உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

kuruvi on kambi

Written by London Swaminathan

Article No.1761;  Dated 31 March 2015.

Uploaded at London time 9-00 (GMT 8-00)

பழமொழிக் கதைகள்!

ஆதாரம்: விவேக சிந்தாமணி, சென்னை சி.வி. சாமிநாத அய்யர் நடத்திய மாதப் பத்திரிக்கை, ஜூலை மாதம்- 1900—ஆம் ஆண்டு

 

ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தான். அவன் மஹா கஞ்சன். எவ்வளவோ பணம் இருந்தும் அவனுக்கு ஊரில் நல்ல பெயர் இல்லை. ஒரு தந்திரம் செய்தான். ஒரு பெரிய மாளிகை கட்டி அதில் பத்து வாசல்கள் வைத்தான். ஒவ்வொரு வாசலுக்கும் எண்ணை (நம்பர்) எழுதி அந்த எண் படி பணம் தரப்படும் என்ற விநோத அறிவிப்பை வெளியிட்டான். ஒரு சந்யாசிக்கு இவனுடைய தந்திரம் புரிந்தது. இவன் உண்மையான கொடையாளி அல்ல. பெயர் எடுப்பதற்காக இப்படிச் செய்கிறான் என்று எண்ணினார். அவனை அம்பலப்படுத்த எண்ணம் கொண்டு ஒரு தந்திரம் செய்தார்.

அவர் முதல் வாசல் வழியாகச் சென்று ஒரு ரூபாய் தானம் பெற்றார். இரண்டாவது வாசல் வழியாகச் சென்று இரண்டு ரூபாய், மூன்றாவது வழியாகச் சென்று மூன்று ரூபாயென்று பத்து வாசல் வழியாவும் சென்று 55 ரூபாய் பெற்றார். கப்பல் வியாபாரிக்கு ஒரே எரிச்சல்.

பின்னர் இரண்டாவது முறை முதல் வாசலில் நுழைந்தார். கப்பல் வியாபாரி கோபத்தில் கத்தினான்: நீ எல்லாம் ஒரு சந்யாசியா? பணத்தின் மீது இவ்வளவு ஆசை ஏன்? சீ! சீ! வெளியே போ – என்றான். உடனே சந்யாசி சிரித்துக் கொண்டே உன் உண்மை ஸ்வரூபத்தைக் கட்டி விட்டாயே. உன்னை அம்பலப்படுத்தவே நான் இப்படி வந்தேன். இந்தா நீ கொடுத்த 55 ரூபாய் என்று அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டுப் போனார். இந்தச் செய்தி ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது.

kuruvi,fb

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

ஒரு ரூபாய், ஒரு ரூபாயாக எடுத்துக் கொடுத்தாலும் கஞ்சப் பிரபு, கொடையாளி ஆக முடியுமா? என்று ஊரே சிரித்தது.

வான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடிய கதையாக முடிந்தது.

brahmin

சீவரத்துப் பார்ப்பான் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான்

காஞ்சிக்கு அருகில் 300 ஆண்டுகளுக்கு முன் சீவரம் என்னும் ஊரில் ஒரு பிராமணன் வசித்து வந்தார். அவருக்கு திடீரென ஹரிஜனங்களுடன் சேர்ந்து வசிக்க ஆசை வந்தது. வேதம் ஓதுவதை கைவிட்டு அவர்கள் சேரிக்குச் சென்று ஒரு குடிசை போட்டு வசிக்கலானார். பிராமணர்களுக்கு அவர் மேல் கடுங் கோபம். ஆகையால் அவரை ஜாதிப் ப்ரஷ்டம் (விலக்கி வைத்தல்) செய்தனர். சேரியில் உள்ள பள்ளர்கள் பறையர்களோவெனில் இவரை கொஞ்சம் தள்ளியே வைத்தனர். அவர் கதை இரண்டுங் கெட்டான் நிலை ஆனது.

இரு ஜாதியினரும் விலக்கி வைக்கவே அவர் ஆற்றோரமாக ஒரு குடிசை போட்டு வசித்தார். வயதானபோது யாரும் அருகாமையில் இல்லாமல் இறந்தார். இப்பொழுது இவருடைய உடலை அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்று சர்ச்சை எழுந்தது. பிராமணர்களோ, ஹரிஜனங்களோ இறுதிச் சடங்கை முன்னின்று நடத்த விரும்பவில்லை.

ஊர்ச் சபையார் வேறு வழியின்றி அருகாமைக் க்ராமத்தில் இருந்து ஒரு குயவனை அழைத்து வந்தனர். அவன் ஈமக் கிரியைகளை செய்துவிட்டுப் போனான். இதிலிருந்து ஒரு பழமொழி உருவானது: சீவரத்துப் பார்ப்பான் இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்!

(படங்கள் பல்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன;நன்றி)