ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்! (POST NO.4070)

Written by S NAGARAJAN

 

Date: 11 July 2017

 

Time uploaded in London:- 5-44 am

 

 

Post No.4070

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

ஆயுர்வேதம் கூ உணவு இரகசியம்

 

ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்!

 

ச.நாகராஜன்

உணவு என்பது உடலை போஷிக்கும் ஒன்று மட்டும் அல்ல, அது உள்ளத்தை உருவாக்கவும் உதவும் ஒன்று. ஆன்மீக வளர்ச்சிக்கோ அல்லது வீழ்ச்சிக்கோ அது அடிகோலும் என்கிறது ஆயுர்வேதம்.

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

  • அர்த்த தோஷம்
  • நிமித்த தோஷம்
  • ஸ்தான தோஷம்
  • ஜாதி தோஷம்
  • சம்ஸ்கார தோஷம்

இது பற்றி ஆஸ்ரம்ஜி பாபு தனது உரைகளில் ஒன்றில் விரிவாக எடுத்துரைக்கிறார். அதன் சாராம்சத்தைப் பார்க்கலாம்.

 

அர்த்த தோஷம்

பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார்.

உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.

மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா,என்ன தவறு செய்து விட்டோம், இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார்.

பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார்.

தன் சீடனிடம், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது’ என்று கேட்டார்.

வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.

இது பொருளால் வரும் தோஷம் – அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம்.

நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.

நிமித்த தோஷம்

அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.

அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய்,எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும அவசியம்.

அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை.

உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது.

பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர், “அம்மா, நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார்.

அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும்.

தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும்.

நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.

 

ஸ்தான தோஷம்

அடுத்தது ஸ்தான தோஷம். எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.

அதுமட்டுமின்றி கழிப்பறை, மருத்துவ மனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன முயன்றான். ஆனால அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள்.

எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர், “விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும்” என்று அருளினார்.

உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்

 

ஜாதி தோஷம்

அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு,உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை.

சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.

ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.

தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.

 

சம்ஸ்கார தோஷம்

அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.

ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம்.

அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன.

தட்டுகள் உரிய முறைப்படி கழுவப் படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது.

மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது.

அதன் விளைவையும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.

ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.

அதைக் கடைப்பிடித்து எளிமையான உணவை உண்டு உயர்ந்த உள்ளம் கொண்டு வாழ்ந்தனர் சில தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்.

 

இன்றோ…

இப்படிப்பட்ட ஐந்து உணவு தோஷங்கள் உண்டு என்பது கூட  தெரியாத காலம் ஆகி விட்டது.

என்றாலும் கூட ஆயுர்வேதத்தை மதிப்போர் உணவு பற்றிய இந்த தோஷங்களை அறிந்து அவற்றை நீக்கி உணவை உண்ண ஆரம்பித்தால் அது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் தருவதுடன் ஆன்ம முன்னேற்றத்தையும் தரும்.

இதுவே ஆயுர்வேதம் உணவு பற்றிக் கூறும் இரகசியமாகும்!

 

***