
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9133
Date uploaded in London – –12 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜனவரி 12 1863 ஸ்வாமி விவேகானந்தர் அவதரித்தார்.
இன்று ஜனவரி 12. அவரது நினைவைப் போற்றி அவரை வணங்கித் துதிப்போமாக!
ஸ்வாமி விவேகானந்தர் : ‘நான் இந்தியாவின் திரண்ட வடிவமே’!
ச.நாகராஜன்
ஸ்வாமி விவேகானந்தர் ஒரு முறை கூறினார் இப்படி : தான் ஒரு ‘Condensed India’ என்று! (தான் இந்தியாவின் திரண்ட வடிவம் என்று)
உண்மை தான்! அவரது நினைவெல்லாம் இந்தியாவின் சிறப்பையும் வளத்தையும் பற்றி மட்டுமே இருந்தது.
இந்தியாவைப் பற்றியும் அதன் வளமான எதிர்காலத்தையும் பற்றி அவர் பலரிடமும் கூறியுள்ளார்.
அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்:
தனது சீடர்களிடம் இந்தியாவின் பண்டைய புகழோங்கிய காலத்தைப் பற்றி கூறுவது அவரது வழக்கம். ஒரு முறை அவர் இந்தியாவின் பழம் பெருமைகளைக் கூறிவிட்டு, “ஆனால் எதிர்காலத்தில் இந்தியா இதை விட அதிகப் புகழைப் பெறும்” என்றார். தொடர்ந்து அவர், “நான் சொல்வதை நம்புங்கள், இன்னும் நானூறு ஐந்நூறு ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கப் போகிறது என்ற காட்சியை நான் கண்டேன்” என்றார்.
இன்னொரு முறை இந்தியாவில் என்னென்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி, தனது வருங்கால உரைக்கும் பண்பின் மூலமாக அவர் கூறினார் இப்படி:
“இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் இந்தியா சுதந்திரம் பெற்று விடும். சுதந்திரம் எதிர்பாராத விதத்தில் வரும். இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் ஒரு பெரிய மஹாயுத்தம் வரும். மேலை நாடுகள் தனது உலோகாயதப் போக்கைக் கைவிடவில்லை எனில் இன்னொரு மஹாயுத்தம் வருவதைத் தடுக்க முடியாது.”
இந்தியா பற்றி அவர் கூறினார் : “இந்தியா, சுதந்திரம் அடைந்த பிறகு மேலை நாடுகள் போல உலோகாயதத்தைக் கைக்கொள்ளும். (India, when independent, will embrace the materialism of the West and attain material prosperity to such an extent that it will surpass n past records in that field”). அது கடந்த கால வளத்தை எல்லாம் மிஞ்சி இருக்கும்”.
இத்துடன் அவர் மேலும் கூறியது ;” அமெரிக்கா போன்ற நாடுகள் உலோகாயத வளத்தின் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இது போன்ற லௌகீக வளத்தினால் நிலையான சாந்தியைப் பெற முடியாது என்பதை அறிந்து கொண்டு ஆன்மீகத்தில் அதிகமாக நாட்டத்தைக் கொள்ளும்”.
இன்னொரு முறை அவர் பேசும் போது கூறினார் : “பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப் போன பின் சீனா இந்தியாவை வெற்றி கொள்ளும் ஒரு அபாயம் நேரிடும்.”
இவை ஒவ்வொன்றாக நடந்து வருவதை நாம் பார்க்கிறோம். வளமான நாடாக இந்தியா ஆவதும், இந்தியாவின் ஆன்மீக சக்தியை அமெரிக்கா போன்ற நாடுகள் நாடத் துவங்குவதும் இப்போது ஆரம்பித்திருக்கிறது.
இந்தியாவின் ஏழை எளிய ஜனங்களைப் பற்றி அவர் கவலைப்படாத நாளே கிடையாது.
ஜோஸபைன் மக்லியாட் என்ற சிஷ்யை அவரிடம் ஒரு முறை, “ஸ்வாமிஜி, உங்களுக்கு நான் எந்த விதத்தில் உதவ முடியும்” என்று கேட்டார்.
ஸ்வாமிஜி உடனே, “லவ் இந்தியா – இந்தியாவை நேசி – (Love India) என்று பதில் அளித்தார்.
சகோதரி நிவேதிதை ஸ்வாமிஜியின் அடிப்படையான இந்த உண்மை அன்பைப் புரிந்து கொண்டு தான், இந்தியாவின் எழுச்சிக்காக வெகுவாகப் பாடுபட்டார்.
ரவீந்திரநாத் தாகூரிடம் ரோமெய்ன் ரோலந்து இந்தியாவைப் பற்றி எப்படிப் புரிந்து கொள்வது என்று கேட்ட போது, அவர், “இந்தியாவைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் ஸ்வாமி விவேகானந்தரைப் படியுங்க்ள்” என்றார். (Read Swami Vivekananda, if you want to know India.”)
வேதாந்தத்தைப் பற்றி வெகு ஆவலுடன் விவாதிக்க வந்த ஒரு பண்டிதரிடம் ஸ்வாமிஜி, “பண்டிதரே! முதலில் பசியால் வாடி உணவுக்காக ஏங்கி அழும் உங்கள் நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கானோரை முதலில் பார்த்து அவர்கள் பசிப்பிணியைத் தீர்க்க முயலுங்கள். அதன் பின்னர் என்னிடம் வாருங்கள். வேதாந்தம் பற்றி நிறையப் பேசுவோம்” என்றார்.
இப்படி ஏராளமான நிகழ்ச்சிகள் இன்னும் உண்டு. இந்தியாவைப் பற்றி நன்கு அறிய வேண்டுமானால் அந்த மஹா புருஷரைப் படிக்க வேண்டும் – கவி ரவீந்திரநாத் தாகூர் சொன்னது போல!
வாழ்க ஸ்வாமிஜி! வளர்க அவர் புகழ்; பின்பற்றுவோம் அவர் போதனைகளை!

tags– விவேகானந்தர், இந்தியா