நோய் தீரும், இன்பம் சேரும், வினை தேயும்- சம்பந்தர் (Post No.9394)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9394

Date uploaded in London – –  18 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சம்பந்தரின் ‘ஆணை நமதே’ பாடல்கள் பற்றிய கட்டுரை ஏற்கனவே வெளி வந்துள்ளது. சம்பந்தர் தரும் ‘நலம்’ பற்றிய கட்டுரை வெளியான தேதி : 7-3-2021 கட்டுரை எண் :9349. இப்போது சம்பந்தர் கூறும் ‘திண்ணம்’ இதோ:-

நோய் தீரும், இன்பம் சேரும், வினை தேயும், சிவகதி சேரும், திண்ணம், திண்ணமே – சம்பந்தர் அருள் வாக்கு!

ச.நாகராஜன்

1

அருளாளர் திருஞானசம்பந்தர் முருகப் பெருமானின் திரு அவதாரமே தான். அத்தகைய மேலாம் நிலையில் அவர் பக்தர்களுக்கு ஆணையிட்டுப் பல நலங்களைத் தருகிறார். நல்லனவெல்லாம் சேரும் என்கிறார். இன்னும் பல பாடல்களில் பெரும் நலன்கள் சேருவது திண்ணம் என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.

திண்ணம் என்றால் உறுதி, நிச்சயம் என்று பொருள். ‘திண்ணம் என்ற சொல்லை நான்கு இடங்களிலும் ‘திண்ணமா என்ற சொல்லை ஒரு இடத்திலும் ‘திண்ணமே என்று ஏகாரத்துடன் அறுதியிட்டு அவர் உறுதி கூறுவதை ஆறு இடங்களிலும் பார்க்கிறோம்.

நோய் தீரும் – ஒரு இடத்தில் கூறுகிறார்.

இன்பம் சேரும் – ஒரு இடத்தில் கூறுகிறார்.

வினை தேயும் – ஒரு இடத்தில் கூறுகிறார்.

சிவ கதி சேரும் – ஆறு இடங்களில் கூறுகிறார்

இன்னும் இரு இடங்களில் திண்ணம் என்பதை அவர் பயன்படுத்துகிறார்.

2

நோய் தீரும்! (ஒரு பாடல்)

தலம்: கோயில் அதாவது சிதம்பரம்

தேவாரத் தல எண் : 1

இறைவன் நாமம்: திருமூல நாயகர் இறைவி நாமம் : உமையம்மை

கூர் வாள் அரக்கன்தன் வலியை குறைவித்துச்

சீராலே மல்கு சிற்றம்பலம் மேய

நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே

சிதம்பர நாதனை நித்தம் ஏத்தித் தொழுவாரின் தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.

3

இன்பம் சேரும்! (ஒரு பாடல்)

தலம்: மதுரை

தேவாரத் தல எண் : 193

இறைவன் நாமம்:  சொக்கலிங்கம் (சுந்தரேஸ்வரர்) இறைவி நாமம் : மீனாக்ஷி

அண்ணல் ஆலவாய் நண்ணினான்தனை

எண்ணியே தொழ திண்ணம் இன்பமே

மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரரை எண்ணித் தொழ இன்பம் சேரும்.

4

வினை தேயும்! (ஒரு பாடல்)

தலம்: திருச்சிக்கல்

தேவாரத் தல எண் : 146

இறைவன் நாமம்: நவநீதநாதர் (வெண்ணெய்ப் பிரான்) இறைவி நாமம் : வேல் நெடுங்கண்ணி

கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில்

செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்

வெந்த வெண் நீற்று அண்ணல் வெண்ணெய்ப்பிரான் விரை ஆர் கழல் சிந்தைசெய்வார் வினை ஆயின தேய்வது திண்ணமே

5

சிவகதி சேரும்! (ஆறு பாடல்கள்)

தலம்: வடகுரங்காடுதுறை இன்றைய பெயர் : ஆடுதுறைப் பெருமாள் கோயில்

தேவாரத் தல எண் : 49

இறைவன் நாமம்: அழகு சடைமுடி நாதர் (குலைவணங்குநாதர்) இறைவி நாமம் : அழகு சடைமுடியாள்

முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி

எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை

மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்தம் மேல்

சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே

கட்டு அமண் தேரரும் கடுக்கள் தின் கழுக்களும் கசிவு ஒன்று இல்லாப் பிட்டர்தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி

எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறைச்

சிட்டனார் அடி தொழச் சிவகதி பெறுவது திண்ணம் ஆமே

 தலம்: திருவேற்காடு

தேவாரத் தல எண் : 259

இறைவன் நாமம்: வேற்காட்டு நாதர் இறைவி நாமம் : வேற்கண்ணி

மூரல் வெண் மதி சூடும் முடி உடை

வீரன் மேவிய வேற்காடு

வாரமாய் வழிபாடு நினைந்தவர்

சேர்வர் செய் கழல் திண்ணமே

தலம்: திருதிலதைப்பதி (திலதர்ப்பணபுரி)

தேவாரத் தல எண் : 121

இறைவன் நாமம்: முத்த நாதர் (மதி முத்தர்) இறைவி நாமம் : பொற்கொடி நாயகி

மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர் மேல்

கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்

பந்தன் மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய்

சிந்தைசெய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே

தலம் : திருப்பூந்தராய்

புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர்ப்

பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை

பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர்

சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே

தலம் : திருவிசயமங்கை

தேவாரத் தல எண் : 47

இறைவன் நாமம் : விசயநாதர் இறைவி நாமம் : மங்கை நாயகி

விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை

நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்

பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்

புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே

6

இரு பாடல்கள்

திருச்சிரபுரம்

கண்ணு மூன்றும் உடையது அன்றிக் கையினில் வெண் மழுவும்

பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே

எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியர் ஆய்த

திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே

தலம் : திருவையாறு

தேவாரத் தல எண் : 51

இறைவன் நாமம் : ஐயாறப்பர், பஞ்சநதேசுவரர்,செம்பொற் சோதி இறைவி பெயர் : அறம் வளர்த்த நாயகி

மருள் உடை மனத்து வன் சமணர்கள் மாசு அறா

இருள் உடை இணை துவர் போர்வையினார்களும்

தெருள் உடை மனத்தவர் தேறுமின் திண்ணமா

அருள் உடை அடிகள்தம் அம் தண் ஐயாறே

7

குறிப்பிட்ட ஆலயங்களில் குறிப்பிட்ட பயனை அவர் கூறியருளுவது பொருள் பொதிந்த ஒன்று. அன்பர்கள் அந்தந்த ஆலய இறைவன் திருநாமத்தைக் கூறி அந்தந்த பதிகங்களை ஓதினால் குறிப்பிட்ட பயனை அடைவது திண்ணம், திண்ணமே!

***

tags — நோய் தீரும், இன்பம் சேரும், சம்பந்தர்,