புலவர்கள் பல விதம்! (Post No.4210)

Written  by S.NAGARAJAN

 

Date: 14 September 2017

 

Time uploaded in London-5-01 am

 

Post No. 4210

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தனிப்பாடல்களில் புலவர்கள்

புலவர்கள் பல விதம்!

 

ச.நாகராஜன்

 

புலவர்கள் பல விதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்.

 

பாண்டிய மன்னன் ஒருவன் புலவர்களைப் பற்றிப் பாடியதாகப் பழம் பெரும் பாடல் ஒன்று உள்ளது.

 

போற்றினும் போற்றுவர்  பொருள்கொ டாவிடில்

தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை

மாற்றினு மாற்றுவர் வன்க ணாளர்கள்

கூற்றினும் பாவலர் கொடிய ராவரே

 

எமனை விட மோசமானவர்கள் புலவர்கள் என்று ஒரேயடியாக அடித்துச் சொல்லும் பாண்டிய மன்னன் அதற்கான காரணங்களையும் வரிசையாக அடுக்கி விட்டார்.

தூக்கி வைத்தால் ஒரேயடியாக இந்திரன் சந்திரன் என்று புகழ்வர்.

கையிலே காசு தரவில்லை எனில் கீழே போட்டு மிதித்துத் தாழ்த்தி விடுவர். சொன்ன சொற்களை நிலைமைக்குத் தகுந்த மாதிரி மாற்றினும் மாற்றுவர். இவர்களிட்ம் மாட்டிக் கொண்டால் ஒருவன் படும் பாடு – எமனே தேவலை!

 

இதைச் சோழ மன்னன் ஒருவன் பாடியதாகவும் பரம்ப்ரைக் கதை கூறும்.

 

இராமச் சந்திரக் கவிராயர் என்று ஒரு கவிஞர். அவரது அனுபவமோ இதற்கு நேர் எதிர்.

ஒரு கஞ்சனிடம் அவர் சென்று சேர்ந்தார். அவர் அனுபவத்தை ஒரு பாடலிலேயே கூறி விட்டார் இப்படி:-

 

கல்லாத ஒருவனை நான் கற்றா யென்றேன்

    காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்

பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்

   போர்முகத்தை யறியானைப் புலியே யென்றேன்

மல்லாரும் புயமென்றேன் சூம்பற் றோளை

     வழங்காத கையனை நான் வள்ள லேயென்றேன்

இல்லாது சொன்னேனுனக் கில்லை யென்றான்

      யானுமென்றன் குற்றத்தா லேகின் றேனே!

 

 

 

நான் கல்வி அறிவில்லாத ஒருவனைக் கல்விமானே என்று புகழ்ந்தேன். காட்டை வெட்டுகின்ற மறவனை நாட்டை ஆள்பவனே என்று புகழ்ந்தேன். பொல்லாதவன் ஒருவனை நல்லவனே என்றேன். யுத்தத்திற்கே செல்லாத ஒருவனை புலியே என்றேன். சுருங்கித் திகைந்த தோள்களை உடையவனை மற்போர் செய்வதற்கு உரிய தோள் என்றேன்.யாருக்கும் ஒன்றும் கொடாத கைகளை உடையவனை வள்ளலே என்றென்.

 

இவ்வாறு இல்லாத குணங்களைச் சொன்ன உனக்கு இல்லை என்றான் அவன்.

நானும் நான் செய்த பிழையால் பேசாமல் செல்கின்றேன்.

சரி தானே!

 

தத்துவப் பிரகாசர் என்று ஒரு புலவர்.

தன்னைப் பற்றி விரிவாக அவர் குறிப்பிடுகிறார் மூன்று பாடல்களில்.

