
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1281; தேதி: 11 செப்டம்பர் 2014
மகாவம்சம் என்றால் என்ன?
இது பாலி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் வரலாறு. இலங்கையின் வரலாறு என்பதைவிட இலங்கையில் புத்தமதம் பரவிய வரலாறு என்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இலங்கை என்னும் நாடு இராமாயண காலத்தில் இருந்தே வாழும் நாடு. இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயன் என்னும் மன்னன் இலங்கையில் வந்து இறங்கிய நாள் முதல் மஹாசேனன் (கி.மு. 543 முதல் கி.பி. 361 முடிய) என்ற மன்னனின் ஆட்சி முடியும் வரையுள்ள இலங்கையின் வரலாற்றை இன்னூல் இயம்புகிறது.
காளிதாசன் எழுதிய புகழ்பெற்ற ரகுவம்சம் என்னும் காவியம் சூரியவம்ச அரசர்களின் அருமை பெருமைகளைப் போற்றிப் பாடுகிறது. அதை மனதிற்கொண்டு மஹாவம்சம் என்று பெயரிட்டனர் போலும்.
அக்கால சோதிட, ஆரூட நம்பிக்கைகளைச் சுருக்கித் தருகிறேன்.
சங்க காலத் தமிழரின் ஜோதிட நம்பிக்கைகள், கிளி ஜோதிடம் பற்றி எல்லாம் ஏற்கனவே எழுதிவிட்டேன். மஹாவம்சத்தில் குறிப்பிடப்படும் ஆருடக்காரர்கள் எப்படி அதைச் சொன்னார்கள் என்று எழுதப்படவில்லை. குஷ்டரோகிகளும் குருடர்களும் கூட ஆரூடம் சொன்னதை அது எடுத்துரைக்கிறது. ஒருவேளை உள்ளுணர்வால் (இன் ட்யூஷன்) அல்லது சாமுத்ரிகா லட்சணத்தால் இப்படிச் சொல்லி இருக்கலாம். இந்தியாவில் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்துக்கூட மந்திரி ஆவாய், அரசன் ஆவாய் என்று சொன்ன சம்பவங்கள் உண்டு.

ஆரூடம் 1
பாண்டு அபயன் பட்டாபிஷேகம் என்பது பத்தாவது அத்தியாயத்தின் பெயர். அவனைக் கொல்ல பல சதிகள் நடந்ததால் ஒளிந்துவாழ வேண்டிய நிலை. அப்போது பண்டுலா என்னும் பணக்கார, வேதம் கற்ற பிராமணன் அவனைச் சந்தித்து நீ தான் பாண்டு அபயனா என்று கேட்கிறார். அவன் ஆம் என்றவுடன் நீ அரசன் ஆகப் போகிறாய், எழுபது ஆண்டுகள் அரசாட்சி புரிவாய். இப்போதே ராஜ தர்மங்களைக் கற்றுக் கொள் என்கிறார். அவனும் அவருடைய மகன் சந்தனும் அவருக்கு அரசாளும் கலையைக் கற்றுத் தருகின்றனர்.
இதில் வேறு சில உண்மைகளையும் உய்த்தறியலாம். 2600 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் ஒரு கிராமத்தில்கூட வேதம் கற்ற பிராமணன் இருந்தான். அவன் பணக்காரன். அவன் முக்காலமும் உணர வல்லவன். அவன் மாற்றானுக்கு பிரதிபலனை எதிர்பார்க்காமல் நன்மை செய்தான். அவனும் அவன் மகனும் போர்க்கலையிலும் ராஜ தந்திரத்திலும் வல்லவர்கள்.
அர்த்தசாஸ்திரம் என்னும் உலகப் புகழ்பெற்ற நூலை எழுதிய சாணக்கியன் என்ற பிராமணன நாம் எல்லோரும் அறிவோம்
மஹாபாரத காலத்தில் துரோணன் என்னும் பிராமணன் தான் பாண்டவ ,கௌரவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார் எனபது நமக்குத் தெரிந்த விஷயமே. இலங்கையில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கற்றறிந்த பிரமணன் இருந்தான் என்றால் தமிழ்நாடு என்ன சளைத்ததா?
