Picture of Ramesses III with Gods Horus and Seth
Written by London swaminathan
Date: 16 March 2017
Time uploaded in London:- 10-57 am
Post No. 3729
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்திய வரலாற்றில் இரண்டு மன்னர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எகிப்திய மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் யாரும் வரலாற்றை எழுதவில்லை. அவர்களுக்கு 3000 ஆண்டுகளுக்குப் பின் — மனீதோ என்பவர் எழுதிய வரலாற்றைத் தான் நாம் நம்பவேண்டி இருக்கிறது. அந்த மனீதோவின் புத்தகமும் முழுதாகக் கிடைக்கவில்லை. அவர் சொன்னார் என்று பின்னர் எழுதிய குறிப்புகளில் இருந்தே வரலற்றைப் பிழி ந்து எடுக்க வேண்டியுள்ளது. இருந்த போதிலும் இரண்டு மர்மக் கொலைகள் துப்பறியும் கதைகள் போல இருக்கும்.
பழங்கால இந்திய வரலாற்றைத் தவிர வேறு எந்த நாட்டிலும் மன்னர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புராண வரலாற்றில் மட்டும் இப்படி மன்னர் படுகொலைகள் கிடையாது. ரோமானிய, மொகலாய வரலாறுகளில் ஒருவரை ஒருவர் கொன்று அரசாட்சியைப் பிடிப்பது சர்வ சாதாரணமாக நிகழ்ந்தது. (பழங்கால இந்தியாவில் கிரேக்கர்கள் புகுந்த காலம் முதல் படுகொலைகள் நிகழ்ந்தன)
மூன்றாம் ராம்செஸ் (RAMESSES III )
மூன்றாம் ராமசெஸ் Ramesses III (1183-1154 BCE) (ராமசேஷன் அல்லது ரமேசன்) மன்னர் படுகொலை செய்ப்பட்டிருக்கலாம் என்பது எகிப்தியவியல் (Egyptologists) அறிஞர்களின் கருத்து.
மூன்றாம் ராமசெஸ் புதிய ராஜ்யத்தின் கடைசி அரசர்; எகிப்தின் எல்லைகளையும், கோவில்களையும் பாதுகாத்த பெருமையுடையவர். ஆனால் இவர் அகால மரணம் அடைந்தவர் என்பது பின்னால் வந்த குறிப்புகளில் இருந்து தெரிகிறது. சதிகாரர்கள் விசாரிக்கப்பட்டது தண்டிக்கப்பட்டது பற்றிய ஒரு பேப்பர் கிடைத்துள்ளது.
( Papyrus பபைரி என்ற புல்லில் எகிப்தியர் எழுதியதால் பிற்கலத்தில் PAPER பேப்பர் என்ற ஆங்கிலச் சொல் வந்தது)
அரசனுக்கு பல மனைவியர் உண்டு. ஆயினும் இந்தியா போல ஒருவள்தான பட்டத்து மஹிஷி (மஹாராணி). இது பிடிக்காத ஒரு அந்தப் புரத்து அழகி (குட்டி ராணி) அரண்மனை அதிகாரிகளுடன் சேர்ந்து மன்னனுக்கு எதிராக சதி செய்தாள். மன்னரின் ஒரு மகனைப் பதவியில் அமர்த்துவது அவர்களுடைய திட்டம். அவர், சதிகாரர்களின் கைப்பாவையாகச் செயல்படுவார் என்று நினைத்தனர்.
டூரின் பபைரஸ் (Turin Papyrus) குறிப்புகளில் 40 சதிகாரர் பெயர்கள் இருக்கின்றன. உயர் பதவி வகித்த ஆண்களும் பெண்களும் இதில் அடக்கம். மேற்கு தீப்ஸ் (West Thebes) நகரில் அரண்மனையில் இந்தக் கொலை நடந்திருக்கிறது. அவருக்குப் பின்னர் நாலாவது ராமசெஸ் பதவி ஏற்றார். சதிகாரர் கள் 40 பேரும் கொல்லப்பட்டனர். இதில் என்ன வேடிக்கை என்றால் பிடிபட்ட ஆட்களின் பெயர்கள் எல்லாம் கெட்ட பெயர்களாக மாற்றப் பட்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக நல்ல சாமி, மாடசாமி என்று இருவர் பிடிபட்டால் அவர்கள் பெயரை எழுதும்போது கெட்ட சாமி, மூட சாமி அல்லது மடச் சாமி பிடிபட்டான் என்று எழுதிவைத்துள்ளனர். இது அவர்களுடைய கோபத்தின் வெளிப்பாடா அல்லது அப்படி எழுதும் ஒரு மரபு இருந்ததா என்பதை நாம் அறியோம்.
