WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,385
Date uploaded in London – – 28 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வந்தன.
18-11-2021 காலை ஒலிபரப்பான எட்டாவது உரை கீழே தரப்படுகிறது.
உத்வேகமூட்டும் ஆர்வலராக மாறலாமே!
ச.நாகராஜன்
நாளுக்கு நாள் சுற்றுப்புறச்சூழலைக் காக்க வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் ஏற்பட்டு வருவதை உங்கள் அனுபவத்தில் நீங்களே உணரலாம். ஆட்டோவில் ஏறி உட்காரும் ஒரு நபர் அங்கு அதை ஓட்டுநர் அருகில் இருக்கும் இளஞ் செடிக் கன்றுகளைக் கண்டு அது பற்றிக் கேட்டால் இப்படிச் செடிகளை எடுத்துக் கொண்டு மரக்கன்றுகளை நடுவது தனது பழக்கம் என்பார். இயற்கை வளத்தின் மீது ஆர்வம் கொண்ட அந்த ஓட்டுநர் போன்றோர் உலகெங்கும் ஆயிரக் கணக்கில் பெருகி வருகின்றனர்.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்து வரும் இவர்களைத் தேடிப் பிடித்து பத்திரிகைகளும் ஊடகங்களும் செய்திகளை வெளியிடுகின்றன; பரிசுகளும் பாராட்டுகளும் அவர்களைத் தேடி வருகின்றன. சில நல்ல ஆர்வலர்களைப் பற்றி அறிந்து கொண்டு நாமும் உத்வேகமூட்டும் ஆர்வலராக மாறலாமே!
சில எடுத்துக் காட்டுகள் இதோ: மலைகா வாஸ் (Malaika Vaz) என்ற பெண்மணிக்கு வயது 23 தான்.இந்த இளம் பெண்மணி ஒரு இயற்கை ஆர்வலர். திரைப்படம் தயாரிப்பவர். காட்டில் வாழும் உயிரினங்களைப் பற்றி ஆராய்பவர். தனது ஆய்வின் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக காட்டு வாழ் உயிரினங்கள் கொல்லப்படுவதையும் கடத்தப் படுவதையும் ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டு அவற்றைத் தடுத்து இவர் நிறுத்தினார்; பாராட்டையும் பெற்றார். ON THE BRINK என்ற இவரது தொலைக்காட்சித் தொடர் அனைவராலும் பாராட்டப்படும் ஒன்று.
டான்ஜானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ (Kilimanjaro) மலையடிவாரத்தில் வசிக்கும் ஹான்ஸ் காஸ்மஸ் கொடேயா (HANS COSMAS NGOTEYA) வனவிலங்குகளின் பாதுகாப்பாளர். இந்த விலங்குகளைப் பற்றி, அவர் அனைவருக்கும் பல உண்மைகளைத் தெரிவிக்க, அந்தப் பகுதி வாழ் அனைவரும் விலங்குகள் மீது மிக்க அன்பு பாராட்டினர். அவரையும் நல்லெண்ணத் தூதுவராகக் கொண்டாட ஆரம்பித்தனர்.
பெர்டி கிரிகாரி (Bertie Gregory) என்ற 27 வயது இளைஞர் ஒரு புகைப்பட வல்லுநர்; திரைப்பட தயாரிப்பாளரும் கூட. மும்பைக்கு வந்த அவர் அங்கு சிறுத்தைகளைப் படம் பிடித்தார்; அண்டார்டிகாவில் பெங்குவின்களையும், வான்கூவரில் அபூர்வமான ஓநாய்களையும் படமாகப் பிடித்தார். அருகி வரும் வனவிலங்குகள் மீது ஆர்வம் பெருகி அவற்றைக் காக்கத் தொடங்கினார். அவருக்குப் பல பரிசுகளும் கிடைத்தன. தனது இந்தப் படங்கள் மூலம் மக்களிடையே வனவிலங்குகள் காக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வை ஊட்டி வருகிறார் அவர். இப்படி நூற்றுக் கணக்கானவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இணையதளத்தில் கிடைக்கும் தகவல்கள் நமக்கு உத்வேகம் ஊட்டுபவை. நாமும் இந்த சுற்றுப்புறச் சூழல் காக்கும் களத்தில் முன்களப் பணியாளராக இறங்கலாமே!
***
tags– இயற்கை ஆர்வலர், புகைப்பட வல்லுநர், பெர்டி கிரிகாரி, மலைகா வாஸ்