எண்ணற்ற கீதைகள்! (Post No.4475)

Date: 10 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-55 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4475

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஞான ஆலயம் ஆன்மீக மாத இதழ் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளி வருகிறது. அதில் டிசம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

ஏற்றம் தரும் எண்ணற்ற கீதைகள்!

 

ச.நாகராஜன்

 

பகவத் கீதையின் பெருமை

 

Miss World Manushi Chillar in Gita Mahotsava in Kurukshetra

கீதை என்றால் அது பகவத் கீதையை மட்டுமே குறிக்கும் என்ற அளவிற்கு அளவிலாப் புகழ் பெற்றது கண்ணன் அர்ஜுனனுக்கு மஹாபாரதப் போர்க்களத்தில் உபதேசித்த கீதை.

கீதைக்கு உரையைப் பல நூறு அறிஞர்கள் எழுதி உள்ளனர். சமீப காலத்தில் பால கங்காதர திலகர்,மஹாத்மா காந்திஜி, அரவிந்தர், வினோபாஜி உள்ளிட்டோர் கீதைக்கு விரிவுரை எழுதியுள்ளனர்.

கீதையே எனக்கு ஆறுதல் தருவது என்றார் காந்திஜி. இறுதி வரை கீதையைத் தன்னுடன் வைத்திருந்தார் நேதாஜி.

இதைக் கண்டு வியந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு நாள் மறைந்தாலும் மறையலாம்; கீதை மறையாது என்றார். அவர் கூறியது போலவே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமித்தது. கீதையோ வழக்கம் போல பல்லாயிரக்கணக்கானோருக்கு வழிகாட்டி மிளிர்கிறது; ஒளிர்கிறது.வேதத்தின் சாரம் எனப்படுகிறது பகவத் கீதை.

 

 

பதினெட்டு அத்தியாயங்கள்; எழுநூற்றி ஒன்று ஸ்லோகங்கள்;  6446 பதங்கள் 8990 பதச் சேதங்கள் (சப்தங்கள்) உள்ள பகவத் கீதை உலகில் கோடானுகோடி பேருக்கு காலம் காலமாக வழி காட்டி வருகிறது. இப்படி ஒரு நூல் அற்புதமான நூலன்றி வேறென்ன?

‘என் ஒருவனையே சரண் அடை; உன்னை சகல பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்; வருந்தாதே’ ( மாம் ஏகம் சரணம் வ்ரஜ்; அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச -கிருஷ்ணர்) என்பதே கீதையின் அருள்வாக்காக அமைகிறது.

 

சிரத்தை நம்பிக்கையுடன் இறைவனை சரண் அடைபவன் முக்தி அடைகிறான் என்பதே ஹிந்துத்வம் காட்டும் தத்துவம்.

ஆனால் ஹிந்து மதத்தில் பகவத் கீதை போல வாழ்வின் மரமங்களையும் பிரபஞ்ச ம்ரமங்களையும் இறை மர்மங்களையும் சுட்டிக் காட்டும் கீதைகள் பல உண்டு.

 

 

143 கீதைகள்

பேரறிஞர் டாக்டர் வி.ராகவன் 123 கீதைகளின் பட்டியலைத் தனது ‘ரீடிங்ஸ் இன் பகவத் கீதா’ என்ற நூலில் தந்திருக்கிறார்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்தக் கட்டுரை ஆசிரியர்  சுமார் 143 கீதைகளின் பட்டியலைத் தொகுத்திருக்கிறார்.

 

 

மஹாபாரத கீதைகள்

 

மஹாபாரதத்தில் மட்டும் பகவத் கீதை, பராசர கீதா, ஹம்ஸ கீதா, அனு கீதா, உத்தர கீதா, ஷட்ஜ கீதா, ப்ராம்மண கீதா, வ்யாத் கீதா, பக கீதா, நகுஷ கீதா, சௌன்க கீதா உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.

 

ஒவ்வொன்றும் அபூர்வமான தத்துவங்களை விளக்குகின்றது.

பாதை காட்டும் கீதைகள் பலவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

உத்தர கீதை ; பிரமாண்ட புராணத்தில் இடம் பெறும் கீதை இது. ப்கவத் கீதைக்கு இது ஒரு அநுபந்தம் போன்றது. உண்மையை இடையறாது தியானி என்ற சுலபமான வழியை இது கூறுகிறது. இதற்கு ஆதி சங்கரரின் குருவான கௌடபாதர் ஒரு விளக்கவுரை எழுதியுள்ளார்.

 

 

வேணு கீதை: பாகவதத்தில் பத்தாவது ஸ்காந்தத்தில் இடம் பெறுவது இது. கோபிகள் கிருஷணர் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் போது மிகவும் பக்தி மேலிட அவரது புகழைப் பாடத் தொடங்குகின்றனர். கிருஷ்ணரின் குழலோசை அவர்களை புளகாங்கிதம் அடைய வைத்து இறை உணர்வை ஊட்டுகிறது.