ஒருவன் பெயர் மெரி ரே (ரே என்னும் கடவுளுக்குப் பிரியமானவன்; நாம் ராமப் ப்ரியா என்று பெயர் வைப்பது போல). ஆனால் அதை அவர்கள் மெசூத்ரே (ரேயால் வெறுக்கப்படுபவன்) என்று மாற்றி எழுதியுள்ளனர். பபகேனமுன் (அமன் என்னும் கடவுளின் தாசன்) என்பதை பபகாமன் (குருட்டு தாசன்) என்று எழுதிவைத்துள்ளனர். இப்படி சதிகாரகளின் பெயர்கள் எல்லாவற்றையும் திரித்து எழுதி இருக்கின்றனர்.
“அந்தப்புர அழகிகளுடனும் தியா (Tiye) என்ற ராணியுடனும் சேர்ந்து சதி செய்த குற்றத்திற்காக பெரும் எதிரி பபகாமன் கொண்டுவரப்பட்டான். எஜமானருக்கு எதிராக ‘மக்களே ஒன்று சேருங்கள், விரோதமாகப் போங்கள்’ என்று அவன் குரல் கொடுத்தான். ஆகையால் அவனை விசாரணை மன்றத்திலுள்ள நீதிபதிகள் முன் நிறுத்தினர். அவர்கள் அதைத் தீர விசாரித்து அவன் குற்றம் இழைத்ததைக் கண்டுபிடித்தனர். அவனுக்கு அதற்குரிய தண்டனை கிடைத்தது” — என்று தஸ்தாவேஜுகள் காட்டுகின்றன.
சாக்ரடீஸ் போல அவர்களை விஷம் குடிக்க வைத்தனர் என்று ஊகிக்கப்படுகிறது. அவனுடன் சேர்ந்த உப சதிகாரகளின் மூக்கும் காதும் வெட்டப்பட்டன.
சதி பற்றிச் சொல்லும் பேப்பர் குறிப்பு சதி வெற்றி பெற்றதா, அதனால்தான் மன்னன் இறந்தானா என்பதை தெளிவாகச் சொல்லவில்லை.
உலகின் முதல் ஸ்டிரைக்
உலகிலேயே நடந்த முதல் தொழிலாளலர் வேலை நிறுத்தமும் ராமசெஸ் (கி.மு.. 1184- 1153-க்கு இடைப்பட்ட காலம்) காலத்தில்தான் நடந்தது. தேரி எல் மெடினா (Deir El Medina) என்ற இடத்தில் தொழிலாளர்கள் ஸ்டிரைக் செய்ததை எழுதி வைத்துள்ளனர்.
Picture of Amenemhet I
அமனெம்ஹேத் Amenemhet (சமணகேது)
இதைவிட மர்மமான மரணம் அடைந்தவன் அமனெம்ஹேத் . இவன் 12 ஆவது வம்ச ராஜா. கி.மு.1985 முதல் 1985 வரை ஆண்டவன். இவனும் அந்தப்புர அழகிகளின் சதியால் உயிரிழந்தான். அவனுக்குப் பின்னர் அவன் மகன் சம்வர ச்ரேஷ்டன் (Senwosret) பதவிக்கு வந்தான். முதலில் 11ஆவது வம்ச ஆட்சியில் பெரிய அதிகாரியாக (Vizier) இருந்தவன். இவன் வேலை பார்த்த ராஜா மண்டூகதேவன் (Montuhotep IV) எப்படி மரணம் அடைந்தான், பின்னர் இப்படி இந்த அதிகாரி பதவி ஏற்றான் என்பதெல்லாம் வரலா ற்றின் தீர்க்கப்படாத புதிர்கள்!
