உயிர், மெய் எழுத்துக்களைக் கண்டுபிடித்தவன் தமிழனா?

tamil-barakhari

Research paper No 1959

Written by London swaminathan

Date: 28 June 2015

Uploaded in London at காலை 9-48

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 (12×18=216), ஆய்த எழுத்து 1, ஆக மொத்தம் 247 என்று நாம் படித்திருக்கிறோம். இதை நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் பாடம் கற்பிக்கும் போது சொல்வேன்; உடனே எல்லா மாணவர்களும் ஆ! என்று ஒரு வியப்புக் குரல் கொடுப்பார்கள். கவலைப் படாதீர்கள்! முப்பது (12+18) எழுத்துக்களைப் படித்துவிட்டு சில குறியீடுகளையும் (diacritical marks டயக்கிரிட்டிகல் மார்க்ஸ்) அதற்குப் பின்னுள்ள சப்தங்களையும் புரிந்து கொண்டால் போதும்! ——- என்றவுடன் நிம்மதிப் பெருமூச்சுவிடுவர்.

அதற்குப் பின்னால் எழுத்து அமைப்பு விஷயத்தில், தமிழர்களின் அறிவியல் பூர்வ அணுகு முறையை விளக்கும்போது, உயிர் என்பது நம்முடைய மூச்சுக் காற்று, மெய் என்பது நமது உடல், இரண்டும் சேரும்போது வருவது உயிருள்ள மனிதன் என்பது போல இந்த உயிர் மெய் எழுத்துக்கள் என்று அதன் தத்துவப் பின்னணிகளை விளக்குவேன். பிற்காலத்தில் இது சைவ சித்தாந்த விளக்கத்திலும் இடம் பெற்றது. பல புத்தகங்களில் இது தமிழனின் அரிய கண்டுபிடிப்பு என்று எழுதி இருப்பார்கள். அது உண்மை அல்ல. அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேத கால இலக்கியத்தில் இது இருக்கிறது. அப்படியானால் தமிழன் அதைக் “காப்பி” (copy) அடித்தானா? அதுவும் இல்லை!

தமிழ் மொழியையும் சம்ஸ்கிருத மொழியையும் படைத்தவன் சிவ பெருமான். தமிழுக்கு இலக்கணம் வகுக்கும் பொறுப்பை வடக்கிலிருந்து வந்த அகத்தியன் செய்து கொடுத்தான். இதை நான் சொன்னால் ஒதுக்கிவிடுவீர்கள். திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவரும், நமது காலத்தில் வாழ்ந்த உலக மகா கவிஞன் சுப்பிரமணிய பாரதியும் சொல்லியிருக்கிறான் (ஆதிசிவன் பெற்றுவிட்டான்……..) இரண்டு பாடல்களையும் முன்னொரு கட்டுரையில் தந்துவிட்டேன்.

தமிழுக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை சிவபெருமான் அனுப்பியதில் இரண்டு உண்மைகள் புலப்படும்:

1.அகத்தியர் வருவதற்கு முன்னரே தென்னாட்டில் தமிழ் என்று ஒரு மொழி இருந்தது. அது வட நாட்டிலோ, சிந்து சமவெளியிலோ வழங்கப்படவில்லை. தென்னாட்டில் மட்டுமே இருந்தது. இதைத் தொல்காப்பியரும், பனம்பாரனாரும் கூட சொல்கிறார்கள்.

2.இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்ததால்தான், இரண்டு மக்களும் ஒரே இனம் என்பதால்தான், அகத்தியர் அந்தப் பணியை ஏற்றார்; திறம்பட செய்தும் முடித்தார்.

இதுவரை முந்தைய கட்டுரைகளில் நான் சொன்ன கருத்துக்கள்:

1.இந்திய மொழிகளை திராவிட (Dravidian) மொழிகள் என்றும் இந்திய-ஐரோப்பிய (Indo-Eoropean)  மொழிக் குடும்பம் என்றும் பிரித்தது தவறு (சான்று: பரஞ்சோதி முனிவர், பாரதியார், தமிழ்-சம்ஸ்கிருத மொழிகளின் அமைப்பு).

2.இந்திய வரலாற்றையோ, பண்பாட்டையோ பற்றி எழுதுபவனுக்கு தமிழ், சம்ஸ்கிருத இலக்கிய, இலக்கண அறிவு இல்லாவிடில் கால்டுவெல் (Bishop Caldwell) போல அரை வேக்காட்டுக் கொள்கைகளை மொழிவர் (நல்ல வேளையாக, கால்டுவெல் கூறிய கொள்கைகளை எல்லா தமிழறிஞர்களும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். தமிழன் துருக்கி (Mediterranean) பகுதியிலிருந்து வந்தவன், அவன் மொழிக்கும், சிதிய (Scthyan) மொழிக் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு என்றெல்லாம் அவர் உளறி வைத்தார். பகுத்தறிவுத் திராவிடங்கள் கூட அதை ஏற்கவில்லை).

