தையோ என்ற அவளது சந்தேகப் பார்வை எனக்குப் புரிந்தது.
“வேண்டாம் வேண்டாம் ஆர்டர் பண்ண வேண்டாம்” – எனது குரலால் பையன்கள் சுருங்க மனைவியோ அப்பாடா, அது தானே பார்த்தேன், வேதாளம் எங்காவது முருங்கை மரம் ஏறாமல் இருக்குமா’ என்று பார்வையால் பேசினாள்.
“கிட்ட தானே இருக்கு. ராஜஸ்தானுக்கே போய் சாப்பிட்டு வந்துடலாம். அங்க போனா நைட் டின்னரை முடிச்சுடலாமே!” ராஜஸ்தான் ஹோட்டல் பெங்களூரில் பிரசித்தி பெற்ற ஒன்று. பிஸ்ஸா அங்கு ஸ்பெஷல் ஐட்டம்!
ஆயிரம் வாட்ஸ் பல்ப் – பையன்களின் முகம் பளிச்.
எனக்கு என்னவோ ஆகி விட்டது என்று தீர்மானித்த மனைவியிடம் ஃபைவ் மினிட்ஸ் டைம், கிளம்புங்கள் என்றேன்.
*

A handout photograph made available by the L’Osservatore Romano – Press Office showing Pope Francis receiving a gift of a special pizza during his weekly general audience in Saint Peter’s Square, Vatican City, 11 March 2015. -ANSA
வாசகர்களுக்கு ஒரு வார்த்தை! எப்போதுமே அவர்களை மறுத்துப் பேசும் நான் ஏன் மனம் மாறினேன் என்ற இரகசியத்தை உங்களிடம் மட்டும் சொல்லி விடுகிறேன். மனைவியிடமும், பையன்களிடமும் போட்டுக் கொடுத்து விடாதீர்கள்!
*
எப்போதாவது வெளியே வருவேன் என்று முன்பு வாக்குக் கொடுத்தபடியே போப்பாண்டவர் வாடிகன் வாசஸ்தலத்தை விட்டு வெளியே வந்தே விட்டார்! யாருக்கும் தெரியாமல், யாரிடமும் சொல்லாமல் ரோமில் உள்ள கண்ணாடிக் கடைக்காரரிடம் அவரே வந்து விட்டார். வேறொன்றும் இல்லை, தன் மூக்குக் கண்ணாடியைச் சரி பண்ணிக் கொள்ளத் தான்!!
கண்ணாடி நிபுணரான, அலெஸ்ஸாண்ட்ரோ ஸ்பிஜியா (Alessandro Spiezia), வாடிகன் சென்று குறித்த நேரத்தில் போப்பாண்டவரைப் பார்த்துக் கண்ணாடியைத் தரலாம் என்று பரபரப்பாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர் முன்னால் ரோமிலுள்ள சென்ட்ரல் ஸ்டோரில், போப்போண்டவரே நேரில் நின்ற போது பிரமித்து விக்கித்து விட்டார்.
“எனக்கு புது ஃப்ரேம் வேண்டாம்! இதே ஃப்ரேமில் லென்ஸ்களை மட்டும் மாற்றிக் கொடுத்தால் போதும்” என்றார் போப்பாண்டவர்.
அவசரம் அவசரமாக லென்ஸ்களை மாற்றிய அலெஸ்ஸாண்ட்ரோ பெருமிதம் பொங்க மூக்குக்கண்ணாடியை போப்பாண்டவரிடம் கொடுத்தார்.
அதற்கான கட்டணம் எதையும் அவர் வாங்கத் தயாரில்லை.
ஆனால் போப்போ, ‘இதற்கு எவ்வளவு ஆச்சு? நான் தந்து விடுகிறேன்” என்றார்.
40 நிமிடங்கள் ஆயிற்று கடையில் – கண் டெஸ்ட், லென்ஸ் மாற்றுதல் என்று எல்லாம் முடிய! கடையின் வெளியே பிரம்மாண்டமான கூட்டம், அவரைத் தரிசிக்க!
புன்முறுவலுடன் வெளியே வந்த போப்பாண்டவர் தன்னுடைய ஃபோர்ட் ஃபோகஸ் காரில் ஏறி வாடிகனுக்குத் திரும்பினார். அவருக்கு பிரம்மாண்டமான பெரிய கார்கள் எல்லாம் பிடிக்காது! அவர் காருக்குப் பின்னால் இன்னொரு காரில் வாடிகன் போலீஸ் படை சென்றது.
போப் சொன்னாராம் – ஒரு நாளைக்கு வெளியே செல்ல விரும்புகிறேன், யாருக்கும் சொல்லாமல், யாருக்கும் தெரியாமல், ஒரு பிஸ்ஸா (Pizza) சாப்பிட விரும்புகிறேன், அதற்குத் தான்!”
*
இப்போது சொல்லுங்கள் என் மனமாற்றம் சரி தானே! பெரிய போப்பாண்டவருக்கே பிஸ்ஸா ஆசை இருக்கும் போது என் மனைவி, குழந்தைகளுக்கு இருக்கக் கூடாதா, என்ன! பெங்களூரில் ராஜஸ்தான் ஹோட்டல் பிஸ்ஸா போல உண்டோ என்று அனைவருமே சொல்லும் போது அவர்கள் ஆசைப்படுவது, தப்பா, ஸார்!
அது தான் மனம் மாறி பிஸ்ஸா சாப்பிட நானும் கிளம்பி விட்டேன்!
லண்டன் டைம்ஸ் ஸார்! போப்பாண்டவர் பற்றிய செய்தி ஸார்!! 5-9-15 தேதியிட்ட இதழ்!
போகும் போது காஞ்சி பரமாசார்யாள் பல வருட காலம் மிக மிகக் கொஞ்சம் அளவே பொறி மட்டும் சாப்பிட்ட விஷயம் நினைவுக்கு வந்தது.
மனித மனம் என்றால் அப்படித்தான்! பல விஷயங்களில் மாறுதல் ஏற்படுகிறது. பல விஷயங்கள் நினைவுக்கு வருகிறது!
*
You must be logged in to post a comment.