உபநிஷத அற்புதங்கள்– Part 4; எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்
எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1003; தேதி:– 26th April 2014.
32. “உபநிஷத் காலத்தில் புவியியல் அறிவு” என்று பூகோள விஷயங்கள் பற்றி B G தமஸ்கர் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் அவர் 250 உபநிஷத்துகள் இருப்பதாகவும் தான் 134 புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த ஆய்வை நடத்தியிருப்பதாகவும் சொல்லி 134 உபநிஷத்துகளின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்.
33.பூமியின் இரண்டு பகுதிகளும் ரிஷிகளுக்குத் தெரியும் என்பதை சாந்தோக்கிய உபநிஷத் (2-2-3) மூலம் காட்டுகிறார். பிரபஞ்சம் தோன்றியதும் அதே உபநிஷத்தில் இருக்கிறது (5-6-1; 6-8-7)
34. நிலம், நீர் ஆகியன எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பிருஹத் ஆரண்யக உபநிஷத் (3-3-2) சொல்கிறது.
35.வலம் வருதல் பற்றியும் பி.ஆ.உ.-வில்(4-2-4) வருகிறது கடிகார முள் சுற்றுவதில் இருந்து கோவில் சுற்றுவது வரை எல்லாம் வலமாகவே இருக்கும். இது இந்துக்களின் கண்டுபிடிப்பாகத் தான் இருக்க வேண்டும். கண்ணகி சிலையை பிரதிஷ்டை செய்த செங்குட்டுவன் அச்சிலையை மும்முறை வலம் வந்து வணங்கியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
36.வடமொழியிலும் தமிழிலும் பருவத்தை ஆறு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறோம். இது வேத காலத்தில் துவங்கியது தைத்ரீய சம்ஹிதையில் இதை முதல் முதலில் (4-3-2; 5-6-3; 7-6-19) படிக்கிறோம். பாரதம் முழுதும் ஒரே நாகரீகம், பண்பாடு இருந்ததற்கு இதுவும் ஒரு சான்று. மஹாகவி காளிதாசன் ஆறு பருவங்கள் பற்றி ருது சம்ஹாரம் என்ற ஒரு கவிதை நூலே எழுதிவிட்டார்.
தமிழர்கள் கண்டுபிடிப்பு
37. புற நானூற்றிலும் ஏனைய சங்க இலக்கிய நூல்களிலும் வெள்ளி கிரகத்துக்கும் மழைக்கும் உள்ள தொடர்பு பற்றி நிறைய பாடல்கள் இருக்கின்றன. இன்னும் விஞ்ஞானிகள் இதுபற்றி எதுவும் கண்டு பிடிக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன என்ன கண்டுபிடிப்புகள் வரும் என்று நான் ஏற்கனவே இரண்டு கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். அதில் வெள்ளி கிரகம்—மழை பற்றிய கண்டுபிடிப்பும் ஒன்று. தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் உள்ள இந்தக் கருத்து மைத்ரீ உபநிஷத்தில் இருக்கிறது (7-4)
38.ஆதி காலத்தில் மார்கழி மாதத்தில் ஆண்டு துவங்கியது. இதனால்தான் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுகிறான். பகவத் கீதையில் கிருஷ்ணன் இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தான் என்ன என்னவாக இருக்கிறேன் என்று கூறுவதை வைத்து கண்ணதாசன் ஒரு திரைப்பட பாடலே எழுதிவிட்டார்:- “காலங்களில் அவள் வசந்தம், கலைகளில் அவள் ஓவியம்”– என்ற பாடல் பலருக்கும் தெரிந்திருக்கும் நிற்க.
ஆண்டு துவக்கம், பிற்காலத்தில் வசந்த கலத்துக்கு மாற்றப்பட்டது.. அதாவது மார்ச் மாதம்தான் முதல் மாதம். ஜனவரி அல்ல. இதனால்தான் செப்டம்பர் (சப்த=ஏழு), அஷ்டோபர் (அஷ்ட=எட்டு), நவம்பர் (நவ=ஒன்பது), தசம்பர் (தச= பத்து) என்று ஆங்கில மாதங்களுக்கு சம்ஸ்கிருத எண்களை பயன்படுதுகிறோம். மார்ச் முதல் மாதம் என்றால்தான் இது சரியாக, 7, 8, 9, 10 ஆவது மாதங்களாக வரும்.
தைத்ரீய பிராமணத்தில் (1-12; 6-7; 3-10-4-1; 6-5-3) வசந்த காலம்தான் முதல் மாதம் என்று இருக்கிறது. வேதங்கள் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக இருப்பதால் ஒரு காலத்தில் மார்கழி முதலாவது இருந்திருக்க வேண்டும். இதுகுறித்து சுதந்திரப் போராட்ட வீரரும் பேரறிஞருமான பால கங்காதர திலகர் விரிவான நூல் எழுதி இருக்கிறார்.
39. எங்கெங்கோ தோன்றும் நதிகள் எல்லாம் இறுதியில் கடலில் சங்கமித்து தன் நாமத்தை இழந்து கடல் நீர் என்று பெயர் பெறும் உவமை= ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்= நிறைய வடமொழி நூல்களில் பயன்படுத்தப்படுகிறது. பிராமணர்கள் ஒரு நாளில் மூன்று பொழுதுகளில் செய்யும் சந்தியாவந்தனத்திலும் இதைக் கூறுவர். இது முண்டகோபநிஷத் (3-2-8) என்னும் பழைய உபநிஷத்திலேயே வருகிறது. இந்துக்களுக்கு கடலும் நதியும் “தண்ணீர் பட்டபாடு: என்று சொல்ல முடியும். கடல்கடந்து வணிகம் செய்த மக்கள் இந்த உவமையைப் பயன்படுத்துவதில் வியப்பே இல்லை. மதத்திலும் கூட புவியியல் உண்மைகளைப் புகுத்தும் மதிநுட்பம் உயையோர் பாரத நாட்டு மக்கள்.!!