நினைவு கவி சொல்வோமெனச் சொலிப் பலகவிதை

      நினைவினைத் திருடி வையோம்

நீடுலகின் மனிதரைப் பாடிலோ நாமென்று

       நீள்வசைகள் பாட வறியோம்

பினையிளைய நாவல ருடன்பங்கு பேசிப்பிர

     பந்தங்கள் பாடிக் கொடோம்

பேசுவது தேவார மேயலால் வாய்க்கெளிய

      பேய்க்கிரந் தங்கள்  பேசோம்

 

இனிமைதரு பூருவத் துக்குருக் களைமறந்

        தெங்கணுந் தீட்சை யேற்கோம்

இட்டவொரு பேர்மாற்றி மாதமொரு பேரிட்

  டிடப்பெறோ மிறுமாந் திரோம்

தனியிருந் தெம்மைப் புறங்கூறு வார்கணெஞ்

   சமுமுருகு கவிபா டுவோம்

சமணூல் களைப்பொரு ளெனக்கொளோந் திருஞான

    சம்பந்த ரடியர் நாமே

 

பாம்புகடி த்தாலதுவு நீக்க வல்லோம்

   பசாசறைந்தா னீறிட்டுப் பார்க்க வல்லோம்

வேம்புகசப் பறக்கறியு மாக்க வல்லோம்

    விற்ல்வேழத் ததிகமதந் தணிக்க வல்லோம்

சாம்பொழுது திடமாகப் பேச வல்லோம்

   தரணியின் மேற் கல்லாத தொன்று மில்லை

தீம்பரைநல்ல் வராக்கிக் குணமுண் டாக்குந்

       திறமதறி யாமனின்று திகைக்கின் றோமே   

 

தத்துவப் பிரகாசர் மிகத் தெளிவாகத் தன் இயற்கை இயல்புகளைக் கூறி விட்டார்.

திருஞான சம்பந்தரின் அடியாராகிய் அவர் தேவாரம் தவிர வேறு

பேய்க் கிரந்தங்களை ஓத மாட்டார். சமணரின் நூல்களைப் படிக்க மாட்டார். மனிதர்களைப் பாட மாட்டார். பல கவிதைகளை உடனடியாகப் பாடுவதாகக் கூறி நினைவில் வைத்திருக்கும் கவிதைகளைத் திருட்டுக் கவிதைகளாகக் கூற மாட்டார். ஊருக்கு ஒரு பெயர் வைத்து ஏமாற்ற மாட்டார்.

அவரின் திறமைகளோ எல்லையற்ற ஒன்று. பாம்பு கடித்தால் அந்த விஷத்தை இறக்க வல்லவர். பிசாசு பிடித்தால் அதைப் போக்க வல்லவர். வேம்பு போலக் கசப்பாக இருந்தாலும அதை நீக்கிச் சுவையான் கறி படைக்க வல்லவர். மதம் பிடித்த யானையைக் கூட அடக்க வல்லவர். இறக்கும் போது கூடத் திடமாக பயப்படாமல் பேச வல்லவர். அவர் கற்காத கலைகள் ஒன்றுமே இல்லை.

ஆனால் இப்படிப்பட்ட அறிவாளிக்கும் முடியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அதை அவரே ஒப்புக் கொள்கிறார்.

 

தீயவர்களை நல்லவராக்கி அவரை குணவான்களாக ஆக்கும் திறமை மட்டும் அவருக்கு இல்லை. அதனால் அவர் திகைக்கின்றார்.

 

புலவர்கள் பல விதம்.

எப்படியும் பாடும் புலவர்களைக் கண்டு பாண்டிய மன்னனுக்குப் பயம். எப்படிப் புகழ்ந்தாலும் மசியாத கஞ்சனைப் பாடி நொந்து போன கவிஞருக்கு அப்படிப்பட்டவர்களைக் கண்டால் பயம். எதையும் சாதிக்க வல்ல இன்னொரு கவிஞருக்கோ தீயவர்களைக் கண்டால் பயம். அவர்களை நல்லவராக்கும் திறம் மட்டும் அவருக்கு இல்லை!

 

 

அதாவது வல்லவன் யாராக இருந்தாலும் அவர்கள் தீமையே உருவாக இருப்பவரைத் திருத்தல் அரிது.

ஒவ்வொரு புலவரையும் பற்றி அறியும் போது சுவையான தகவல்கள் பல வருகின்றன.

அனைவரையும் படித்தால் நமக்குத் தான் ஆதாயம்!

 

 

ஆதாரம் : தனிச் செய்யுள் சிந்தாமணி மற்றும் தனிப்பாடல் திரட்டு ஆகிய நூல்கள்

 

(இவற்றில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளில் ஐந்தை மட்டும் மேலே பார்த்தோம்.)

***