இவனுடைய கதை நெபெர்தி (நவ ரதி )ஆருடம் (Nefert Prophecies) என்ற இலக்கியக் குறிப்பிலிருந்து கிடைக்கிறது. நாலாவது வம்ச ராஜாவான ஸ்நோப்ரு (Snofru) காலத்தில் இந்த ஜோஸியம் சொல்லப்பட்டதாக பிற்கலத்திலெழுதப்பட்ட குறிப்பு இது
நமது இந்துப் புராணங்கள் எல்லாவற்றிலும் வம்சாவளி என்ற பகுதியில் முடிந்த, இறந்து போன மன்னர்களின் ஆட்சிக் காலத்தைக் குறிப்பிட்டு இவர்கள் எல்லாம் ஆளப் போகிறார்கள் என்று வருங்கால ஆரூடம் போல எழுதியிருப்பர். அதே பாணியில் நடந்து போன நிகழ்ச்சிகளை இனி நடக்கப் போவதாக எழுதப்பட்ட ஜோதிடப் புத்தகம் நவரதி ஆரூடம்.
இதில் சமண கேது பற்றி எழுதி இருக்கும் பகுதி சுவையானது:
தெற்கிலிருந்து வருவான் ஒரு மன்னன்
அவன் பெயர் அமன என்ற ஒலியில் அமையும்
அவன் கத்திக்கு இரையாவர் ஆசிய மக்கள்
அவன் எழுப்பும் தீயில் விழுவர் லிபிய மக்கள்
கலகக்காரர்கள் கோபம் அடைவர்
அவர்கள் மன்னனுக்கு அச்சத்தை உண்டாக்குவர்
ஒழுங்கு அதன் இடத்தைப் பிடிக்கும்
சட்டச் சீர்குலைவு பற ந்தோடிப் போகும்.
நம்ம ஊர் குடுகுடுப்பைக்காரன் ஆரூட பாணியில் எழுதப்பட்ட இவ்வசகம் நாத்ரதாமஸ் ஆரூடம் போன்றது. யார் எப்படி வேண்டுமானாலும் ஜவ்வாக இழுத்து மனம்போனபோக்கில் அர்த்தம் சொல்லலாம்.
அமனகேது அந்தப்புர சதியில் சிக்கியதை வேறு சில எழுத்துகளும் உறுதி செய்கின்றன அதன் பெயர் அமனகேது கட்டளைகள் (Instructions of Amenemhet). அந்தக் குறிப்பில் சொல்லப்படிருப்பதாவது:
இரவுச் சாப்பாடு முடிந்தது; இருள் சூழ்ந்தது
நான் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்தேன்
படு களைப்பு எனக்கு; படுக்கையில் விழுந்தேன்;
என் இதயம், உ றக்கத்தின் பாதையில் அடி வைத்தது
திடீரென்று இரைச்சல்; விழித்தேன் சண்டையில்
மெய்க்காவலன் தாக்குதல் அதுவே
என் கைகளில் விரைவில் ஆயுதம் வந்திருந்தால்
கோழைகளை ஓட வைத்திருப்பேன்
அந்தோ! அவ்விரவில் வலுவானவர் இலையே
தனிமையில் சண்டை செய்யும் எவருமிலர்
பாதுகாப்பற்றவன் வெற்றி அடைவது எங்கனம்?
இதற்கு முன் அந்த மன்னன், தனது மகனுக்கு நல்லாட்சி நடத்துவது எப்படி என்ற பகுதிகள் உள்ளன. வால்மீகி ராமாயண த்தில் நல்லாட்சி பற்றி வசிட்டர் சொன்ன அருளுரைகள் போன்றது அப்பகுதி.
இதெல்லாம் நடந்து 1600 ஆண்டுகளுக்குப் பின்னர் எகிப்திய வரலாற்றை முதல் முதலில் எழுதிய மனீதோவும் இந்த மன்னன் 38 ஆண்டுகள் ஆண்டான் என்றும் , அவன் தனது சொந்த அலிகளால் கொல்லப்பட்டான் என்றும் எழுதி வைத்துள்ளார். இந்தியாவிலும் எகிப்திலும் அந்தப் அந்தப்புரத்தில் அலிகளையும் குள்ளர்களையும், கூனர்களையும் வேலைக்கு அமர்த்துவர். அப்படிப்பட்ட கூனி ஒருவள்தான் ராமாயணக் கதயையே உருவாக்கினாள்:அவள் பேச்சைக்கேட்டு மயங்கிப் போனாள் கைகேயி!
–சுபம்–