நகை பிறக்கின்ற வாயன்,பொறி பிறக்கின்ற கண்ணன் ! (Post.9117)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9117

Date uploaded in London – –7 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நகை பிறக்கின்ற வாயன்,பொறி பிறக்கின்ற கண்ணன் !

கம்ப ராமாயணம் யுத்த கண்டத்தில் ராவணனின் தோற்றம் பற்றிய ஒரு பாடல் மிகவும் ரசித்துப் படிக்க வேண்டிய பாடல் . அதை  யாராவது வரைந்து ஓவியம் தீட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் . இருந்த போதிலும் நம் மனதில் அதை ஓவியமாக வரைந்து ரசிப்போம்.

இராவணன் களம் காண்படலத்தின் கடைசி பாடல் இது.

அரக்கர் படைகளை எல்லாம் இராம பிரானின் அம்புகள் அழித்ததை ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து கண்டான் . பின்னர் கீழே இறங்கி வந்தான்.

கோபத்தால் ‘ஹ ஹா  ஹா’ என்று சிரித்தான்.

நாக்கை வெளியே நீட்டி மீசையை நக்கிக் கொண்டான்.

கண்களில் தீப்பொறி பறந்தது.

மூக்கிலிருந்து சூடான கோபக்  காற்று அனல் கக்கியது .

நெஞ்சில் மேலும் குற்றம் செய்யும் எண்ணம் பிறந்தது.

தீக்கொழுந்து விட்டெரியும் சொற்கள் வாயி லிருந்து வந்தன

இந்தக் கோலத்தில்  அரசவைக்குச் சென்றான்

சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் முகத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பும் தீயைக் கக்கியது.

அப்படிச் சொல்லிவிட்டால் கம்பனுக்கும் நமக்கும் வித்தியாசமே இராது. இதையே கம்பன் எப்படிச் சொல்கிறான் என்று பாருங்கள்

நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய்நக்கப்

புகை பிறக்கின்ற மூக்கன் பொறி பிறக்கின்ற கண்ணன்

மிகை பிறக்கின்ற நெஞ்சன்  வெஞ்சினத் தீ  மேல் வீங்கி

சிகை பிறக்கின்ற சொல்லன்  அரசியலிருக்கை சேர்ந்தான்

–இராவணன் களம் காண் படலம், யுத்த காண்டம் , கம்ப ராமாயணம்

இப்படி ஒவ்வொரு பாடலையும் ரசித்துப் படித்தால் வாழ்நாள் முழுதும் ராமாயணம் படிக்கலாம்.  ஏன் என்றால், இரண்டாம் முறை படிக்கும் பொழுது புதிய பொருள் தோன்றும்!!!

–SUBHAM—

tags—நகை பிறக்கின்ற வாயன்,இராவணன்