40.தாமரை: உபநிஷத்தில் தாமரைக்கு எட்டு பெயர்கள் வருகின்றன. பிற்கால நிகண்டுகளில் இன்னும் அதிகமான சொற்கள் வருகின்றன. இது தெரிந்துதான் பாரதீய ஜனதா கட்சி இதை சின்னமாகத் தேர்ந்தெடுத்தார்களோ என்னவோ!
41. தானிய வகைகளில் எள், அரிசி, பார்லி, கடுகு முதலியன மிகவும் பழைய , பெரிய உபநிஷத்தான பிருஹத் ஆரண்யக. உபநிஷத்திலேயே வருகிறது. ஏற்கனவே சிந்து சமவெளி அகழ்வாரய்சியில் வெட்டி எடுக்கப்பட்ட எள் வேதங்களிலும் பிராமணர்களின் சடங்குகளிலும் (திவசம், தர்ப்பணம்) பயன்படுத்தப்படுவது பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி இருக்கிறேன்.
42. இன்னொரு விநோதம் என்னவென்றால் மூன்று உபநிஷத்துகள் பறவைகளின் பெயரில் இருப்பதாகும்: கருட உ., ஹம்ச உ., சுகரஹஸ்ய உ., ஆகியன கழுகு, அன்னம், கிளி ஆகியவற்றின் பெயரில் உள்ளன. உலகில் முதல் முதலில் மேகத்தை தூது விட்டு புத்தகம் (மேகதூதம்) எழுதியவன் காளிதாசன். உலகில் முதல் முதலில் காலங்களின் பிரிவுகளை (அறுபொழுது) வைத்து நூல் எழுதியவன் (ருதுசம்ஹாரம்) காளிதாசன். இதற்கெல்லாம் அவனுக்கு உதவியது உபநிஷத்துகள்தான்!! பறவைகளையும், காற்றையும் தூதுவிடுவது வேத,உபநிஷத ,இதிஹாசங்களிலேயே வந்துவிட்டது.
43. உபநிஷத்துகள் என்பவை தத்துவம், இறையுணர்வு பற்றிய நூல்கள். ஆனால் அதில் கூட தங்கம் (சாந்தோக்யம் 3-19; 5-10-9; 8-3-2; 6-24-1) பற்றியும், வெள்ளி (சாந்தோ. 3-19-1) பற்றியும் இரும்பு, காரீயம், வெள்ளீயம் பற்றியும் குறிப்புகள் வருகின்றன.
44. வெளிநாட்டு “அறிஞர்கள்” (? ! ? ! ? ! ) சங்க இலக்கிய நூல்களிலும் சம்ஸ்கிருத வேத இதிஹாச, புராணங்களிலும் இல்லாத ஆரிய—திராவிட இனவெறியைப் புகுத்தி இந்திய வரலாற்றில் விஷம் கலந்ததை மகாத்மா காந்தி, ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மகரிஷி அரவிந்தர், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஆகியோரின் கண்டனம் செய்தது பற்றி ஆறு, ஏழு கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்.
அப்படியானால் நம்மவர்கள் எல்லோரையும் எப்படிப் பிரித்தார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? புற நானூற்றின் முதல் பாடலிலேயே 18 கணம் பற்றிய செய்தி வருகிறது. பாரியின் மகள்களை கபிலன் என்ற பிராமணப் புலவன் ஒவ்வொரு மன்னனிடமாக அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கெஞ்சும் புற நானூற்றுப்பாடல்களில் ஒரு பாட்டின் உரையில் 18 கணத்தினரை அகத்தியர் அழைத்துவந்த செய்தியும் வருகிறது.
மைத்ரீ உபநிஷத் இந்த 18 கணங்களீல் அசுர, கந்தர்வ, யக்ஷ, ராக்ஷச, பூத பிசாச வர்க்கத்தினரைக் குறிப்பிடுகிறது. உபநிஷத்துகள் தத்துவ நூல்கள் என்பதால் இதற்கு மேல் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. இதில் என்ன பெரிய அதிசயம் என்றால் இவர்கள் எல்லோரையும் ஒரு தாய் வயிற்று புதல்வர்கள் என்றே புராண, இதிஹாசக் கதைகள் கூறுகின்றன. வெள்ளைக்காரன் பிரித்தது போல போண்டா மூக்கு- கருப்புத் தோல் திராவிடன் மத்தியதரைக் கடல் வாசி, என்றும் கூரிய மூக்கு- வெள்ளைத் தோல் ஆரியன் மத்திய ஆசியப் பேர்வழி என்றெல்லாமும் உபநிஷத்துகள் பேசவில்லை! கிருஷ்ணன் கருப்பன், அவனுடைய அண்ணன் பலராமன் வெள்ளையன்!! திரவுபதி கருப்பாயி, அவள் புருஷன் அர்ஜுனன் ஒரு வெள்ளையத் தேவன்!!
45. ரிக்வேதத்தில் புருஷசூக்தத்தில் முதல் முதலாக வரும் நான்கு ஜாதிகள், சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு இடத்தில் (5-10-7) வருகிறது
தொடரும்……………………………………. (பகுதி–5-ல் மிகுதியைக் காண்க)
Please read Part 1, 2, 3 of this article posted in the past few days.
contact swami_48 @ Yahoo.com
You must be logged in to post a comment.