Article Written S NAGARAJAN
Date: 29 July 2016
Post No. 3017
Time uploaded in London :– 6-45 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
29-7-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்!
ச.நாகராஜன்
“மனதில் நினைப்பதை அறிவது என்பது குழந்தைகளின் மாயாஜாலக் கதைகளிலிருந்து இப்போது நிஜமாக ஆகிறது’ – டெய்லி மெயில் பத்திரிகை
உலகம் மாறுகிறது! வேகமாக!! விளையாட்டாக முன்பு பேசியதெல்லாம் வினையாக ஆகிறது.
‘ஆமாம், இவரு நாம நினைச்சதை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாரில்லை!’ என்று கேலியாகப் பேசியதெல்லாம் பழைய கதையாக ஆகி விடப் போகிறது.
ஒருவர் என்ன நினனக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வது மட்டுமில்லை. அதை திரையிலும் பார்க்க முடியும், இனிமேல்!
அறிவியல் காட்டும் அற்புதங்களில் இதுவும் ஒன்றாகச் சேரப் போகிறது!
அமெரிக்காவில் புரட்சிகரமான கண்டுபிடிப்பு வரிசைகளில் ஒன்றாக நினைத்ததைப் படமாகக் காட்டும் முயற்சி வெற்றியை நோக்கி பீடு நடை போடுகிறது.
அமெரிக்க விஞ்ஞானிகளின் குழு ஒன்று, இரு தன்னார்வலர்கள் வீடியோ ஒன்றைப் பார்க்கும் போது அவர்களின் மூளைகளை ஸ்கேன் செய்து அந்த முடிவுகளை வைத்து அவர்கள் பார்த்தனவற்றை மறுபடியும் உருவாக்க முய்னறு வெற்றி பெற்றுள்ளது!
இந்தக் குழுவினரின் கண்டுபிடிப்பு இப்போது துல்லியமாக இல்லை என்றாலும், இந்த உத்தியின் மூலமாக ஒருவர் மனதில் நினைப்பதைச் சித்திரமாக திரையில் படமிட்டுக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து விட்டது!
ஒரு மனிதனை நினைத்த போது விஞ்ஞானிகள் ஒரு மனிதனின் படத்தையும் அவன் பின்னணியில் ஆகாயத்தையும் உருவாக்க முடிந்திருக்கிறது.
பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜாக் காலண்ட் (Professor Jack Gallant) இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
“நீங்கள் பார்க்கும் எதையாவது விவரிக்க வேண்டுமென்றால் இப்போது வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அல்லது அதைப் படமாக வரைந்து காட்ட வேண்டியிருக்கிறது. இது சில சமயம் சரிப்பட்டு வருவதில்லை. இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப உத்தியானது குற்றம் ஒன்றைப் பார்த்த ஒருவர் என்ன பார்த்தார் என்பதைத் துல்லியமாக மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர உதவும்” என்கிறார் அவர்.
இது பற்றிய ஆய்வுகளில் மேற்கொள்ளப்பட்ட பல சோதனைகளில் இந்த சோதனை எப்படி மூளை ஸ்கேன்கள் ஒருவரின் உள்ளார்ந்த எண்ணங்களைப் படமாகக் காட்ட முடியும் என்பதற்கான முத்தாய்ப்பான சோதனையாக அமைந்துள்ளது.
இன்று சர்வ சாதாரணமாக மருத்துவ மனைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபங்ஷனல் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் (Functional magnectiv resonance imaging – fMRI) ஸ்கேனரை வைத்து அமெரிக்க குழுவினர் இரண்டு தன்னார்வலர்கள் ஒரு வீடியோவைப் பார்க்கும் போது அவர்களின் மூளைகளை ஸ்கேன் செய்ததன் விளைவே இந்த சோதனையை வெற்றியாக்கியது.
ஒரு கணினியில் அவர்கள் தங்கள் முடிவுகளை ஏற்றினர். அதில் அவர்கள் நினைத்த எண்ணங்களுக்கான வண்ணங்கள், உருவங்கள், இயக்கங்கள், செயல்பாடுகளில் ஏற்படும் பாட்டர்ன் எனப்படும் ஒழுங்குகள் ஆகியவற்றைத் தொகுத்தனர்.
பிறகு கம்ப்யூட்டர் மென்பொருளில் தன்னார்வலர்கள் இன்னொரு வீடியோவைப் பார்த்து அதனுடைய ஸ்கேன் முடிவுகளை ஏற்றினர்.
இப்போது கணினியிடம் அவர்கள் பார்த்ததைப் படமாக வரையுமாறு ஆணையிட்டனர்.
கணினி தந்த முடிவைப் பார்த்த பேராசிரியர் காலண்ட் அசந்து போனார்.
அவரது முடிவுகள் இன்னும் பரம இரகசியமாக உள்ளன என்றாலும் அவர் பெற்ற வெற்றியை உலகம் அறிந்து விட்டது!
