Written by London swaminathan
Date: 27 December 2016
Time uploaded in London:- 6-55 AM
Post No.3488
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
காளிதாசன் இயற்றிய குமார சம்பவம், ரகுவம்சம், மேக தூதம் ஆகிய மூன்று படைப்புகளிலுள்ள காட்டிற்குள் நடக்கும் இன்னிசை நிகழ்ச்சி பற்றி கபிலரும் கம்பனும் பாடியுள்ளனர். மிருச்சகடிகம் (மண்ணியல் சிறுதேர்) இயற்றிய சூத்ரகரும் காட்டில் நடந்த ORCHESTRA ஆர்க்கெஸ்ட்ரா பற்றி, தனது நாடகத்தில் சொல்கிறார். இமயம் முதல் குமரி வரை இப்படி ஒரே அணுகு முறை இருப்பது பாரதீய சிந்தனை ஒன்றே என்று காட்டுவதோடு ஆரிய-திராவிட வாதங்களுக்கும் வேட்டு வைக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் அதிலும் 15 லட்சம் சதுர மைல் பரப்பில், அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு மரபைக் காண முடியாது
கபிலன் வருணனை
காட்டில் இன்னிசை நிகழ்ச்சி
காட்டில் மூங்கில் மரங்கள் வளர்ந்துள்ளன. அதில் உள்ள ஓட்டைகள் வழியாகக் காற்று வீசும்போது புல்லாங்குழல் ஓசை எழுகிறது. மழை மேகங்கள் கர்ஜிக்கின்றன. இந்த இடி முழக்கம் மத்தளம் வாசிப்பது போல உள்ளது. மேகம் கர்ஜித்தால் மயில்கள் தோகை விரித்து ஆடத்தானே செய்யும்? இது இன்னிசை நிகழ்ச்சியுடன் ஒரு நடனக்காரி ஆடுவது போல இருக்கிறது. சில நேரங்களில் குயில் பாடினாலும் தவளைகள் குரல் கொடுத்தாலும் அதெல்லாம் வாய்ப் பாட்டாகக் கேட்கின்றன நம் கவிஞர்களுக்கு! பாட்டிலும் ஆட்டத்திலும் ஊறிப்போன பாரத நாட்டில் இப்படி ஒரே சிந்தனை எழுவதில் வியப்பில்லை. ஆகவே ஒருவரைப் பார்த்து ஒருவர் ‘காப்பி’ அடித்தனர் என்று சொல்லத் தேவை இல்லை.
சம்ஸ்கிருதத்தில் மிருச்ச கடிகம் நாடகம் எழுதிய சூத்ரகனும் சங்க காலத்தில் வடநாட்டில் வாழ்ந்த புலவன் ஆவான். அவனும் இதுபோல இயற்கையை வருணித்துள்ளான் (மிருச்சகடிகம் (5-52)
முதலில் கபிலன் பாடலைப் பார்ப்போம்:
வண்டு துளைத்த மூங்கில் வழியே காற்று வீசியவுடன் புல்லாங்குழல் இசை எழுந்தது.
இதே நேரத்தில் அருவியிலிருந்து விழும் தண்ணீரின் ஓசை மத்தளம் வாசிப்பது போல இருந்தது.
மயில்கள் ஒரு பக்கம் ஆடின. மான்கள் ஒலி எழுப்பின.
வண்டுகளின் ரீங்காரம் யாழ் ஓசை போலவும், மான்களின் குரல் வாத்ய இசை போலவும் இருந்தது.
இவ்வளவும் நடைபெறும் போது இதைப் பார்க்க ரசிகர் கூட்டம் வேண்டுமல்லவா? குரங்குகள் கூட்டமாக உட்கார்ந்து இதைப் பார்த்து ரசித்தனவாம். இது கபிலன் பாடிய அகநானூற்றுப் பாடலில் காணப்படும் நல்லதொரு காட்சி!
