மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!! (Post No 2901)

punarjanma 4

Article written by S.NAGARAJAN

 

Date: 17 June 2016

 

Post No. 2901

 

Time uploaded in London :–  5-42 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

திரு ஆர் சி ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் நெல்லையிலிருந்து தமிழில் வெளி வரும் மருத்துவ மாத இதழான ஹெல்த்கேர் இதழில் மே 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

ஆரோக்கிய ஆன்மீக இரகசியம்

 

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!!

 

.நாகராஜன்

 punarjanma5

று பிறப்பு பற்றிய சந்தேகங்கள்

 

மறு பிறப்பு பற்றி ஏராளமான சந்தேகங்கள் இயல்பாகவே எழுகின்றன. புண்ணிய காரியங்களைச் செய், மறு உலகில் சந்தோஷமாக இருக்கலாம்; மறு பிறப்பில் நன்றாக வாழலாம் என்ற கொள்கை முன் வைக்கப்படும் போது அதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி எழுகிறது? கண்ணால் பார்ப்பதே மெய் என்று எடுத்துக் கொண்டால் மறு உலகத்தைக் கண்ணால் காண முடிவதில்லையே!எப்படி அதை நம்ப முடியும் என்ற கேள்வி எழுகிறது.

 

 

சாஸ்திரங்களை நம்புவோர் மறு பிறப்பு உண்டு என்று சொல்லும் போது அதை ஏற்காதவர்கள் அதற்கு என்ன ஆதாரம் என்கின்றனர்.

 

தாய் தந்தையே இந்தப் பிறவிக்குக் காரணம் என்றால் இந்தப் பிறவிக்குப் பின்னால் உள்ள பிறவிக்கு யார் காரணம்? இயற்கை தான் நம்மைப் படைக்கிறது என்று வைத்துக் கொண்டால் அப்போதும் கூட இன்னொரு பிறவிக்கு காரணம் எது?மதியே அனைத்திற்கும் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் மறு பிறப்பு கொள்கை அடிபட்டுப் போகிறது.

இப்படி அனைத்துக் கோணங்களையும் எடுத்துக் கொண்டு அலசி ஆராய்கிறார் சரகர்.

 

 

 

எல்லைக்குட்பட்ட புலன்களின் செயல்பாடுகள்

 

புத்திசாலியாக இருக்கும் ஒருவன் மறுபிறப்புக்கு மாறாகப் பேசப்படும் வாதங்களை ஏற்கக் கூடாது.ஏன்? ஏனெனில் புலனுக்கு உள்ளடங்கிய பார்வை ஒரு எல்லைக்கு உட்பட்டவை. ஆனால் அறிவோ – சாஸ்திரங்கள் மூலமாகப் பெறப்படுவது, ஊகம், தர்க்கம் மூலமாக அறிதல் ஆகியவை மூலமாகப் பெறப்படும் அறிவோ – எல்லையற்றது. அதன் மூலம் புலன்களுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் பற்றிய சரியான பார்வையைப் பெற முடியும்.

 

இன்னொரு விஷயம். கண்ணால் பார்ப்பது மட்டுமே மெய்; புலன்களால் உணரப்படுவது மட்டுமே உண்மை என்று கூறுவது சரியான் ஒன்றல்ல. புலனுக்கு மீறிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. மிகுந்த தொலைவில் உள்ள ஒன்றை எப்படிப் பார்க்க முடியும்? தடைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பொருளைப் பார்ப்பது சாத்தியமா? எடுத்துக்காட்டாக சுவர் ஒன்றின்  பின்னால் இருக்கும் ஒரு பொருளை எப்படிப் பார்ப்பது? புலன்கள் கூர்மையின்றி இருந்தால் அப்போது அந்தப் புலன்கள் பார்க்க முடிபவை மட்டுமே தான் உண்மையா? புலன்கள் கூர்மையாக இருந்தாலும் மனம் ஒன்றில் ஈடுபடவில்லையெனில் எதிர்த்தாற் போல இருப்பதும் தெரிவதில்லை; காதில் ஒலி விழுந்தாலும் கவனம் இல்லையேல் அது கேட்பதில்லையே! ஒரே பொருள் போன்ற இரண்டு பொருள்களைக் கண்டால் மயக்கம் ஏற்படுகிறது. மிகச் சிறிய பொருளைக் காண முடிவதில்லை. நிழல் பட்டால் அப்போது எதிரில் இருப்பதும் மறைகிறது. ஆக இப்படி எவ்வளவோ விஷயங்கள் புலன்களை எல்லைக்குட்பட்டவை என்பதை நிரூபிக்கிறதே

