கம்பனின் சிருங்கார ரஸக் காட்சிகள்!இளைஞனின் புலம்பல்! (Post.10,646)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,646
Date uploaded in London – – 10 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்பகங்களுக்கேற்ற மார்பு இல்லையே : இளைஞனின் புலம்பல்!
ச.நாகராஜன்

கம்பன் தரும் காதல் சித்திரங்களில் ஆறு
இளைஞர்களைச் சுட்டிக் காட்டுகிறான். அதில் ஒரு இளைஞன் இவன்.
 
ஒரு அழகி! அவள், தாமரை போன்ற தன் இரு பாதங்கள் நோகும் படி மெல்ல அடி எடுத்து வைத்து ஒரு இளைஞனைப் பின் தொடர்கிறாள்.
அந்த இளைஞனும் பேரழகி ஒருத்தி தன்னைப் பின் தொடர்வதைக் கவனிக்கிறான்.
அந்த இளைஞன், ஆஹா, என்று சந்தோஷம் தானே பட வேண்டும்!
வலிய ஒரு அழகி தன்னைப் பின் தொடர்வதை அவன் விரும்பத் தானே வேண்டும்!
அவன் விரும்பவில்லை.
காரணம் என்ன?
பாடலைப் பார்ப்போம். விடை தெரியும்.
 
துணைத்த தாமரை நோவத் தொடர்ந்து, அடர்
கணைக் கருங் கணினாளை ஓர் காளை தான்,
‘பணைத்த வெம் முலைப் பாய் மத யானையை
அணைக்க, நங்கைக்கு, அகல் இடம் இல்’’ என்றான்
 
துணைத்த தாமரை நோவ – இரண்டு தாமரைப் பாதங்களும் நொகும் படி
தொடர்ந்து – பின் தொடர்ந்து வந்த
அடர் – தன்னை வருத்துகின்ற
கணை கரு கணினாளை – அம்பை நிகர்த்தும் கரும் கண்களை உடைய ஒருத்தியை
ஓர் காளை – ஒரு வாலிபன் பார்த்து
நங்கைக்கு – “இந்த அழகிக்கு
‘பணைத்த வெம் முலை – பருத்துப் பெரிதாக இருக்கும் விரும்பத்தக்க இவளின் மார்பகங்கள் எனும்
மதம் பாய் யானையை – மதநீர் பெருகப் பெற்ற யானையை
அணைக்க – முழுவதுமாக அணைத்து ஏந்தக் கூடிய அளவுக்கு
அகல் இடம் – விசாலமான அகன்ற மார்பு
இல் என்றான் – என்னிடத்தில் இல்லையே” என்றான்.
காரணம் புரிந்து விட்டது.
அவளது மார்பகங்களோ மிகப் பெரிது. இவன் மார்போ அதை ஒப்பிடும் போது அளவில் சிறிது.
எப்படி அணைக்க முடியும், முழுவதுமாக?
நொந்து போய்ப் புலம்புகிறான்.

இன்னொரு இளைஞனின் கதியைப் பாருங்கள்.

வார் குலா முலை அழகி ஒருத்தி – அதாவது கச்சை அணிந்த பெரிய மார்பகங்களைக் கொண்ட அழகி அவள்!

அவளை வைத்த கண் விடாமல் பார்க்கிறான் அந்த இளைஞன்.

அவள் நடக்க, இவன் நடக்க, அவளையே பார்த்து நடந்து கொண்டிருந்த இளைஞன் தான் செல்ல வேண்டிய வழியை விட்டுக் குருடன் நடந்தது போல நடந்து ஒரு வலிமையுள்ள பெரிய மத யானையின் மீது போய் முட்டினான்.

ஆவென்று அலறினான். மற்றவர்கள் சிரித்தார்கள் – நடந்தது என்ன என்று தெரிந்து கொண்டு.

கம்பன் காட்டும் கவிதைச் சித்திரத்தைக் காணலாம்:

வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது பிறங்கு முகத்தினான்
தேர்கிலான்,நெறி; அந்தரில் சென்று, ஒரு
மூரி மா மத யானையை முட்டினான்!

வார் குலாம் முலை – ஒரு அழகியின் கச்சை அணிந்த மார்பங்களின் மீது’
பேர்கிலாது வைத்த கண் வாங்கிட – வைத்த கண்களை எடுக்க முடியாமல் அதையே பார்த்துக் கொண்டு நடந்த
பிறங்கு முகத்தினான் – விளங்குகின்ற முகத்தை ஒரு இளைஞன்
நெறி தேர்கிலான் – தான் செல்ல வேண்டிய வழி தெரியாமல்
அந்தரில் சென்று – குருடனைப் போலச் சென்று
ஒரு மூரி மா மதம் யானையை – வலிமை கொண்ட ஒரு மத யானை மேல் சென்று
முட்டினான் – மோதினான்.

கண்களும் மனமும் இன்னொரு இடத்தில் நிலைத்திருந்தால் எதிரில் இருப்பது தெரியாது என்பது அரிய உண்மை.
அழகியால் அவன் பட்ட பாட்டைக் கொஞ்சம் கற்பனை கலந்து சிந்தித்துப் பாருங்கள்!
கம்பனின் சிருங்காரக் கவிதை கவிதையே தான்!


tags- கம்பன்,  சிருங்கார,   காட்சி, இளைஞன் ,புலம்பல்,