
Post No. 9940
Date uploaded in London – 6 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இணையிலா இந்து மதம்!
ச.நாகராஜன்
ப்ரஸ்னம், சம்வாதம், உபதேசம் – கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இது தான் இணையிலா இந்து மதத்தின் தலையாய சிறப்புகளில் ஒன்றாகும்.
எந்த ஒரு சாஸ்திரத்தை எடுத்துப் பார்த்தாலும் அதற்கு ஆதி கர்த்தாவாக ஒருவர் இருப்பதையும் அவர் தான் கற்று உணர்ந்ததை வழுவாது அதை உண்மையுடனும் பக்தியுடனும் சிரத்தையுடனும் கேட்பருக்கு உபதேசிப்பதையும் காணலாம்.
நைமிசாரண்யத்தில் அல்லது அது போன்ற ஒரு தூய்மையான இடத்தில் பல முனிவர்கள் ஒன்று கூடி இருக்கும் தருணத்தில் சுகரை நோக்கி அவர்கள், எங்கள் முன்னோர்களின் சரிதத்தைச் சொல்லுங்கள் என்று வினயத்துடன் கேட்பதையும் மடை திறந்த வெள்ளம் போல வரலாறுகள் வந்து குவிவதையும் பார்த்து வியக்கிறோம் – பல புராணங்களில்!

ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களில் தான் எத்தனை கேள்விகள்!
நாரத மஹரிஷியைப் பார்த்து வால்மீகி முனிவர் கேட்கிறார் பல கேள்விகளை!
அதிலிருந்து தான் ராமாயணம் பிறக்கிறது.
இப்பூவுலகில் நற்குணம் உள்ளவனும், வீரியமுடையவனும், தர்மம் அறிந்தவனும், சத்தியம் பேசுபவனும், விடாமுயற்சியும் உடையவன் எவன்?
எல்லாப் பிராணிகளுக்கும் நன்மை நாடுபவன் எவன்?
எல்லாம் அறிந்தவன் எவன்?
முடியாத காரியங்களையும் முடிக்க வல்லவன் எவன்?
காண்பதற்கு இனியவனும், ஒப்பில்லாதவனுமாக இருப்பவன் எவன்?
தைரியமுடையவன் எவன்?
கோபத்தை அடக்கி தேஜஸ் உடையவனும் பொறாமை அற்றவனுமாக இருப்பவன் எவன்?
எவனுடைய யுத்தத்தினால் தேவர்களும் பயன் அடைவர்?
சரமாரியான இந்தக் கேள்விகளுக்கு நாரதர், “
இக்ஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனைஸ்சுருத: |
-இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ராமனே அவ்வித குணங்களை உடையவன்” என்கிறார்.
பிறகு வரிசையாக ராமனின் நற்குணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.
வியக்கிறோம், பிரமிக்கிறோம்.
வால்மீகியும் தனது பங்கிற்கு வியப்பதுடன் அல்லாமல் உலக நன்மைக்காக ராமாயணத்தை – ஆதி காவியத்தை – இயற்றுகிறார்.
மஹாபாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருக்கும் போது ஸ்ரீ
கிருஷ்ணர் தர்மரிடம் கேட்க வேண்டியவற்றை எல்லாம் இந்த ஞானச் செல்வத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்.
அதன் விளைவாக தர்ம சாஸ்திரங்கள் அனைத்தையும், அதில் நுட்பமான பல விஷயங்களையும் நாம் பெறுகிறோம்.
பார்வதி பரமேஸ்வரை நோக்கி, “ ஆயிரம் நாமங்களைப் படிக்க முடியாதவர்களுக்கு லகுவான உபாயம் (கேன லகு உபாயம்?) எதாவது இருக்கிறதா” என்று கருணை ததும்பிய உள்ளத்துடன் கேட்கிறார்:
கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் |
பட்யதே பண்டிதை நித்யம் ஸ்ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ ||
சிவபிரான்,
‘ஸ்ரீராம ராமராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” –
‘ராம நாமம் ஒன்றே ஆயிரம் நாமங்களுக்குச் சமம்’ என்று கூறி அருளுகிறார்.
மஹாபாரதத்தில் பார்வதி, பரமசிவனை நோக்கி, ஜென்மப் பிறப்புகள் பற்றியும் நல்வினை, தீவினை பற்றியும் கேட்க சிவபிரான் கர்மபலன் ரகசியங்களை அற்புதமாக எடுத்துரைப்பதைக் காண்கிறோம்.