  1. உலகில் சம்ஸ்கிருதத்துக்கு மிக நெருங்கிய மொழி தமிழ், தமிழுக்கு மிக நெருங்கிய மொழி சம்ஸ்கிருதம்; ஏனெனில் இரண்டு மொழிகளின் அகர வரிசை (Alphabetical order) , வேற்றுமை (Case suffixes) உருபுகள், சந்தி ( joining Rules) இலக்கணம் முதலியவற்றை வேறு எங்கும் காணமுடியாது. அப்படிக் கண்டால், அந்த மொழிகள் இவைகளிலிருந்த வந்த மொழிகளே!

4.தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் ஒரே கொள்கைகளை, வாழ்க்கை மூல்யங்களைப் (Values in life) பாராட்டுவதோடு (எ.கா.அறம், பொருள் இன்பம், இம்மை/மறுமை, வாய்மை), சில சொற்களை ஆதிகாலம் முதல் பகிர்ந்து (எ.கா. இருதயம், மனம், காமம்) கொள்கின்றனர். ஒரே மண்ணில், ஒரே சிந்தனையுடைய வர்கள் என்பதால்தான் இது சாத்தியமாயிற்று. இதற்கு முந்தைய கட்டுரைகளில் நிறைய உதாரணங்களைக் கொடுத்துவிட்டதால் மீண்டும் சொல்ல விரும்பவில்லை.

5.கடைசியாக மற்றொரு விஷயத்தையும் சொன்னேன்: ஆரியர்களும்- திராவிடர்களும் சந்திதபோது ஒலி மாற்றங்கள் (Sound changes) ஏற்பட்டதென்ற அரை வேக்காட்டு வாதங்களுக்கு பொருளே இல்லை. ஏனெனில் இவை தமிழ் மொழிக்குள்ளேயே எழுத்துக்கள் புணரும்போது (internal canges) இப்படி மாற்றம் அடைவதை இலக்கணப் புத்தகங்கள் காட்டுகின்றன; அதுமட்டுமல்ல, உலகில் பல இடங்களில் இப்படி மாற்றங்கள் நடந்து இருக்கின்றன (Odysseus= Ulysses; Ramadan= Ramalan= Ramzan ) என்பதையும் காட்டி, உலகிலுள்ள எல்லா பெரிய, முக்கிய மொழிகளும் தமிழ்-சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளில் இருந்தே வந்தன என்றும் சொன்னேன். இதனால்தான் தொல்காப்பியத்துக்கு நான்கு வேதங்களையும் கரைத்துக்குடித்த/ கரை கண்ட அதங்கோட்டு பிராமணன் “சர்ட்டிபிகேட்” கொடுத்தார் என்று பனம்பாரனார் எழுதிவைத்தார்.

sanskrit_alphabet_small_poster

தமிழன் காப்பி அடிக்கவில்லை

ஆகையால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பல ஒற்றுமைகளைக் காணும்போது யார் யாரிடருந்து “காப்பி” அடித்தனர் என்று கணக்குப்போடாமல், அவை எல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிறந்த சகோதரர்களின் ஒருமித்த சிந்தனைக்குச் சான்று பகரும் அற்புதக் குறிப்புகள் எனக் கொண்டால் ஐயங்கள் எழா!

தமிழில் கிடைத்த மிகப் பழைய நூலான தொல்காப்பியத்தை, தொல் பொருட் துறை, வரலாற்று, மொழியியல் அடிப்படையில் கி.மு முதல் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின் என்பர் அறிஞர் பெருமக்கள். இதே போல எகிப்திலுள்ள அமர்ணா லெட்டர்ஸ்/ கடிதங்கள் (Amarna Letters in Egypt), துருக்கிநாட்டு பொகஸ்கோய் (Bogazkoy) கல்வெட்டு, சிரியா நாட்டில் கிக்குலி (Kikkuli’s Horse Manual) எழுதிய குதிரை சாஸ்திரம், துருக்கி-சிரியாவை ஆண்ட தசரதன் – பிரதர்தனன்(Tusserata, paratartana) ஆகிய தொல்பொருட் துறைச் சான்றுகளால் சம்ஸ்கிருத மொழியை கி.மு.1400 க்கு முன் என்று வைப்பர். இவை அசைக்க முடியாத தொல்பொருட் துறைச் சான்றுகள் (archaeological evidence) என்பதால் யாரும் மறுப்பதில்லை!

