எகிப்திய, சுமேரிய கனவுகளும் இந்துமத கனவுகளும்

gudea

குடியா, சுமேரியன்

Article No. 2072

Written by London swaminathan

Date : 15  August  2015

Time uploaded in London :–  13-17

(Pictures are used from various sources)

இந்து மதத்தில் உள்ளது போலவே, கிரேக்க, சுமேரிய, எகிப்திய நாகரீகங்களிலும் கனவுகள் பற்றி நம்பிக்கைகள் உள. இவைகளையும், நான் முன்னரே பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் குறிப்பிட்ட பல்வேறு துறை விஷயங்களையும் கருத்திற் கொண்டால், நம்முடைய கலாசாரத்தின் தாக்கம் நன்கு புலப்படும். ரிக் வேத காலத்தில், கங்கை, சிந்து, சரஸ்வதி நதி தீரங்களிலிருந்து இந்துக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றபோது இக்கருத்துகள் பரவியிருக்க வேண்டும். ஆனால் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994), உலகம் முழுதும் ஒரு காலத்தில் சநாதன தர்மமே இருந்தது அதன் எச்ச சொச்சங்களும், மிச்ச மீதிகளும் இன்று உலகம் முழுதும் காணக் கிடக்கின்றன என்று கூறுகிறார். அதுவும் சரியென்றே தோன்றுகிறது.

சில ஒப்பீடுகளை மட்டும் காண்போம்:

1.கனவுகளுக்குப் பொருள் கூறும் ஒரு நூல் 1800 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் ஆர்டிமிடோரஸ் என்பவரால் (Five books of the Oneirocriticon by Artemidorous of Daldis , 2nd century CE) எழுதப்பட்டது. அதில் கனவுகளை எதிர்காலம் உரைக்கும் நேரடிக் கனவுகள், விளக்கம் தேவைப்படும் உருவகக் கனவுகள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார். இரண்டாவது வகைக் கனவுகளுக்கு விளக்கம் தேட இப்புத்தகங்கள் உதவும். நாமும் வியாழ பகவான் இயற்றியதாக ஒரு புத்தகம் வைத்துள்ளோம். முன்னரே இதன் விவரங்களைக் கொடுத்துள்ளேன்.

ramesses

ராம்செஸ், எகிப்து

எகிப்திய நம்பிக்கைகள்

எகிப்து நாட்டில் ராம்செஸ் (ராமசேஷன்) என்ற பெயரில் 13 மன்னர்கள் ஆண்டனர். அவரது கால பபைரஸ் காகிதத்தில் (Ramesses Period ,1292- 1075 BCE) எழுதப்பட்ட கனவு பற்றிய விஷயங்கள் பின்வருமாறு:

1.ஒரு மனிதன் தன் கையாலேயே ஒரு எருதை அடித்துக் கொல்வதாகக் கனவு கண்டால் நல்லது. அவனுடைய எதிரி அழிவான் என்பது இதன் பொருள்.

2.முதலை மாமிசத்தை உண்பதாகக் கனவு காண்பதும் நல்லதே. அதாவது நீங்கள் அதிகாரி போல செயல்படுவீர்கள் என்பது இதன் பொருள்.

3.ஒரு நதியில் மூழ்குவது போலக் கனவு கண்டால் உங்கள் தீமைகள் அழிந்தன என்று பொருள். (நதிகளில் குளித்தால் பாவங்கள் அழியும் என்ற இந்துக்களின் நம்பிக்கையின் தாக்கம் இது).

4.வயதான ஒருவரைப் புதைக்கும் கனவு, வளம் கொழிக்கும், செழிக்கும் என்பதைக் குறிக்கும்

5.உங்கள் முகத்தையே கண்ணாடியில் பார்த்தால் வேறொரு மனைவி வரப்போகிறாள் என்று அர்த்தம்

6.வெள்ளை நிறச் செருப்புகள் அணிவதாகக் கனவு கண்டால் நீங்கள் உலகம் சுற்றும் வாலிபராகப் போகிறீர்கள்.

7.ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதாகக் கனவு கண்டால் துக்கச் செதி வரும் என்று பொருள்.

8.நாய் கடிப்பதாகக் கனவு கண்டால் நல்லதல்ல. உங்கள் மீது யாரோ ஏவல் பில்லி சூனியம் வைப்பர்.

9.படுக்கை எரிவதாகக் கனவு கண்டால், உங்கள் மனைவியை விரட்டியடிப்பீர்கள் என்று அர்த்தம்.

இவ்வாறு பல விஷயங்களை 3200 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர் எழுதி வைத்தனர். பெரும்பாலான கனவு விளக்கங்கள் கணவன்-மனைவி பற்றியே உள்ளன!!

