உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு!!!

atom bomb queen

கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1112 ; தேதி:– 17 ஜூன் 2014.

உணவை அளவோடு உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்; நல்லதைச் செய்யும் என்பது இதன் பொருள்.

அது என்ன? பெண்களுக்கு மட்டும் இந்த அறிவுரை? ஆண்கள் நிறைய சாப்பிட்டுவிட்டு தொந்தியும் தொப்பையுமாக ‘’டைனோசரஸ்’’ மிருகம் போல வலம் வரலாமா? ஏன் பெண்களை மட்டும் குறிவைத்துத் தாக்குகிறார்கள்?

உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு – என்று கொன்றை வேந்தன் கூறுகிறது, காரணம்? — பெண்கள் சமையல் அறையில் அதிகம் புழங்குவதால் ‘’ருசி பார்க்கும்’’ சாக்கில் அல்லது குழந்தைகளுக்கு ஊட்டும் சாக்கில் அதிகம் சாப்பீட்டுவிட்டு எப்போதும் ‘’கர்ப்பிணி போல’’ காட்சி அளித்தால் நன்றாக இராது.

மனைவியைத் தவிர வேறு பெண்களை நோட்டம் விடும் ஆண்களுக்கு நல்ல சாக்கு கிடைத்து விடும் அல்லவா? ஆண்களை ‘’மலர் மேயும் வண்டுகள்’’ – என்று காளிதாசனும் சங்கப் புலவர்களும் திட்டுகின்றனர் ((இது பற்றி எனது தனிக் கட்டுரையைக் காண்க)).

big-bottom

மீதூண் விரும்பேல் – என்று ஆத்திச் சூடி கூறும்.
பொருள்:– அதிகமாகச் சாப்பிட்டால் தொந்தி விழும்! தொந்தி சரிந்தால் சர்க்கரை வியாதி வரும். பின்னர் அதன் சகோதரர்களான இரத்த அழுத்தமும், இருதய நோயும் வாடகை தராமலேயே நம் வீட்டில் குடிபுகுந்து விடுவார்கள்! ((காண்க:– எனது பழைய கட்டுரை; ‘’ஒருவேளை உண்பான் யோகி’’……கட்டுரை இட்ட தேதி நவம்பர் 15, 2012))

மருந்து – என்ற தலைப்பில் திருவள்ளுவன் நமக்கு பத்து அறிவுரைகள் தருகிறான். அதில் ஒன்று:–

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய் – குறள் 946

பொருள்:– குறைவாக (இழிவு) உண்பவனுக்கு என்றும் இன்பம்; அதிகமாக உண்பவனுக்கு என்றும் நோய்!!

VLUU L100, M100  / Samsung L100, M100

பாலோடாயினும் காலம் அறிந்து உண் – என்று கொன்றை வேந்தன் சொல்லுகிறது.
பொருள்: பாலும் தேனும் கிடைத்தாலும்கூட அதற்கு உரிய காலத்தில்தான் சாப்பிட வேண்டும். அந்தக் காலத்திலேயே ‘’கொலஸ்ட்ரால்’’ (கொழுப்புச் சத்து) பற்றிய மருத்துவ அறிவு இருந்திருக்கிறது!!

((எங்கள் லண்டனில் பால் பாட்டில்களில் நீல நிற மூடி, பச்சை நிற மூடி, சிவப்பு நிற மூடி என்று பல வகை பால்-கள் விற்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இந்த விழிப்புணர்வு இருக்கிறதா என்பதை யாம் அறியோம் பராபரமே!! டயாபடீஸ் என்னும் சர்க்கரை வியாதி வந்தாலேயே டாக்டர்கள் பச்சை மூடி அல்லது சிவப்பு நிற மூடிக்கு மாறிவிடுங்கள் என்று எச்சரிப்பர். காரணம்? அவருடைய சகோதர வியாதிகள்— பிளட் பிரஸ்ஸர், ஹார்ட் ப்ராப்லம்ஸ்!!!))

மருந்தேயாயினும் விருந்தோடு உண் –என்று தமிழ் பழமொழி செப்புகிறது.
பொருள்: அமிர்தமே கிடைத்தாலும் அதை விருந்தினருடன் பகுத்து உண்ணுங்கள். அதிகம் உண்டால் அமிர்தம் கூட விஷம் ஆகி விடும். மற்றொரு பொருள்:- சில வகை மருந்துகளை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் சாப்பாட்டுடன் சாப்பிடுங்கள்.

சுட்ட எண்ணையை தொடாதே, வறுத்த பருப்பை விடாதே –என்று சித்த மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

manuel-uribe-fattest-man-diet

ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அதில் தீய ‘’கொலஸ்ட்ரால்’’ அதிகம் இருக்கும் (கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் வகையும் இருக்கிறது). இதே போல உருக்கிய வெண்ணெயைவிட (அதாவது நெய்), வெண்ணை நல்லது. அதை உருக்க உருக்க, உங்கள் உடலையும் உருக்கிவிடும்!

வறுத்த பருப்பு = நல்ல புரோட்டீன்= அதாவது உடலுக்குத் தேவையான புரதச் சத்து!

இறுதியாக
மூலம் சேர் கறி நுகரோம், மூத்த தயிர் உண்போம்
முன்னை நாள் செய்த கறி அமுதெனினும் அருந்தோம்
ஞாலம்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கு இங்கேதுகவை நாம் இருக்கும் இடத்தே
–தேரையார் வாகடம்
பொருள்:– ஞாலம்= உலகமே கிடைத்தாலும், நமன்= யமன்.

Do-You-Know-Your-BMI-This-Might-Help

எனது முந்தைய கட்டுரையில் (நவம்பர் 15, 2012) சொன்ன பாடலினையும் மீண்டும் ஒருமுறை பயிலுவது நலம் பயக்கும்:

ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே
இருபோது போகியே என்ப – திரி போது
ரோகியே நான்கு போது உண்பான் உடல் விட்டுப்
போகியே என்று புகல் (நீதி வெண்பா)

bmi-chart

BMI Chart: If you dont understand this chart, please ask your doctor.

—சுபம்—