சுற்றுப்புறச் சூழலைக் காப்பதற்கு ஒவ்வொருவரும் உதவலாம்! (Post.10,414)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,414

Date uploaded in London – –   6 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்) 11-11-2021 அன்று தொடங்கி 20-11-21 அன்று முடிய ஒலிபரப்பாகி வந்தது.

20-11-2021 காலை ஒலிபரப்பான பத்தாவது கடைசி உரை கீழே தரப்படுகிறது. 

சுற்றுப்புறச் சூழலைக் காப்பதற்கு ஒவ்வொருவரும் உதவலாம்!

ச.நாகராஜன்

ஒரு இல்லத்தரசியாகவோ அல்லது ஒரு குடும்பத் தலைவராகவோ இருக்கும் ஒருவர் சுற்றுப்புறச்சூழலைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தாலும், ‘என்னால் என்ன செய்ய முடியும்’ என்று நினைத்து மனம் தளர வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இந்த நற்பணியை நாம் தொடங்கலாம்.

முதலில் குப்பை கூளங்களை அகற்றும் போது காய்கறி மற்றும் உணவுப் பொருள் கழிவுகள், மின்சாதனக் கழிவுகள், ‘டயபர்’ (Diaper) போன்ற கழிவுகளைத் தனித் தனியே பிரித்து அததற்குரிய கழிவுத் தொட்டிகளில் போடுதல் வேண்டும்.

வீட்டில் மின்சக்தியை சேமிப்பதோடு மின் பில்லையும் (BILL)  குறைக்கும் வகையில்  இன்காண்டெஸ்சென்ட் (Incandescent) பல்புகளை அறவே அகற்றி விட்டு CFC எனப்படும் காம்பாக்ட் ப்ளோரெஸெண்ட் விளக்குகளைப் பொருத்தினால் 35000 மணி நேரம் அதிக பட்சமாகவும் 10000 மணி நேரம் குறைந்த பட்சமாகவும் வடிவமைப்புக்குத் தக்கபடி, அவை உழைத்துப் பயனைத் தருகின்றன.

தோல் பொருள்களில் ஆர்வம் உடையவர்கள் கைப்பை உள்ளிட்டவற்றை வாங்கும் போது அது சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு பயக்காத வகையில் மிருகங்களைக் கொடுமைப் படுத்தாமல் பெறப்பட்ட தோலினால் ஆக்கப்பட்டதா என்பதைச் சரி பார்த்து வாங்கலாம்.

மேக் அப் எனப்படும் ஒப்பனை சாதனங்களின் உறைகளில் அது சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த ஒன்றா என்று சரி பார்த்து வாங்குதல் வேண்டும். குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும் போது பிளாஸ்டிக் எனில் அது பசுமை பொம்மையா – GREEN TOY தானா, அதாவது சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்காத பிளாஸ்டிக்கினால் ஆனதா என்று பார்த்து வாங்குதல் வேண்டும். அல்லது மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைகளுக்கு மாறுவதும் ஒரு சிறந்த வழியே.

கறிகாய்கள் வாங்கும் போது வேதிப் பொருள்களை உரமாகப் பயன்படுத்தாத ஆர்கானிக் காய்கறிகளா என்று பார்த்து வாங்குதல் வேண்டும். வெளியிலிருந்து உணவு வகைகளைப் பெறுவது பெருகி வரும் இந்நாளில் அவை ஆர்கானிக் உணவு தானா என்பதை சரி பார்த்து வாங்குதல் வேண்டும். துணியில் ஆர்கானிக் காட்டன் இப்போது எங்கும் கிடைக்கிறது. இந்த வகை பருத்தி இரசாயனம் கலந்த செயற்கை உரங்கள் இன்றி வளர்க்கப்படுவதே இதன் சிறப்பு. கறிகாய்கள், மளிகைப் பொருள்கள் வாங்கச் செல்லும் போது நமது வீட்டிலிருந்தே துணிப்பையைக் கொண்டு செல்வதோடு கடைக்காரரிடம் பிளாஸ்டிக் பைகளை அறவே தவிர்க்குமாறும் அன்புரை கூற வேண்டும்.

இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் கவனம் செலுத்தினால் ஒரு இல்லத்தரசியோ அல்லது ஒரு குடும்பத்தலைவரோ வீட்டிற்கும் நாட்டிற்கும் சிறந்த சேவை செய்தவர் ஆவர்; சுற்றுப்புறச் சூழலை  மாசின்றிக் காக்க உதவி செய்தவர்களும் ஆவர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது முது மொழி அல்லவா!

****

tags-  புறச் சூழல்  , உதவலாம்