 

 

பெற்றோர் தான் பிறப்புக்கு காரணம் என்றால் அது இரண்டு விதமாக ஏற்பட வேண்டும். ஒன்று  முழுமையாக அவர்கள் பிறப்புக்குரிய உயிரில் மாற வேண்டும். அப்படி என்றால் அவர்கள் புதிய உயிர் பிறந்தவுடன் மரிக்க வேண்டும். அப்படி ஏற்படவில்லை.

 

 

அடுத்து ஒரு பகுதி மட்டும் புதிய உயிரில் மாற் வேண்டும். அப்படி தாயோ தந்தையோ பகுதியைப் பிரித்துக் கொடுக்கவில்லை. அப்படி என்றால் வேறு எதோ ஒன்று புதிய உயிரின் படைப்பில் இருக்கிறது, இல்லையா?

பெற்றோர் மட்டுமே பிள்ளைகளின் பிறப்புக்குக் காரணம் என்றால், அவர்களின் மனமும், புத்தியும் பிள்ளைகளுக்கு மாற்றி விடப்படுகிறது என்றால் அப்படிப் பிள்ளை பிறந்தவுடனேயே அவர்களது மனம் புத்தி ஆகியவை இயங்காமல் நின்று விட வேண்டும்..ஆக, அதுவும் சரியல்ல.

 

 

ஒரு பிறப்பு ஏற்படும் போது ஐந்து அடிப்படை பூதங்களும் ஆத்மாவும் இணைகிறது; பின்னர் பிரிகிறது. ஆத்மா முடிவற்ற ஒன்று.

 

 punarjanma 6

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்றா?

 

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்று என்ற வாதமும் சரியில்லை.  ஏனெனில் இப்படிச் சொல்பவருக்கு எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆராய வேண்டிய அவசியமும் இல்லை. அது அது தன் பாட்டிற்கு ஏற்படுகிறது என்றால் மேலே பேசுவதற்கு ஒன்றுமே இல்லை!

 

 

அறிவால் ஆய்ந்து பார்!

ஆகவே புத்திசாலியாக இருக்கும் ஒருவன் தன் அறிவைக் கொண்டு ஆராய வேண்டும்.

எந்த ஒன்றும் இரண்டே இரண்டுக்குள் தான் அடங்கியிருக்கிறது.

ஒன்று அது உண்மையாக இருக்க வேண்டும் அல்லது பொய்யாக இருக்க வேண்டும்.

 

 

ஒரு விஷயம் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க நான்கு வழிகள் உள்ளன.

  • ஆன்றோர் அல்லது ரிஷிகள் கூற்று
  • நேரடிப் பார்வை (புலனறிவு)
  • ஊகம்
  • தர்க்கம் மூலமாக அறிவது

ரஜஸ், தமஸ் ஆகிய இரண்டையும் கடந்து நிகழ் காலம் எதிர் காலம், இறந்த காலம் ஆகிய மூன்று காலங்களையும் பார்க்க வல்ல்வர்கள் ஆப்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களிடம் பொய்யே இருக்க முடியாது. ஆக அவர்கள் கூறுவதை நம்பலாம்.

