WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,538
Date uploaded in London – – 7 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்துக்கள் எவ்வளவு பெரிய மேதைகள் என்பதற்கு ஒரு குட்டிக்கதை உண்டு .
சதுரங்கம் எனப்படும் CHESS செஸ் விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே என்பதை உலகமே ஒப்புக்கொண்டுவிட்டது. இதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. ஒரு முனிவர், ஒரு அரசனிடம் சென்று இந்த அற்புதமான விளையாட்டைச் சொல்லிக் கொடுத்தார். நாள் தோறும் நாற்படைகளுடன் கதைக்கும் மன்னனுக்கு வியப்பிலும் வியப்பு! அன்பரே நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன் என்றான் மன்னன்.
முனிவர் சிரித்துக் கொண்டே , அப்படி ஒன்றும் அதிகம் வேண்டாம். இதோ நான் கற்பித்த செஸ் போர்டில் 64 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் ஒரு அரிசி, அடுத்தகட்டத்தில் 2, அடுத்த கட்டத்தில் 4 என்று இரட்டித்துக் கொண்டே போங்கள் ; 64 கட்டங்களில் எவ்வளவு அரிசி இருக்குமோ அது போதும் என்றார் முனிவர்.
பூ இவ்வளவுதானா ! இதோ உடனே தருகிறேன் என்றான் மன்னன்.
முனிவர் மீண்டும் சிரித்தார். 32 கட்டங்கள் தாண்டுவதற்கு முன்னர் அவன் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மூட்டைகளைக் கொண்டுவந்தாலும் போதாது என்பது பல நாட்களுக்குப் பிறகு புரிந்தது.
நீங்களும் 64 கட்டம் உள்ள ஒரு செஸ் போர்டில் முதல் கட்டத்தில் ஒரு பைசா காசு வையுங்கள். பின்னர், 2, 4, 8, 16 என்று அதிகரித்துக் கொண்டே போங்கள் . உலக மஹா பணக்காரர் ஆகி விடுவீர்கள் !
XXXX
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – PART 7
அதர்வண வேதம் (அ .வே.) பூமி சூக்தத்தில் உள்ள 63 மந்திரங்களில் 16 மந்திரங்களைக் கண்டோம். மேலும் காண்போம். இதோ வேத கால முனிவர்களின் அபார அறிவை விளக்கும் பகுதிகள் :–
மந்திரம் 17
பூமியைத் தருமமே தாங்கி நிற்கிறது; நாங்கள் அவள் மீது நடக்கிறோம்; அவள் எங்கள் மீது கருணை மழை பொழியட்டும் ; அவள் விளைச்சல் மிகுந்தவள் ; தாவரங்களின் ,மூலிகைகளின் தாய் ; அவள் உறுதியாக நிற்கிறாள்
இந்த அற்புதமான மந்திரம் நமக்கு அரிய பல செய்திகளைத் தருகிறது. இந்த உலகம் நிலை நிற்கக் காரணம் தனக்கென வாழாத மக்கள் இருப்பதுதான் என்றும் பழியைக் கண்டு அஞ்சும் மக்கள் இருப்பதால் தான் என்றும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூற்றில் பாடியது இந்த வேதக் கருத்துதான் . வேத கால புலவன் ஒரே சொல்லில் தர்மம், ருதம் என்று அடக்கிவிட்டான். தாவரங்களும் மூலிகைகளும் , விளைச்சலும் மிக்க பூமி என்பதைப் படிக்கையில் பசுமை மிக்க காடுகள் நிறைந்த, இயற்கை வனப்புமிக்க அழகிய பூமியைக் கவிஞன் நம் மனக் கண் முன் காட்டுகிறான்.
மந்திரம் 17
விஸ்வஸ்வம் மாத ரமோஷதீனாம் த்ருவாம் பூமிம் ப்ருதிவீம் தர்மணா த்ருதாம்
சிவாம் ஸ்யோனாமனு சரேம விஸ் வஹா –17
Xxx
மந்திரம் 18
பூமாதேவியே , நீ மஹத்தானவள்; உன்னுடைய வேகமும் , நடுக்கமும் குலுங்கலும் மஹத்தானது .. பலம் வாய்ந்த இந்திரன் உன்னைப் பிழையின்றி பாதுகாக்கிறான்.ஓ பூமியே , எங்களைத் தங்கம் போல ஜொலிக்கச் செய்வாயாகுக. எவரும் என்னை வெறுக்கக் கூடாது
பூமியின் நடுக்கம் என்னும் பூகம்பம் EARTHQUAKE குறித்து சங்கத் தமிழ் பாடல்களிலும் பிற சம்ஸ்க்ருத புஸ்தககங்களிலும் உள . ஆனால் பூமியின் ‘மஹான் வேகம்’ GREAT SPEED என்ற சொல் ஊன்றி ஆராய வேண்டியவிஷயம் .
சைன்டிபிக் அமெரிக்கன் SCIENTIFIC AMERICAN என்ற புகழ்பெற்ற அறிவியல் பத்திரிக்கை சொல்கிறது :–
பூமி அதன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் மணிக்கு 1000 மைல் .
பூமி, பிற கிரஹங்களைப் போலவே சூரியனையும் சுற்றுகிறது. அப்போது பூமியின் வேகம் மணிக்கு 67,000 மைல்.
