என் வயது 3 வருஷம் 5 மாதம் 7 நாள் 16 அரை மணி!

baby ganapathy

திருமுருக கிருபானந்த வாரியார் சொன்ன கதை:

முற்றும் துறந்த முனிவர் ஒருவர் திருத்தல யாத்திரை புரிந்துவந்தார். பற்றற்ற பரம ஞானியாகிய அவர் இன்றிருந்த ஊர் நாளை இரார். ஒருவேளையே உப்பில்லாத உணவை உண்பார். அவர் பொய்யை அதிமாக வெறுப்பவர்.

“மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரில் தலை”

என்ற திருக்குறளை இடையறாது கூறுவார்.அவருடைய மறந்தும் பொய் புகலாது. பொய் புகல்வார் மனையில் புசியார்.

ஒருநாள் ஒரு ஊருக்குச் சென்றார். “இந்த ஊரில் உண்மையாளர் யாவர்?” என்று உசாவினார். அதோ தெரிகின்ற மாடி வீட்டில் வாழ்கின்ற முதலியார் உண்மையாளர். அவர் அடியார் பக்தி உடையவர். ஒரு லட்சம் செல்வமும் நான்கு புதல்வர்களும் உடையவர் என்று பலரும் பகர்ந்தார்கள். பின்னர் முதலியாருடைய வீட்டை முனிவர் அணுகினார்.

ஆசனத்தில் அமர்ந்திருந்த முதலியார் உடனே எழுந்தார். ஓடிவந்து ஞானியார் அடைமலர் மீது விழுந்தார். அவரை ஆசனத்தில் எழுந்தருளல் புரிந்து ,”பெருமானே உணவு செய்ய எழுந்தருளல் வேண்டும்” என்று வேண்டினார். அவருடைய அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டு முகமலர்ந்து, உண்மையாளர்தானா என்று சோதித்த பின்னரே உணவு செய்ய வேண்டும் என்று எண்ணிணார்.

“ ஐயா, உமக்குச் செல்வம் எவ்வளவு உண்டு?”
“சுவாமி! இருபத்து இரண்டாயிரம் ரூபாய் உண்டு”
குழந்தைகள் எத்தனை பேர்?”
“சுவாமி! ஒரே புதல்வன் தான்”
“உமக்கு வயது என்ன?”
“சுவாமி! எனக்கு வயது மூன்று வருஷம் ஐந்து மாதம் ஏழு நாள் பதினாறரை மணி”

முனிவருக்கு பெரும் சினம் மூண்டது.
“ஐயா! நீர் சுத்தப் புளுகனாக இருகிறீர். நீர் பேசுவதெல்லாம் பெரும் புரட்டு. உம் வீட்டு அன்னம் என் தவத்தை அழிக்கும். நான் பொய்யர் வீட்டில் புசியேன்” என்று கூறிச் சீறி எழுந்தார்.

முதலியார் அவர் காலில் விழுந்து, “அருள் நிறைந்த அண்ணலே! அடியேன் ஒருபோதும் பொய் புகலேன். சத்தியம் சொல்கின்றேன். சற்று நிதானமாக ஆராய்ந்துபார்த்து உண்மை உணர்வீராக” என்று கூறித் தனது வரவு செலவு புத்தகத்தைக் காட்டினார். அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது.

“அடேய்! இதோ உனக்குச் சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று இருக்கிறதே. நீ 22,000 தான் என்று பொய் சொன்னாயே”, என்று கடிந்தார்ர் முனிவர்.

