WRITTEN by London Swaminathan
Date: 17 DECEMBER 2017
Time uploaded in London- 15-37
Post No. 4508
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
நால் வேதங்கள் பற்றி கம்பன் பல இடங்களில் பாடியிருக்கிறான். சில இடங்களில் வேதங்களின் உயர்வு எவ்வளவு என்பதைக் காட்ட அவைகளை உவமையாகவும் பயன்படுத்துகிறான். ஒரு பொருளை உவமையாகப் பயன்படுத்துவதானால் அது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்க வேண்டும். கம்பன் பாடல்களில் இருந்து வேதம் பற்றித் தமிழர்கள் என்ன கருதினர் என்பதை அறிய முடிகிறது. கம்பன் நமக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன்.
புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்
என்னும் ஈது அருமறைப் பொருளே
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி
மாதவம் அறத்தொடு வளர்த்தார்
எண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்
ஏழ் உலகு ஆள் இடம் என்றால்
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு பாகம்
உறைவு இடம் உண்டு என உரைத்தல்
——பால காண்டம்
பொருள்
இப்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மறு பிறவியில் அடைவது சொர்க்கம் என்று சொல்லப்படும் இச் செய்தி அருமையான வேதங்கள் கூறும் உண்மைப் பொருளே ஆகும். இவ்வுலகில் இராமனைத் தவிர வேறு யார் தருமத்துடன் சிறந்த தவத்தையும் வளர்த்தார்கள்? நினைப்பதற்கும் அரிய நற்குணங்களின் நாயகனான இராமன், இனிமையாக வீற்றிருந்து இந்த ஏழு உலகங்களையும் ஆளுகின்ற நகரம் அயோத்தி. இதைக் காட்டிலும் சிறந்த எல்லாப் போகங்களுக்கும் இருப்பிடமான வேறோர் உலகம் உள்ளது என்று சொல்ல முடியுமோ முடியாது.
‘புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்’ (சுவர்க்கம்)- என்பது அருமையான வாசகம்; இது வேதத்தின் சாரம் என்று கம்பன் மொழிவதும் சிறப்பு.
xxxxxxxxxxxxx
காலத்தால் அழியாத மறை!
தாள்படாக் கமலம் அன்ன தடங் கணான் தம்பிக்கு அம்மா
கீழ்ப்படா நின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும்
நாட்படா மறைகளாலும் நவைபடா ஞாநத்தாலும்
கோட்படாப் பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான்.
கிட்கிந்தாக் காண்டம், அனுமப் படலம்
பொருள்
காம்பை விட்டு நீங்காத செந்தாமரை மலர்களைப் போல பெரிய கண்களையுடைய இராமன், தம்பியான இலக்குவனுக்கு, ஐயனே! கால எல்லைக்குட்படாத, கீழ் நிலைக்குத் தாழாத, ஒளியில் குறைவில்லாத, அழியாத வேதங்களாலும், குற்றம் உண்டாக இடமில்லாத அறிவாலும் கொள்ளப்படாத தத்துவ நிலையே இந்தக் குரங்கின் வடிவத்தில் வந்துள்ளதாகும் என்று இராமன் வியந்து சொன்னான்.
அதாவது ‘காலத்தால் அழியாத உயர்ந்த வேதம்’ என்று வேதம் புகழப்படுகிறது.
xxxxx
வேதத்தின் உயர்வு
மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்
வேதமும் ஒக்கும் விண்புகலால்
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்
திண்பொறி அடக்கிய செயலால்
காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்
சூலத்தால் காளியை ஒக்கும்
யாவரும் தன்னை எய்துதற்கு அரிய
தன்மையால் ஈசனை ஒக்கும்
—–பாலகாண்டம்
பொருள்:
அந்த மதில், அறிவினால் முடிவு காண முடியாதிருப்பதால் வேதங்களை ஒத்திருக்கும்;
விண்ணுலகத்தை எட்டுவதால், தேவர்களை ஒத்திருக்கும்;
போர்ப்பொறிகளை தன்னுள் மறைத்து வைத்திருப்பதால் முனிவர்களை ஒத்திருக்கும்;
காவல் தொழிலில் கலைமானை வாஹனமாக உடைய துர்கா தேவியை ஒத்திருக்கும்;
தன் சிகரத்தில் இடி தாங்கி ஆகிய சூலத்தைப் பெற்றிருப்பதால் காளியை ஒத்திருக்கும்;
யாரும் தன்னை அணுக முடியாத நிலையில் ஈசனை ஒத்திருக்கும்.
