

WRITTEN BY B.KANNAN, DELHI
Post No. 9876
Date uploaded in London –20 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 19-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!
பா.கண்ணன், புது தில்லி
“அன்னையின் உருவில் இறைவனைக் காண்போம்!”
சமீபத்தில் ஶ்ரீநாகராஜன் அவர்கள் ஒரு வலைப்பதிவில் “கடவுள் எங்கே?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் பதிவிட்டிருந்தார். அதில் அவர், கடலில் உப்பு பரவியிருப்பது போல, கடவுள் இந்தப் பிரபஞ்சம்
முழுவதும் நிரம்பி இருக்கிறான். எப்படி விதைக்குள் மரமானது ஒளிந்திருக்கிறதோ, அதே போல் ஒவ்வொருவரிடமும் பரமன் மறைந்திருக்கிறான் எனக் குறிப்பிடிருந்தார். அதைப் படித்த போது சிலஆண்டுகளுக்கு முன்பு கன்னிமேரா பொதுநூலகத்தில்
இ ருந்து படிக்க எடுத்து வந்த “YOUR SACRED SELF”என்ற நிர்வாகம்-மேலாண்மையைப் போதிப்பதுடன் ஆன்மிகப் புரிதலையும் விளக்கும் புத்தகம் தான் நினைவுக்கு வந்தது. அதைப் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.
டாக்டர் வேய்ன் வால்டர் டையர் (Dr. Wayne W. Dyer,1940-2015) ஓர் அமெரிக்க தத்துவ ஞானி, வேதாந்தி, சுய சிந்தனை, சுய முன்னேற் றத்தை ஊக்குவிக்கும் விரிவுரையாளர், வாழ்வில் வெற்றிபெறஉதவும் வழிமுறைகளைப் போதிப்பவர். அத்துவைத சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவர். லிங்காயத் சைவ மரபைச் சார்ந்த மராத்திய தத்துவ மேதை மாருதி ஷிவராம்பந்த் காம்லி எனும் பூர்வாஸ்ரமப் பெயர் கொண்ட ஸ்ரீநிசர்கதத்தா மகராஜைத் தன் ஆதர்ச ஆசானாக ஏற்றுக் கொண்டவர். ‘நீங்கள் இறைவனைப் போற்றி, அவருக்குச் சேவையாற்றுபவராக இருக்கலாம் அல்லது, தற்பெருமை, சுய நலத்துக்கு அடிமையாகி, அதன்பிணைக் கைதியாகவும் மாறி விடலாம். எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது!’ என்று மகராஜ் அடிக்கடி கூறுவார். தன் ஆசானின் அருளால் ஆன்மிக விஷயத்தில் ஈடுபாடு கொண்டு சில புத்தகங்களும் எழுதியுள்ளார்.‘நிதர்சன மாயாஜாலம்’ (REAL MAGIC), உயர்மட்ட இறையுணர்வு நிலையை விவரிக்கும் ‘உன் தூய உள்ளம்’ (YOUR SACRED SELF), ஆகிய அவரது இருபுத்தகங்களும் ஆன்மிக விஷயத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இரண்டாவதில், முன்னுரையில் அவர் கையாளும் ஓர் உருவகக் கதையின் மூலம், பக்த பிரகலாதனின் ‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்!’என்ற வாதமும், தாயின் கருப்பையில் இருந்தவாறே அபிமன்யு கற்றறிந்தப் போர்க்கள ஞானமும், பஞ்சபூதங்களில் உறைந்திருக்கும் இறைவனைப் பூடகமாக உணர்த்தும் தாயின் கருப்பையும் எவ்வளவு உண்மை என்பதை அறிய முடிகிறது! இதோ அதன் சுருக்கம்……
ஒரு தாயின் கருவில் முழுவளர்ச்சி அடைந்த இரட்டைச் சிசுக்கள்(IDENTICAL TWINS) இருந்தன.கூடிய விரைவில் பிரசவம் ஆகிவிடலாம் என்ற நிலை. அச்சமயம் அவையிரண்டும் தங்களுக்குள் ‘மானசீகமாக’ப் பேசிக்கொண்டன.
“நாம் பிறந்த பிறகு நமக்கு நடக்கப் போகும் விஷயங்களில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டது முதல் சிசு. எதிர்மறை சிந்தனை உடையது, போலும்! அதாவது நாத்திகவாத எண்ணம் கொண்டது!
“நிறையவே இருக்கு! ஏதாவது நிச்சயம் நடக்கும். அதை எதிர்கொள்ள வேண்டியத் தயார் நிலைக்கு நாம் இருக்கும் இச்சூழலே கொண்டுச் செல்லக் கூடும், அல்லவா?” என்றது இரண்டாவது சிசு. இது நேர்மறை (அதாவது ஆத்திகவாத)எண்ணம் கொண்டது, போலும்!
“அசடு, அசடு! பிறப்புக்குப் பின் வாழ்வு என்பதே கிடையாது. அப்படியே இருந்தாலும் அது எப்படிப்பட்டதாக இருக்கும்?”
“அவ்வளவாகத் தெரியாது! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இங்கிருப்பதை விட அங்கு ஒலியும், வெளிச்சமும் அதிகமிருக்கலாம். இதோ நம் கால்களால் நடக்கலாம், வாயினால் சாப்பிடலாம். வேறு ஏதாவது புலன்களால் ஆட்டுவிக்கப்படலாம். இப்போதே அதைத் தெரிந்துக் கொள்ள முடியாதே!”