சூரியன் எல்லா கிரஹங்களையும் துணைக்கிரஹங்களையும் இழுத்துக்கொண்டு பால்வெளி மண்டலத்தை வலம் வருகிறது. அப்போது அதன் வேகம் மணிக்கு 4,90,000 மைல்
எப்படி பூமியின் வேகம் பற்றி அதர்வண வேதப் புலவன் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடினான்? இந்த வேகம் என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு நான் வியாக்கியானம் செய்யவில்லை. பிரபஞ்சத்தில் உள்ள பூமி முதல் எல்லாவற்றுக்கும் வடிவம் வட்டமே என்று அறிந்து OVAL, GLOBULAR, CIRCLE அண்டம் (முட்டை) என்றும் வானில் சுற்றும் சூரியன், சநதிரன் , குரு ஆகியவற்றுக்கு ஈர்ப்பு விசை இருப்பதை அறிந்து கிரஹ GRIP, GRAB, GRAVITY என்ற சொல்லை பயன்படுத்தினான். எப்படி மிகப்பெரிய கிரகத்துக்கு குரு (வியாழன், ஜுபிட்டர் ) என்று பெயரிட்டான் என்பதை மனைதிற்கொண்டு இதை ஆராய வேண்டும். . முனிவர்கள் மாபெரும் விஞ்ஞானிகள் !!
இப்போது கடைசி இரண்டு வரிகளைப் பார்ப்போம்.
“எங்களைத் தங்கம் போல ஜொலிக்க வை” என்று புலவன் இறைஞ்சுகிறான். தங்கத்தின் மதிப்பை அறியாதார் உலகில் இல்லை. உலகம் முழுதும் அரசசாங்க வங்கிகளில் ஒவ்வொரு நாடும் குவித்து வைப்பது தங்கக் கட்டிகள்தான் .உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் தங்கம் வருகிறது. ரிக் வேத கால மக்கள் மிகவும் செல்வ செழிப்பில் திகழ்ந்த விவசாயிகள். தானியம், குதிரை, பசு மாடுகள், தங்கம், வீடு, சபை பற்றிய குறிப்புகள் அவர்கள் நாகரீகம் மிக்கவர்கள் , நகர வாழ் மக்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும் ஒரே மந்திரம், இந்திரன் இருபது மன்னர்களை வென்றதாகச் சொல்லி, 5, 6 மன்னர்களின் பெயர்களையும் சொல்கிறது !
சொர்ணம், ஹிரண்யம், என்ற சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துகிறோம். 16 வகைத் தானங்களில் ஹிரண்ய தானத்தை தமிழ்க் கல்வெட்டுகளும் செப்புகின்றன. சொர்ணம் என்ற பெயரை இன்றும் பெண்கள் பெயர்களில் காண்கிறோம்.
இதிலுள்ள “மஹா” என்ற சொல் மூலம் ஐரோப்பிய மொழிகளில் மெகா MEGA புகுந்தது.
ஓஷதி என்ற சொல்லை ஓளஷதம் / அவுடதம் என்று இன்றும் தமிழ் மருத்துவ நூல்கள் புகலும் .
கடைசி வரிதான் மிகப் பிரமாதமான வரி !
என்னை யாரும் வெறுக்க வேண்டாம். ராமலிங்க சுவாமிகளும் ‘திருவருட்பா’வில் இதை இறைவனிடம் வேண்டுகிறார். நான் யாரையும் சீ , நாயே பேயே என்று திட்டக்கூடாது என்று இறைவனிடம் கெஞ்சுகிறார் ; “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் அன்பு” நம்மிடம் இருந்தால் நம்மை யாரும் வெறுக்க முடியாது அல்லவா?
நாம் சிலரைக் கண்டதும் காதல் கொள்கிறோம் . சிலரை காரணம் இல்லாமல் வெறுக்கிறோம். பிள்ளைப் பேறு கூட இல்லாத எம்.ஜி.ஆர் . MGR என்ற நடிகரைக் காண்பதற்காக பல லட்சம் பெண்கள் இரவு மூன்று மணி வரை பொதுக்கூட்ட அரங்கில் காத்திருந்ததை நாம் படித்து இருக்கிறோம். அவரை வீட ஆண் அழகன் உலகில் இல்லையா? இதற்கெல்லாம் ஜாதகமே காரணம். நம் பூர்வ புண்ய பாபம் நம்மை நிழல் போல தொடர்ந்து வரும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆக நம்மை வெறுக்காமல் இருக்க நாம் யாரையும் வெறுக்காமல் இருக்கவேண்டும். இதை வள்ளுவன் குறளிலோ , வள்ளளாரின் பாடலிலோ காண்பதில் வியப்பில்லை. பூமி சூக்தத்தின் இடையில் இதை நுழைத்தானே வேதப் புலவன், அவனைத்தான் பாராட்டவேண்டும்
மந்திரம் 18
மஹத் சதஸ்தம் மஹதீ பபூவித மஹான் வேக ஏஜதுர்வேபதுஷ்டே
மஹான்ஸ்வேந்த்ரோ ரக்ஷத்ய ப்ரமாதம்
ஸா நோ பூமே ப்ரரோச்ய ஹிரண்யஸ்யேவ ஸம்த்ருசி மா நோ த்விக்ஷத கஸ்சன
ஈயென்று நானொருவரிட நின்று கேளாத
இயல்பு மென்னிட மொருவரீ
திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம
லிடுகின்ற திறமும் இறையாம்
நீயென்று மெனைவிடா நிலையும் நானென்று முன்
னினை விடா நெறியு மயலார்
நிதியொன்று நயவாத மனமு மெய்ந்நிலை நின்று
நெகிழாத திடமு முலகில்
சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்
தீங்கு சொல்லாத தெளிவும்
திரமொன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்கு வாய்
தாயொன்று சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே– திருவருட்பா
தொடர்ந்து காண்போம் அடுத்த கட்டுரையில் ………..
To be continued……………………
tags- ஈயென்று நானொரு, முனிவர்கள், விஞ்ஞானி, பூமி,வேகம்