கனவுகளை, “கடவுள் அனுப்பும் செய்திகள்” – என்று எகிப்தியர் நம்பினர். நம்மைத் தொடர்புகொள்ள கடவுள் – கனவுகளைப் பயன்படுத்துவதாக எண்ணினர். மதுரை ஆதீன கர்த்தர் எழுதிய புத்தகத்தில் (இறந்தவர்கள் வாழும் நிலையும் அவர்களுடன் தொடர்புகொள்ளும் முறையும்), வீட்டில் நடக்கப்போகும் விபத்துகள், திருட்டுகள் குறித்து இறந்த ஆவிகள் கனவில் வந்து சொல்லிய செய்திகள் உள்ளன. அவற்றை எகிப்திய நம்பிக்கைகளுடன் ஒப்பிடுவது பொருத்தம்

கோவிலில் தூங்கினால் கடவுள் அனுப்பும் செய்திகள் கிடைக்கும் என்று எகிப்தியர்களும் சுமேரியர்களும் நம்பினர். நமது நாட்டில் தேவார மூவர் கண்ட பல கனவுகள் சிவன் கோவிலில் தூங்குகையில் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துமத அடியார்கள் எல்லோர் கதைகளிலும் கடவுள் பற்றிய கனவுகள் வருவதையும், புத்தர், மஹாவீரர் பிறப்பதற்கு முன்னர் அவர்களுடைய தாயார்கள் கண்ட கனவுகளையும் முன்னரே தந்துள்ளேன்.

சீனர்கள் மட்டும் கனவுகளுக்கு எதிர்மறைப் பொருள் கண்டார்கள். அதவது நீங்கள் இறப்பதாகக் கனவு கண்டால், உங்களுக்கு வாழ்நாள் மிக அதிகம் என்று பொருள்!

கிறிஸ்தவ மத நூலான பைபிளிலும் கனவுகள் பற்றிய பல குறிப்புகள் உண்டு. சாலமன் என்னும் மன்னனுக்கு கனவு மூலம் கடவுள் செய்தி அனுப்புகிறார். எகிப்திய மன்னனுக்கு தீய கனவுகளைக் கடவுள் உண்டாக்குகிறார். நிறைவேறாத ஆசைகள் கனவுகளாக வரும் என்ற பொருளும் உள்ளது (Genesis 41, Psalm 73:20,  1King 3:5).

gilgalouvre

ஜில்காமேஷ், சுமேரியா

சுமேரிய நம்பிக்கைகள்

சுமேரியர்களும் கடவுள் அனுப்பும் செய்திகளே கனவுகள் என்று நம்பினர். லகாஷ் நகர மன்னன் குடியா (குரு தேவ), கடவுளுக்கு ஒரு கோவில் எழுப்பு என்று தனக்குக் கனவில் உத்தரவு வந்ததாக 4000 ஆண்டுகளுக்கு முன் களிமண் பலகையில் எழுதி வைத்துள்ளார். இந்து மத அடியார்கள் எண்ணற்றவர்களின் கனவில் இப்படி உத்தரவு வந்ததை நாம் அறிவோம். குடியாவுக்கு உத்தரவு கொடுத்த கடவுளும் சிவபெருமானே! அந்தக் கடவுள் பெயர் கிரீசன். சுமேரிய மொழியில் நிங்கிரிசு என்பர். நின் என்றால் திரு என்று பொருள் (நின்+கிரிச).

உலகின் மிகப் பழைய காவியம் என்று மேலை நாட்டினர் நம்பும் ஜில்காமேஷ் காவியத்தில் அவருக்கு வந்த கனவுகள் பற்றி உள்ளன.

நினவே நகரில் அஷுர் (அசுர) பனிபால் வைத்திருந்த நூலகத்தில் கனவுகள் பற்றிய பல களிமண் பலகைத் துண்டுகள் கிடைத்தன. அதில் மன்னர் தான் கண்ட இஷ்டார் என்னும் தேவதையின் கனவு பற்றி எழுதி இருக்கிறார். கனவுகளுக்குப் பொறுப்பான மாமு என்னும் தேவதைக்கு அவர்கள் கோவிலும் கட்டிவைத்தனர்.

வேத, சுமேரிய, எகிப்திய, கிரேக்க, பைபிள் கனவுகளில் ஒரே அணுகுமுறை இருப்பது ஆய்வுக்குரியது.


My previous Research Articles on Dreams:

Role of Dreams in Tamil Saivite Literature (posted on July 4, 2013)

Do our Dreams have Meaning? (Posted on December 29, 2011)

God’s Note Book (posted on March 16, 2014)

Strange Dreams, posted on 27 July 2015Inauspicious Dreams: Dreams in Vedas and Upanishads, Posted on 28th July 2015

Vedic Echo in Sumerian and Egyptian Concept of Dreams, Posted 31 July 2015

விநோதக் கனவுகள், ஆகஸ்ட் 4, 2015

சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுனப் பயணம் (பிப்ரவரி 4, 2015) – (எஸ். நாகராஜன் எழுதியது)

வித்தியாசமான விஞ்ஞானி யுங் (எஸ். நாகராஜன் எழுதியது)

வேத உபநிஷத்துகளில் கனவுகள், ஆகஸ்ட் 6, 2015