சுருக்கமாகச் சொன்னால் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடைவெளி குறைந்தது 1400 ஆண்டுகள். ஆகையால் இரண்டு மொழிகளும் கிளைவிட்டுப் பிரிந்து இரண்டு ஆல மரங்களாக வளர்ந்ததில் – இரண்டு வெவ்வேறு மொழிகளாகப் பிரிந்ததில்— வியப்பொன்றுமில்லை.

உயிரெழுத்தும், மெய்யெழுத்தும்

வேதத்தில் பாடல்கள் உள்ள பகுதியை சம்ஹிதை என்பர்; அதைத் தொடர்ந்து வந்தது- பிராமணங்கள்; அதற்குப் பின் எழுந்தது ஆரண்யகங்கள்; கடைசியாக வந்தது உபநிஷத்துக்கள்.

தைத்ரீய ஆரண்யகம் என்ன சொல்கிறது என்று காண்போம் (2-3-4-1; 3-2-5-2):

உயிரெழுத்து என்பது நாள்; மெய் எழுத்து என்பது இரவு;

உயிரெழுத்து என்பது உள்ளுணர்வு; மெய் எழுத்து என்பது உடல்;

உயிரெழுத்து என்பது ஆகாசம்; மெய் எழுத்து என்பது பூமி.

உயிரெழுத்து என்பது எலும்பு மஜ்ஜை; மெய் எழுத்து என்பது எலும்பு.

என்று இரண்டுக்கும் உள்ள உறவை அழகாகப் பாடுகின்றனர். இதைத் தமிழர்கள், அகத்திய மகரிஷி தலைமையில் மேலும் அழகுபடுத்தி உயிர், மெய்/உடல், உயிர்மெய் என்று எழுதினர்.

letter

சம்ஸ்கிருதத்தில் சிறப்பான ஊஸ்ம (Sibilants) சப்தங்கள் உண்டு. அவை ச, ஸ, ஷ என்பன.

இவைகளையும் தைத்ரீய ஆரண்யக மந்திரம் சேர்த்துக் கொண்டு, அவைகளை உயிர் மூச்சு, காற்று மண்டலம் என்றெல்லாம் வருணிக்கும். ஆகவே இந்தக் கொள்கையின், “மூலம்” வேத இலக்கியங்களில் இருந்து வந்தது.

சாந்தோக்ய உபநிஷதத்தில் (2-22-5) உயிர் எழுத்தை இந்திரன் என்றும் ச,ஸ,ஷ எழுத்துக்களை பிரஜாபதி என்றும், மெய் எழுத்துக்களை யமன் என்றும் வருணிக்கும். இதன் பின்னுள்ள தத்துவ விளக்கங்களுக்குப் போகாமல் மேம்போக்காகப் பார்த்தாலும் மொழியியலை ஏன் இவ்வளவு பயன்படுத்தினார்கள் என்று வியப்போம். இன்னொரு இடத்தில் மூவகை எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்லி இலக்கண பாடம் நடத்தும்!!

இதில் மிக வியப்பான விஷயம்: சமய விஷயங்களில் கூட இலக்கணத்தையும், மொழியியலையும் புகுத்தியதாகும். உலகில் மிக முன்னேறிய நாகரீகம் வேத கால நாகரீகம். இதனால்தான் இலக்கண, இலக்கிய உவமைகளை மத விஷயத்தில் புகுத்தியுள்ளனர். மோஸஸ் என்பவர் பத்து கட்டளைகளைப் (Ten Commandments) பெறுவதற்கும் முன்னரே, கிரேக்க மஹா கவி ஹோமர் இலியட், ஆடிஸி (Homer’s Iliad and Odyssey)  ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதும் முன்னரே வேத கால இந்துக்கள் மொழியியல் (Linguistics) பற்றிப் பேசத்துவங்கிவிட்டனர் — உவமைகளாகப் பயன்படுத்தினர் — என்றால் அவர்களுடைய பேரறிவு எத்தகையது என்பதை நீங்களே எடைபோடலாம்.

வேத காலத்துக்கு நீண்ட நெடுங்காலத்துக்குப் பின் வந்த, உலகமே வியந்து போற்றும், மஹா கவி காளிதாசன் தனது ரகு வம்ச மஹா காவியத்தின் முதல் பாடலிலேயே பயன்படுத்தும் உவமை, இந்திய மக்களின் எழுத்தறிவினை உலகிற்கே பறை சாற்றும்:

வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் பிரதிபத்தயே

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதிபரமேஸ்வரௌ

பொருள்: சொல்லும் பொருளும் சேர்திருப்பவர் போல உலகத்திற்குத் தாய் தந்தையாக விளங்கும் பார்வதியையும் பரமேஸ்வரனையும் சொல், பொருள் இவைகளை அறியும் பொருட்டு வணங்குகிறேன்

இந்தியர்களின் மொழி அறிவு கண்டு – பாணினியின் இலக்கண நூல் கண்டு — உலகமே வியப்பது இதனால்தான்!!