நல்ல கற்பனை! அயோத்தி மாநகரின் மதிலை வர்ணிக்க வந்த கம்பன் அதன் உயர்வு பற்றி ஒப்பிடுகையில் அறிவினால் முடிவே காண முடியாத வேதங்களுக்குச் சமம் என்கிறான்.
இந்தப் பாடலில் உள்ள விஞ்ஞான விஷயமான இடிதாங்கி பற்றியும் துர்கையின் வாஹனமான கலைமானுடன் இந்தியா முழுதும் எங்குமே துர்கை சிலை கிடைக்காதது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன். கலைமகளின் வாஹனம் மான் என்று தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் பாடிப் பரவியபோதும் ஓரிடத்திலும் இப்படிப்பட்ட சிலை கிடைக்காதது அதிசயமே. முஸ்லீம் படைகள் அடித்து உடைத்த சிலைகளில் இதுவும் அடக்கம் போலும்.
xxxxxxxxxxxx
வேதம் பொய்க்குமோ?
அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இந்
நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே
வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ
இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள்
–சடாயு உயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம்
பொருள்:
துன்புற்ற என்னிடம் வந்து அஞ்சாதே என்று தைரியம் சொன்னவனான ஜடாயு தோல்வி அடைவதா? நரகத்துக்கு உரியவனான இராவணன் வெற்றி அடைவதா? தருமம் வெல்லும் என்று வேதங்கள் கூறுவது பொய்யாகுமோ? பாவம் வெற்றி பெறுமா? இந்த ஊரில் தர்மம் என்பது இல்லாமல் போய்விட்டதா? என்று சீதை புலம்பினாள்
இதில் நாம் கவனிக்க வேண்டியது ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற கருத்தாகும். இதைக் கம்பன் மேலும் சில இடங்களில் வலியுறுத்துகிறான். இது வேதம் சொல்லும் கருத்து என்பது இந்துக்களின் நம்பிக்கை.
xxxxx
வேத பாராயணம்
கிட்கிந்தா காண்டத்தில் கிட்கிந்தைப் படலத்தில் ஒரு காட்சி வருகிறது:
அருக்கிய முதல வான அருச்சனைக் கமைந்தயாவும்
முருக்கிதழ் மகளிர் ஏந்த முரசு இனம் முகிலின் ஆர்ப்ப
இருக்கு இனம் முனிவர் ஓத இசை திசை அளப்பயானர்த்
திருக்கிளர் செல்வம் நோக்கித் தேவரும் மருளச் சென்றான்
பொருள்:
கலியாண முருக்க மலரைப் போன்ற சிவந்த உதடுகளை உடைய வானர மகளிர் , அர்க்யம் முதலாக உள்ள அர்ச்சனைக்கு அமைந்த அனைத்தையும் கைகளில் ஏந்தி வரவும், பேரிகை முதலிய கருவிகள் இடி போல ஒலிக்கவும், முனிவர்கள் இருக்கு வேதம் முதலான நால் வேதங்களையும் பாராயணம் செய்தபடி வரவும், இசை எல்லாத் திசைகளிலும் பரவும், புதிய செல்வச் சிறப்பைக் கண்டு தேவர்களும் திகைக்குமாறு, சுக்ரீவன், இலக்குவனின் எதிரில் சென்றான்.
வானர சாம்ராஜ்யத்திலும் வேத பாராயணம் செய்யும் முனிவர்கள் இருந்ததும், அவர்கள் நாகரீகமிக்க சமுதாயத்தில் உள்ளதைப் போலவே மன்னன் பவனியில் வேத பாராயணம் செய்தவாறு வந்தனர் என்பதும் நல்லதொரு காட்சி.
எங்கள் மதுரையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருவீதி உலா வருகையில் இது போல பிராமணர்கள் வேத பாராயணம் செய்தவாறு வருவர். பின்னால் ஓதுவா மூர்த்திகள் தேவாரம், திருவாசகத்தை ஓதியவாறு வருவர்.இது கிட்கிந்தையிலும் நடந்தது!
உபநிடதம், வேதாந்தம் பற்றியும் பல பாடல்களில் பேசுகிறான் கம்பன்; அவைகளைத் தனி ஒரு கட்டுரையில் தருவேன்.
TAGS:– கம்பன், வேதம், உவமை, உயர்வு, பொய், நாட்படா மறை
–SUBHAM—
You must be logged in to post a comment.