ஆடமை குயின்ற அவிர்துளை மருங்கில்
கோடை யவ்வளி குழலிசையாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதை குரலாகக்
கணக்கலை இருக்கும் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டியாழாக
இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத் தியலியாடும் மயில்
நனவுப்புகு விறலியில் தோன்றும் நாடன்
………………………………
–அகநானூறு 82 (கபிலன்)
சங்க இலக்கியத்தில் மேலும் சில் பாடல்களில் இது போன்ற இயற்கையின் புல்லாங்குழல் இன்னிசை நிகழ்ச்சிகளைக் காணலாம்:-
அகம் 225 (எ.ம.இளங்கீரனார்); அகம் 219 (கயமனார்)
கம்பன் கவிநயம்
கம்பனும் கிட்கிந்தா காண்டத்தில் கார்காலப் படலத்தில் இது போன்ற ஒரு காட்சியினை வருணிக்கிறான்
கிளைத்துளை மழலை வண்டு கின்னர நிகர்த்த மின்னும்
முளிக்குரல் மேகம் வள்வார்த் தூரியந் துவைப்ப போன்ற
வளைக்கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின் மாடே
விளக்கினம் ஒத்தகாண்போர் விழியொத்த விளையின் மென்பூ
பொருள்:-
வண்டுகளின் ரீங்காரம் கின்னரம் என்னும் யாழ் இசை போல இருந்தது.
மின்னலுடன் இடிக்கும் மேகம் மத்தளம் வாசிப்பது போல இருந்தது.
மயில்கள் வளையல் அணிந் தாடும் மங்கையர் போலத் தோன்றின.
செங்காந்தள் மலர்கள் நடன அரங்கில் விளக்குகளை ஏற்றி வைத்தது போல இருந்தன.
கருவிள மலர்கள் , காண்போரின் கருவிழிகள் போல விளங்கின.
இது கம்பனின் கற்பனை.
காளிதாசன் கற்பனை ஓவியம்
இவர்களுக்கெல்லாம் முன்னதாக தனது மூன்று நூல்களில் இதே கருத்தை இயம்பியுள்ளான் காளிதாசன் :-
மேக தூதத்தில் (பாடல் 58) அவன் சொல்வதாவது:மேகமே! காற்றினால் நிரப்பப்படும் மூங்கில்கள் இனிமையாக ஒலிக்கும்.
கின்னரப் பெண்கள் ஜோடியாக நின்று சிவனின் முப்புரம் எரித்த நிகழ்ச்சியைப் பாடுவர்.
மேகமாகிய உன்னுடைய கர்ஜனை குகைகளில் எதிரொலித்து மத்தளம் போலக் கேட்கும்.
அங்கு நிரந்தரமாக வாசம் செய்யும் சிவபெருமானுக்கு இவை சுருதி, பாட்டு, தாளம் ஆகிய மூன்றையும் கொடுக்கும் இன்னிசை நிகழ்ச்சியாக அமையும்.
ரகுவம்சத்திலும் இதையே சொல்லுவான்:
திலீபன் காட்டு வழியில் செல்லுகையில், மூங்கில் மரத் துவாரங்களில் காற்று புகுந்து புல்லாங்குழல் இசையை எழுப்பின; இதே காற்று புதர்களில் பட்டு எழுப்பிய ஓசை திலீபனின் புகழைப் பாடுவதாக இருந்தது (ரகு 2-12)
நாலாவது சர்கத்திலும் (4-53) குமாரசம்பவத்திலும் (1-8) இதே மூங்கில் மர ஓசை, மேக கர்ஜனை ஆகியன வருகின்றன.
சம்ஸ்கிருதத்தில் இதே கருத்து வேறு பல நூல்களிலும் இருப்பதால் இமயம் முதல் குமரி வரையுள்ள ஒரு கற்பனை இது என்பது விளங்கும்.
–Subahm–