ஒல்காப்புகழ் தொல்காப்பியனுக்கே, நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் தான் ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தார். அவருக்கு முன்னால் அகத்தியன் என்னும் வேதியன் என்பான் தமிழுக்கு இலக்கணம் வகுத்தான்.
1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான் (பாரதியார் பாடல்)
ஆரூடம் 2
மகாவிகாரை என்னும் 15-ஆவது அத்தியாயத்தில் மன்னனிடம் தேரர் கூறுகிறார்: உன்னுடைய சகோதரன் மகாநாமனுடைய மைந்தன் யத்தாலாயகதீசன் இனிமேல் அரசன் ஆவான். அவன் மகன் கோத அபயன், அவன் மகன் காகவனதீசன், அவன் மகன் அபயன் ஆகியோர் அடுத்தடுத்து அரசன் ஆவர். அபயன் என்பவன் துட்டகாமனி என்னும் பெயருடன் புகழ்பெற்று விளங்குவான் என்பது ஆருடம்.
புண்ய புருஷர்கள், சாது சந்யாசிகள் ஆகியோர், எதிர்காலத்தை உணர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை இந்தியாவில் உண்டு. மக்கள் அவர்கள் சொல்வதை நம்பினர் என்பதை மஹாவம்ச சரிதம் காட்டுகிறது. இது போன்ற விஷயங்கள் பவிஷ்ய புராணத்திலும் இருக்கிறது.

Congress leaders Sonia Gandhi and Rahul Gandhi doing Yagas as instructed by their astrologers. Individually they won the elections, but their party failed miserably!
ஆரூடம் 3
12 அரசர்கள் என்ற 35-ஆவது அத்தியாயத்தில் வசபன் என்ற லம்பகர்ணன் அரசன் ஆவான் என்று ஒரு ஆருடம் இருந்தது. அவனைப் பார்த்த ஒரு குஷ்டரோகியும் கூட இதை அவனிடம் சொல்கிறான். முன்னரே வசபன் என்ற பெயருள்ளவன் அரசன் ஆவான் என்று ஜோதிடர்கள் சொன்னதால் வசபன் பெயர்கொண்ட எல்லா வாலிபர்களியும் தீர்த்துக் கட்டினான் மன்னன். அப்படியும் ஆருடப் படியே ஒரு வசபன் அரசன் ஆனான். உடனே தனது ஆயுட்காலம் பற்றி ஜோதிடரைக் கலந்தாலோசித்தான். அவன் இவனுக்கு 12 வருடமே ஆயுள் என்றவுடன் புத்தமத தேரர்களைச் சந்தித்து ஆயுளை நீட்டிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிகிறான். அதன்படி தான தருமங்களைச் செய்கிறான்.
ஆரூடம் 4
13 அரசர்கள் என்ற 36-ஆவது அத்தியாயத்தில் ஒரு அந்தகன் ஆரூடம் சொன்ன அதிசய சம்பவம் வருகிறது. சங்கதீசன், சங்கபோதி, கோதகாபயன் என்ற மூன்று லம்பகர்ணர்கள் நடந்துவரும் காலடி சப்தத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒரு கண்பார்வையற்ற ஆள், மூன்று மன்னர்களை இந்த மண் தாங்கிநிற்கிறது என்றான். அவர்கள் மூவரும் விஜயகுமரன் என்ற அரசனிடம் சேவகம் செய்து பின்னர் அவனைக் கொன்றுவிடுகின்றனர். சங்கதீசன் என்ற லம்பகர்ணனை மற்ற இருவரும் சேர்ந்து முடி சூட்டுகின்றனர்.
இந்த சம்பவங்கள் அக்காலத்தில் ஜோதிடர்கள் இருந்ததையும் அவர்களை மன்னர்கள் அல்லது எதிர்கால மன்னர்கள் கலந்தாலோசித்தனர் என்பதையும் காட்டுகின்றன.
அடுத்தாற்போல “மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள்”, “மகாவம்சத்தில் படுகொலைகள்”, “மகாவம்சத்தில் தமிழ் வரலாற்றுச் செய்திகள்” என்ற ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரும்.
( கட்டுரைக்கு உதவிய மூல நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சென்னை, 1962)
You must be logged in to post a comment.