“சுவாமி! ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது. ஆனால் பெட்டியில் உள்ள பணம் எனக்குச் சொந்தமாகுமா? இதோ பாருங்கள், தருமக் கணக்கில் இதுகாறும் 22,000 ரூபாய்தான் செலவழிந்துள்ளது. தருமம் புரிந்த பணம்தானே என்னுடையது. இப்போது நான் மாண்டால் பெட்டியில் உள்ள பணம் என்னுடன் வராதே. உடன் வருவது தருமம் ஒன்றுதானே” என்று கூறீனார்.
முனிவர் இதைக் கேட்டு வியப்புற்றார். “ ஆமாம், உனக்கு நான்கு புதல்வர்கள் உன்து என்று கேள்விப்பட்டேனே?” என்றார்.
kuzanthai vazipaatu

சுவாமி! எனக்குப் பிறந்த பிள்ளைகள் நால்வர்’ ஆனால் என் பிள்ளை ஒருவன் தான்.
“அப்பா! நீ சொல்வதன் கருத்து எனக்கு விளங்கவில்லையே?
“சுவாமி! விளங்கவைக்கின்றேன்”.

“மகனே! நடராஜா”, என்று அழைத்தார் முதலியார். சீட்டு விளையாடுகிறேன், வர முடியாது என்று பதில் வந்தது.
“மகனே! வேலுச்சாமி” என்று அழைத்தார் முதலியார். “ஏன் இப்படிக் கதறுகின்றாய்? வாயை மூடிக்கொண்டிரு” என்று பதில் வந்தது.

“மகனே! சிவசாமி”, என்று அழைத்தார் முதலியார். உனக்குப் புத்தி இருக்கிறதா? உன்னோடு பேச என்னால் ஆகாது. பூமிக்குச் சுமையாக ஏன் இன்னும் இருக்கிறாய்?” என்று பதில் வந்தது.
மகனே கந்தசாமி! என்று அழைத்தவுடன் கந்தசாமி ஓடிவந்து பிதாவையும் முனிவரையும் தொழுது, சுவாமி பால் கொண்டுவரட்டுமா, பழம் கொண்டுவரட்டுமா? என்று கேட்டு உபசரித்து, விசிறி எடுத்து வீசிக்கொண்டு பணிவுடன் நின்றான்.

முதலியார், “ சுவாமி! அந்த மூவரும் என் புதல்வர்களா? என் கருத்துக்கு முரண் ஆனவர்கள் என் பிள்ளைகளா? போன பிறப்பிற்பட கடன்காரர்கள், இவன் ஒருவன் தான் என் பிள்ளை” என்றார்.
அப்பா! உன் கருத்து உவகையைத் தருகின்றது. வயது விஷயத்தில் நீ கூறியதன் உட்பொருள் யாது?
“ சுவாமி! அடியேன் நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம்தான் வழிபாடு செய்கின்றேன். மிகுதி நேரம் எல்லாம் வயிற்றுக்காகவும் குடும்பத்து க்காகவும் உழைக்கின்றேன். பேசாத நாள் எல்லாம், பிறவா நாள்தானே? இறைவனைப் பூசிக்கும் நேரம்தான் எனக்குச் சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசிக்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்தவகையாகப் பார்த்தால், முப்பதாயிரத்து நூற்று பன்னிரண்டரை மணி நேரம் ஆகின்றது. ஆகவே அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும், எனக்குச் சொந்த வயது திட்டமாக மூன்று வருஷம் ஐந்து மாதம் ஏழு நாள் பதினாறரை மணிதான்”

1.தருமம் செய்த பணம் எனக்குச் சொந்தம்
2.என் கருத்தை அநுசரிக்கின்றவனே எனக்குச் சொந்தமகன்
3.பூசை செய்த நேரமே எனக்குச் சொந்தம்”, என்றார் முதலியார்.
இதனைக் கேட்ட முனிவர் பெரிதும் மகிழ்ந்தார். அவர் வீட்டில் உணவு உண்டு வாழ்த்திவிட்டுச் சென்றார்.

krishna with brown eyes

(அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகம்,”வாரியார் வழங்கும் சிந்தனைச் செல்வம்”- திருமுருக கிருபானந்த வாரியார்)

Pictures are taken from Facebook;thanks.
contact london swaminathan for a list of 650+ articles at swami_48@yahoo.com