உபநிஷத அற்புதங்கள்– Part 2 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்
எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 996; தேதி—23 April 2014.
13.பிருஹத் ஆரண்யக உபநிஷத்
மிகவும் பழைய உபநிடதம் இதுதான். கி.மு 800 என்பது வெளி நாட்டினர் கணிப்பு. மிகவும் பெரியதும் இதுதான். இதில் 400 பாடல்கள் உள்ளன. பிற்கால உபநிஷதத்தில் காணப்படும் எல்லா கருத்துகளும் இதில் விதை ரூபத்தில் இருப்பதை உணரலாம்.
அஸ்வமேத குதிரை உருவகம் இதில் காணப்படுகிறது
.(1-1-1)
கண்- சூரியன், மயிர்/முடி—மரம் செடி, கொடி, மூத்திரம் – மழை என்ற ஒப்பீடும் உள்ளது. இது ரிக்வேத புருஷ சூக்தத்திலும் வருவதால் பல்லாயிரம் ஆண்டுகளாக பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் கடவுளாக காண்பது இந்துக்களின் சிந்தனை மரபு என்று காட்டுகிறது.
14.ஒன்றாகக் காண்பதே காட்சி
ஒன்றாகக் காண்பதே காட்சி (அவ்வை பாடல் வரி) என்ற வாசகம் — இரண்டு இருக்குபோதுதான் பயம் இருக்கும் என்ற உபநிடத வாக்கியத்தில் இருந்து உண்டானதே. 1-4-1
கடவுள் தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டார்: கணவன் மனைவி என்று. மனைவியை கணவனின் மற்றொரு பாதி (தி அதர் ஹாப்) என்று கூறுவதற்கு இதுதான் முக்கியக் காரணம். பிற்காலத்தில் வந்த அர்த்தநாரீஸ்வரன் உருவத்துக்கு (மாதொருபாகன்) மூர்த்திக்கு இதுவே மூலம். இதையே பைபிள் ஆதாம் என்பவர் இடது பக்க விலா எலும்பை முறித்து பெண்ணை உருவாக்கியதாகச் சொல்லுகிறது. இடது பக்கத்தில் தேவி இருப்பது இந்து மதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆதாம் என்பது ஆத்மா என்பதன் திரிபு. பரம ஆத்மா தன்னை ஜீவ ஆத்மா என்று இரண்டாக வேறு படுத்தியதே இக்கதை. இதையே உபநிடதத்தில் இரண்டு பறவைகள் கதையாகவும் காண்கிறோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இது பற்றி அற்புத விளக்கம் கொடுத்துள்ளார். நானும் ஏற்கனவே ‘த்ரீ ஆப்பிள்ஸ் தட் சேஞ்ட் தெ ஓர்ல்ட்’ என்ற கட்டுரையிலும் , ‘பைபிளில் சம்ஸ்கிருதம்’ என்ற கட்டுரையிலும் எழுதி இருக்கிறேன்.
புதிய பரிணாமக் கொள்கையையும் இந்த உபநிடதத்தில் காணலாம்: பசு, குதிரை, கழுதை, ஆடு, காளை, எறும்பு, மனிதன் ,மற்ற மிருகங்கள்
1000 பொற்கிழி
15.ஜனகர் நடத்திய யாகத்தின் இறுதியில் ஒரு போட்டி நடத்தப்படுகிறது 1000 பசுக்களின் கொம்புகளில் சுற்றப்பட்ட பொற்கிழிகளுடன் முதல் பரிசு என்று அறிவிக்க ப்படுகிறது. இதில்தான் யாக்ஞவல்க்யர் – கார்க்கி வாதம், யாக்ஞவல்க்யர் – மைத்ரேயி சம்பாஷணை எல்லாம் வருகிறது. (3-1-1)
(1000 பசுக்கள் ஒவ்வொன்றிலும் பத்து வீதம் 10,000 பொற்காசுகள்).
இதே போல திருவிளையாடல் புராண தருமி- நக்கீரன் சம்பவத்திலும் ஆயிரம் பொற்கிழி வருவதால் போட்டி நடத்தி இப்படிப் பரிசு வழங்குவது இந்தியாவில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று அறிகிறோம்.
16.இதில் தெரியும் விஷயங்கள்
யாராவது ஒருவர் அறிவாளி என்று அறிவித்தால் அவர் சபையில் அதை நிரூபிக்க வேண்டும். அதை எதிர்த்து அறிஞர்கள் கேள்வி கேட்கலாம். இதில் பெண் அறிஞர்களும் கலந்து கொண்டனர். உலகில் இல்லாத புதுமை!
தமிழ் சங்கமும் இதே பணியைச் செய்து வந்ததை திருக்குறள் அரங்கேற்றம் மற்றும் தருமி—நக்கீரன் மோதலில் படிக்கிறோம்.
17.ஆண்டு, பட்சம்
இந்த உபநிஷத்தில் 12 மாதம் ,பட்சம் எல்லாம் வருகிறது. ஆனால் வாரம் என்ற கணக்கு இல்லை. காலத்தை சக்கரமாக உருவகித்து 12 கம்பிகள் என்று 12 மாதங்களும் வருணிக்கப்படுகின்றன.
18.கடவுள் விஷயத்தில் அதிக கேள்விகள் கேட்கக்கூடாது என்று யாக்ஞவல்கியர் கார்க்கியைக் கண்டித்தது—கடவுள் பட்டிமன்ற விவாதத்துக்கு அப்பாற்பட்டவர் என்ற உண்மையைப் புலப்படுத்தும்.
19.பணமும் கடவுளும் வெகுதூரம்
யாக்ஞவல்கியருக்கு இரண்டு மனைவியர்: மைத்ரேயி, காத்யாயனி. அவர், என் சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்துவிட்டு நான் தவம் செய்யப் போகிறேன் என்று சொன்னார். உடனே பணத்தின் மூலம் என்ன பயன்? என்று மைத்ரேயி கேட்கிறார். பணத்தின் மூலமாக கடவுளை அடைய முடியாது என்று கேட்டவுடன் தனக்கு சொத்தின் ஒரு பகுதி வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். உலகில் முதல் முதலில் பணமும் சுகமும் வேண்டம் என்று சொன்ன பெண்மணி இவராகத்தான் இருக்க வேண்டும்!
20.உன்னையே நீ அறிவாய் என்ற வாசகம் வருவதும் இங்கேதான் (4-5–1). சாக்ரடீஸ் இதை நம்மிடம் கற்றுக் கொண்டார்.
‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்’ என்று பாரதி பாடியது ஏன் என்று இப்போது தெரிகிறது.
21.பெண்களுக்கு சொத்தில் ஒரு பகுதி உண்டு என்பதும் இதில் இருந்து தெரிகிறது.
இது எல்லாம் 3000 ஆண்டுகளுக்கு முன்!!! மற்ற நாடுகளில் நாகரீகம் என்றால் என்ன என்றே தெரியாத காலம். பிரம்மாண்டமான பிரமிடுகள் இருந்தனவே அன்றி ‘’உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’’— என்ற தத்துவம் இல்லை!
22.சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா
சத்ய சாய் பாபா பாடும் ‘’சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா’’ பஜனையின் வாசகம் இந்த உபநிஷத்தில்தான் இருக்கிறது. இது அற்புதமான ஒரு வாக்கியம்.(3—9—28)
இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய ஆராய்ச்சி விஷயம்.
முதல் பகுதி வெளியிட்டது 22 ஏப்ரல் 2014
Contact: swami_48@yahoo.com
You must be logged in to post a comment.