ஷீர்டி சாயிபாபா அவரது அணுக்கத் தொண்டரான நானாவுக்கு (என்.ஜி.சந்தொர்கர் என்பது இயற்பெயர்) கீதையின் நான்காம் அத்தியாயம் 34வது ஸ்லோகத்திற்கு அற்புதமான விளக்கவுரை கொடுத்து அவரை பிரமிக்க வைத்தார்.
தத்வித்தி ப்ரதிபாதேன பரிப்ரஸ்னேன ஸேவயா மி |
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானிநஸ் தத்வதர்சிந: மிமி ||
ப்ரஸ்ன என்பதற்கும் மேலாக பரி ப்ரஸ்னம் என்ற வார்த்தையை ஏன் வியாஸர் உபயோகப்படுத்துகிறார்? முன்னேற்றம் மற்றும் முக்தியை அடைவதற்காகக் கேள்வியின் நோக்கம் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும். மேலும் கேள்விகள் மீண்டும் மீண்டும் முழுப்பொருளையும் உணரும் வரை கேட்கப்பட வேண்டும் அதாவது குடைந்து குடைந்து கேட்கப்பட வேண்டும். இதுவே பரிப்ரஸ்னம்! இப்படிப்பட்ட பரிப்ரஸ்னம் தூய்மையான நோக்கத்திற்காகக் கேட்கப்படும் போது அதற்கு அளிக்கப்படும் விடை பல கோடி மக்களுக்கு உபயோகமாகிறது!!
சம்வாதங்கள் – உரையாடல்கள் – என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் நமது புராண இதிஹாஸங்களில் அவற்றைக் காண முடிகிறது.
அவை தரும் ரகசியங்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளன.
முனிவர்களையும் தேவர்களையும் அவதாரங்களையும் உயரிய தெய்வங்களையும் தவத்தினாலும் பக்தியினாலும் சிரத்தையினாலும் கண்டு பலரும் அவர்களிடமிருந்து உபதேசம் பெற்றதைக் காண்கிறோம்.
இவை யுகம் கடந்து வந்து கோடிக்கணக்கானோருக்கு நல்வழி காட்டி அருள் பாலிப்பதைக் காண்கிறோம்.
இன்னும் இந்த சந்திப்புகளில் துதிகள் – ஸ்தோத்திரங்கள் – இடம் பெறுகின்றன.
அவற்றின் மஹிமையோ வர்ணனைக்கு அப்பாற்பட்டது.
உபநிடத ரகசியங்களோ ஏராளம். வேத ரகசியங்கள் இன்னொரு அற்புத களஞ்சியம்.
இவற்றையெல்லாம் தொகுப்பது என்பது மிகப் பெரிய காரியம்.
அன்றாடம் சிறிது நேரத்தைச் செலவழித்து இவற்றைப் படித்து அறிய , நலம் பிறக்கும்; வளம் சிறக்கும்!
***
INDEX
ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள், நாரதர், வால்மீகி, ஷீர்டி சாயிபாபா, நானா சந்தோர்கர், கீதை, அத் 4 ஸ்லோகம் 34, பரிப்ரஸ்னம்,பீஷ்மர், ஸ்ரீ கிருஷ்ணர், தர்மர், வேத, உபநிடத ரகசியங்கள். ப்ரஸ்னம், சம்வாதம், உபதேசம், ஸ்தோத்ரங்கள்,
TAGS- கேள்விகள், உரையாடல், அருளுரை,

You must be logged in to post a comment.