“ஹோ,ஹோ! சுருண்டு, முடங்கிக் கிடக்கும் நாம் நடப்பதா, அடி முட்டாள்தனம்! வாயால் சாப்பிடுவதா, நல்ல வேடிக்கை, கேலிக்கூத்து! இந்தத் தொப்புள்கொடி தான் நமக்கு எல்லாவற் றையும் தருகிறதே? ஆனால் அது சிறியதாக இருப்பது தான் சங்கடம். பிறப்புக்குப் பின் அதால் என்ன உபயோகம் இருக்கப் போகிறது? உயிரில்லா நிலையே நிலவும் என்பதே உண்மை!”
“இல்லை,அப்பனே! என் மனதில் வேறு மாதிரி தோன்றுகிறது. அங்கு நிலைமையே வேறு மாதிரி இருக்கலாமே! இந்தத் தொப்புள்கொடிக்கே அவசியம் இல்லாமல் போகலாம், அல்லவா?”
“நிறுத்து, நிறுத்து! பிறப்புக்குப் பின் வாழ்வு உண்டென்றால், ஏன் யாரும் இங்குத் திரும்பி வரவேயில்லை? என்னைப் பொறுத்த வரை பிறப்பு என்பது உயிரின் முடிவு. பிறப்புக்குப் பின்னால் நாம் உணரப் போவது ஒரே அந்தகாரம், ஆழ்ந்த மௌனம் மற்றும் ஒருவித மயக்க நிலையே நிறைந்திருக்கும். வேறு வழி ஒன்றும் புலப்படாது!”
“எனக்கும் புரியவில்லைதான்! ஆனால் நம்மைப் பராமரிக்கப் போகும் ஒரு புனித நபரைச் சந்திப்போம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை! அந்த நபர் நம்மைப் பேணி, பாதுகாப்பார் என்பதும் உறுதி!”
“அப்படி ஒருவர் இருப்பாரா, என்ன, எனக்கு நம்பிக்கை இல்லை!”
“நிச்சயம் இருப்பார். ஏன், நம்மை வெளியுலகத்துக்கு அறிமுகப் படுத்தப் போகும் இந்த ‘அறை’ யின் சொந்தக்காரராகவும், ‘அன்னை’ யாகவும் ஒரு பொருப்புள்ள ‘அம்மா’ வாக இருக்கலாமே!”
“உன் பேச்சைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. ‘அம்மா’, ‘அன்னை’ என்று சொல்கிறாயே, அப்படி ஒருவள் உண்டா? நீ நம்புகிறாயா? அப்படி இருப்பாளேயானால் இப்போது அவள்எங்கே?”
“நம்மைச் சுற்றி அவள் வியாபித்து இருக்கிறாள். அவளுள் கட்டுண்டுக் கிடக்கிறோம். நம் ஒவ் வொரு அசைவும் அவள் விருப்பப்படியே நடக்கிறது. அவளுடைய ஓர் அங்கம் நாம்.அவளின்றி ஓர் அணுவும் அசையாது,அப்பனே!”
“சுத்த அபத்தம்! என்னால் அவளைப் பார்க்க முடியவில்லையே? ஆகையால், தருக்கப்படி ‘அன்னை’ என்ற அவள் இல்லவே, இல்லை என்பதே சரி!”
“நிதானமாக யோசித்துப் பார்! எந்த இடையூறுமின்றி மனதை ஒருமுனைப் படுத்தி, மோன நிலையில் தியானம் செய். அவள் உன்னைச் சுற்றி இருப்பதை உணருவாய். அங்கிருந்து எழும் இனம்புரியாத ஒலி உன் மனதில் பரவும். எங்கிருந்தோ அவள் அன்புடன் பேசுவதையும், பிறருடன் உரையாடுவதையும் உற்றுக் கேட்டுப் பரவசமடைவாய்!”
“………………………………………………….!”
“என்ன, பேச்சே எழும்பவில்லை? யோசிக்கிறாயா, யோசி, யோசி!” என்றது இரண்டாம் சிசு. முதல் சிசு மேலும் யோசிக்க ஆரம்பிக்கையில் பிரசவம் நேர ஆரம்பித்துவிட்டது….!
அன்பர்களே, நாமும் யோசித்துப் பார்ப்போம். அந்தத் தாய் நமக்கு அளித்துள்ளப் புகலிடம் கருப்பை (பூமி), மேற்கூறை வேய்ந்து (ஆகாயம்) பாதுகாப்பாக வைத்துள்ளாள், அவள் கொடுத்துள்ளத் தொப்புள்கொடியே நம் உயிர் மூச்சு ( வாயு ), நம்மைச் சுற்றி இருக்கும் சவ்வுத் திரவம் —பனிக்குடம்),(நீர்) சீரான வெப்பநிலையை ( அக்னி ) நமக்குத் தந்துக் காக்கிறது. இவையெல்லாமே அந்தப் பரம்பொருள், கருணையே வடிவான
அன்னை நம்மீது காட்டியுள்ள அருட்செயல், அளப்பறியக் கருணை. அப்படிப்பட்டவள் பிறப்புக்குப் பின்பும் நம்மை உணர்வுகளுக்கு அப்பாலிருந்துக் காத்தருளுவாள் என்பதில் சிறிதளவும் ஐயமேயில்லை! இன்னும் யோசிக்கிறீர்களா, யோசியுங்கள், விடாமல் யோசியுங்கள்! நீங்களே புரிந்துகொள்வீர்கள்!
அன்னை,பகவான்,இறைவன் என்ற பல்வேறு சொற்களுக்கு வேறு என்ன விளக்கம் வேண்டும்?!
நன்றி, வணக்கம்.
வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்!
tags- அன்னை, இறைவன்

You must be logged in to post a comment.