துல்லியத்திற்கு மிக நெருங்கியவையாக கணினியில் படங்கள் அமைந்துள்ளன!
இன்னொரு சோதனையில் காமடி நடிகர் ஸ்டீவ் மார்டின் வெள்ளை நிற சட்டையை அணிந்திருந்ததை அப்படியே கணினி சித்தரித்துப் படமாக்கிக் காண்பித்தது. ஆனால் அவர் முகத்தைக் காண்பிக்க முடியாமல் அது திணறியது. ஆனால் எதிர்காலத்தில் அதனுள் உள்ளிடும் தகவல்கள் துல்லியமாக் அனைத்தையும் காட்டும் என்பதை விஞ்ஞானிகள் அறிந்து மகிழ்கின்றனர்.
இன்னொரு சோதனையில் அதில் கலந்து கொண்டவர்களிடம் வானத்தின் பரப்பையும் அதில் விமானம் ஒன்று பறந்து செல்வதையும் காண்பித்தனர்.
கணினி வானத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. விமானத்தை அதனால் படம் பிடித்துக் காட்ட முடியவில்லை. ஆனால் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டால் எதையும் கணினி காண்பிக்கும் என்பது உறுதி.
‘நீங்கள் நினையுங்கள்; உங்கள் எண்ணங்களைப் பிடித்துத் திரையில் காட்டுகிறோம்’, என்கின்றனர் விஞ்ஞானிகள் மிகுந்த நம்பிக்கையுடன்!
இந்த் புது விதமான உத்தி உலகில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களை நினைத்தாலேயே பிரமிப்பு ஏற்படுகிறது, இல்லையா!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ஜப்பானில் பிறந்து அமெரிக்க குடிமகனாக இன்று வாழ்பவரான ஷுஜி நகாமுரா (Shuji Nakamura – தோற்றம் 22-5-1954) ஒரு பெரிய விஞ்ஞானி. இயற்பியலில் 2014ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இவர் பெற்றார். லைட் எமிட்டிங் டையோடுகளைச் சுருக்கமாக நாம் இப்போது எல் இ டி (LED) என்கிறோம். ப்ளூ எல் இ டி கண்டுபிடிப்பிற்காக நகாமுரா நோபல் பரிசைப் பெற்றார்.
1979 ஆம் ஆண்டு மாஸ்டர் டிகிரியைப் பெற்ற அவர் டோகுஷிமா என்ற சிறிய நகரத்தில் இருந்த நிசியா கெமிக்கல் (Nichia chemical) என்ற கம்பெனியில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பலத்த போட்டியின் காரணமாக அந்த கம்பெனி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.
1988இல் நகாமுரா நிறுவனத்தின் உரிமையாளரான் ஒகவா நொபுவோவிடம் நேரடியாகச் சென்றார். 30 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தருவதோடு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் ஆராய்ச்சி செய்ய அனுமதியையும் வேண்டினார். அவரே ஆச்சரியப்படும்படி உரிமையாளர் சரி என்று சொல்லி விட்டார்,
நகாமுரா தனது இடைவிடாத ஆராய்ச்சியினால் ப்ளூ எல் இ டிக்களை உருவாக்கும் உத்தியைக் கண்டு பிடிக்கவே கம்பெனி பெருத்த லாபம் அடைந்தது. கற்பனைக்கு எட்டாத அளவு லாபம்! ஆனால் நிறுவனமோ நகாமுராவைக் கண்டு கொள்ளவே இல்லை.
2000ஆம் ஆண்டில் நிறுவனம் நகாமுராவிடம் தனது கண்டுபிடிப்பை யாரிடமும் சொல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்தது.
கலிபோர்னியா பல்கலைக் கழகமோ இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று நகாமுராவுக்கு அறிவுரை வழங்கியது.
நகாமுராவின் மீது நிசியா, வணிக ரகசியங்களை வெளியிடுவதாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. நகாமுராவும் பதில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
1930 லட்சம் டாலரை (ஒரு டாலர் சுமார் 67 ரூபாய்கள்) த்னது கண்டுபிடிப்பிற்கான தொகையாக நகாமுரா கேட்டார். கம்பெனி வழங்கியதோ வெறும் 180 டாலர்கள் தான்!
இறுதியாக 81 லட்சம் டாலர் தர கம்பெனி சம்மதித்தது. நகாமுராவிற்கு இதில் ஏமாற்றம் தான்! என்றாலும் வெறும் 180 டாலரிலிருந்து 81 லட்சம் டாலரைத் தர கம்பெனி சம்மதித்ததை வழக்கின் வெற்றியாக அவர் ஏற்றுக் கொண்டார்.
உலக வரலாற்றில், குறிப்பாக ஜப்பானிய வணிக நிறுவன வரலாற்றில் இந்த வழக்கு குறிப்பிடத்தகுந்த வழக்காக அமைந்து விட்டது.நகாமுரா இன்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மட்டுமல்ல; பெரிய பணக்காரரும் கூட!
*********