 

punarajanma3

ப்ரத்யக்ஷ பிரமாணம் என்பது ஒரு எல்லைக்குட்பட்டது.

ஊகம் என்பதோ மூன்று வகைகளைக் கொண்டது. நிகழ்காலம், இறந்தகாலம் எதிர்காலம் ஆகியவற்றுடன் அது தொடர்பு கொண்டது. புகை மூலம் தீ இருப்பது தெரிகிறது. குழந்தை பிறப்பதன் மூலம் பாலியல் சேர்க்கை உணரப்படுகிறது. இவை இரண்டும் நிகழ்காலம் இறந்தகாலம் ஆகியவற்றிற்கான உதாரணங்கள்.ஒரு மரத்தின் விதையை விதைக்கும் போது அது எந்த மரமாக வளரும் என்பதை ஊகிக்க முடிகிறது. இது எதிர்காலத்திற்கான விளக்கம்.

 

 

தர்க்கம் மூலமாக அறிவதைப் பல உதாரணங்களால் விளங்கிக் கொள்ளலாம். நிலத்தைப் பண்படுத்தி உழுது. விதை விதைத்து பருவ காலத்தில் மழையும் பெய்தால் விளைச்சல் நன்கு ஏற்படும்.ஆணும் பெண்ணும் பருவ காலத்தில் இணைந்தால் கரு உருப்பெறும். நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் ஆகிய மூன்றிற்கும் பொருந்தும் ஒன்றைப் பலவேறு காரணிகளால் புத்தி பார்த்து அறிவது யுக்தி எனப்படும்.

இது மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் தர்மம் (புண்ய காரியங்கள்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) ஆகிய மூன்றைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

ஆகவே இந்த அடிப்படையில் மறுபிறப்பு பற்றி ஆராய வேண்டும்.

 

punarjanma1

 

மறுபிறப்பு உண்மையே என்பதற்கான காரணங்கள்

ஒரு வித ஆசையும் அற்ற பெரும் ரிஷிகள் கூறுவது உண்மை. அவர்கள் காரண காரிய தொடர்பு பற்றி ஆய்ந்து மறு பிறப்பு உள்ளது என்கின்றனர்.

 

 

இரண்டாவதாக பிறக்கும் குழந்தைகளில் பிறக்கும் போதே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நிறம், எடை, வடிவம், அழகு,புத்தி, மனம், குரல் இப்படி எல்லாவற்றிலும் தனித் தனி வேறுபாடு இருக்கிறது. ஒரு குழந்தை ராஜ குமாரனாகப் பிறக்கிறது. இன்னொன்றோ பிச்சைக்காரனாகப் பிறக்கிறது.

ஒன்று பிறந்தவுடன் இறக்கிறது. இன்னொன்றோ நூறு வயது வ்ரை வாழ்கிறது. தாய்ப் பாலைக் குடிப்பது, அழுவது, சிரிப்பது ஆகிய எல்லாவற்றிலும் கூட ஒரு குழந்தை போல இன்னொரு குழந்தை இருப்பதில்லை.

 

 

இந்த ஜன்மத்தில் செய்யும் நல்ல அல்லது கெட்ட வினைகளுக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது என்பதை ஊகித்து அறியலாம்.

 

தர்க்கப் படியாகப் பார்த்தாலும் மறு பிறப்பு சரியே. கர்த்தா, காரணம் ஆகியவற்றிற்கேற்ப செயல்கள் அமைகின்றன. விதையின்றி மரமில்லை.

 

ஆகவே மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மறு பிறப்பு உண்டு என்பது நன்கு புரியும்.

ஒரு புத்திசாலி நாத்திக வாதத்தால் மயங்க மாட்டான். அவன் நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து நல்லதையே பெற முயல்வான்.

 

ஆக சரகரின் இந்த விரிவான விளக்கம் மறு பிறப்பு பற்றிய தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறது, இல்லையா?!

************.