 

 

சுருதி கீதை: பாகவதம் பத்தாம் ஸ்காந்தத்தில் இடம் பெறும் இக்கீதை சுருதிகள் நாராயணனைப் பிரார்த்திப்பதை விளக்குகிறது.

 

கபில கீதை: பாகவதம் மூன்றாம் ஸ்காந்தத்தில் இடம் பெறுவது இது. கபிலர் தன் தாயாரான தேவஹூதிக்கு செய்த பிரமாதமான போதனை இதில் உள்ளது.

 

யுதிஷ்டிர கீதை. மஹாபாரத்த்தில் வரும் பிரசித்தமான சம்பவம் ய்ட்சனும் யுதிஷ்டிரரும் செய்த சம்வாதம். யட்சனின் கேள்விகளுக்கு அனாயாசமாக பதில் கூறி அவனிடம் வரம் பெற்று இறந்த தன் சகோதரர்களை உயிர்ப்பிக்கிறார் தர்மர்.  யட்ச ப்ரஸ்னம்  என்று புகழ் பெற்றுள்ளது இதுவே.

 

அஷ்டாவக்ர கீதை; மாமன்னன் ஜனகன் ஒரு கனவு காண்கிறான். அதில் அவன் பசியால் வாடி பிச்சை எடுப்பது போலவும் இறுதியில் சிறிது கஞ்சி கிடைக்க, அதை வாயருகில் கொண்டு போகும் போது இரு எருதுகள் சண்டையிட்டுக் கொண்டு அவன் மீது மோத கைக்குக் கிடைத்த கஞ்சி வாய்க்குக் கிடைக்காமல் கஞ்சி சட்டி கீழே விழுந்து சுக்கு நூறாக உடைவது போலவும் காண்கிறான்.. அப்போது கனவிலிருந்து விழித்த ஜனகன், “இதுவா, அதுவா , எது உண்மை?” (மன்னனாக இருப்பதா, பிச்சை எடுப்பதா?) என்ற கேள்விக்கு ஆளாகிறான். அவனை சந்திக்கும் அஷ்டாவக்ரர், “இதுவும் உண்மையல்ல; அதுவும் உண்மையல்ல” என்று கூற அவன் தன் குழப்பம் நீங்குகிறான். ‘அப்போது எது உண்மை?’ என்று ஜனகன் கேட்க உண்மைப் பொருளை அஷ்டாவக்ரர் விளக்குகிறார். அதுவே இந்த அஷ்டாவக்ர கீதையாக மலர்கிறது.

 

சௌனக கீதை ; மஹாபாரதத்தில் சௌனக முனிவர் தர்மபுத்திரருக்கு உரைக்கும் உபதேச மொழிகளே சௌனக கீதையாக அமைகிறது. பிரபஞ்ச வாழ்வு பற்றி இதில் எடுத்துரைக்கப்படுகிறது.

 

 

பக கீதை; மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது.

பக முனிவர் பல கற்பங்கள் வாழ்ந்தவர். அவருக்கும் இந்திரனுக்கும் நடக்கும் இந்த சம்பாஷணையில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மிக மிக நீண்ட காலம் வாழ்ந்த முனிவர் தன் அனுபவங்களை எடுத்துக் கூறுகிறார்.

 

 

நஹுஷ கீதை: மஹாபாரதத்தில் வரும் ஒரு சம்பவத்தை ஒட்டி எழும் கீதை இது. நஹுஷன் என்ற பாம்பிடம் பீமன் பிடிபடுகிறான். அவனை விடுவிக்க விரைகிறார் தர்மபுத்திரர். தர்மரிடம் நஹுஷன் கேள்விகள் கேட்க அதற்குத் தக்க விடை அளிக்கிறார் தர்மர். அதனால் மனம் மகிழ்ந்த நஹுஷ பாம்பு பீமனை விடுவிக்கிறது. நஹுஷனின் கேள்விகளும் தர்மரின் பதில்களும் மிக்க சுவையானவை.

 

அவதூத கீதை; உயர்ந்த அத்வைத ஞானம் பற்றி அறிய விரும்புவோருக்கான  கீதை இது. பரமாத்மா சிவம். சிவம் என்றால் மங்கலமானவர். அவரைப் பற்றிய உண்மையில் ஆரம்பித்து அத்வைத சித்தாந்தத்தைக் கூறுகிறது இது.

தத்தாத்ரேய முனிவருக்கும் ஸகந்தனுக்கும் நடந்த இந்த சம்பாஷணை உயர் நிலையில் உள்ள சாதகர்களுக்காக அமையும் ஒரு கீதை.

 

 

அனு கீதை; மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது. மஹாபாரதப் போர் முடிந்த பின்னர் கிருஷ்ணரை மீண்டும் பகவத் கீதையை உரைக்குமாறு அர்ஜுனன் வேண்ட அவனை கிருஷ்ணர் கடிந்து கொள்கிறார். நினைத்த நேரம் எல்லாம் சொல்லக் கூடிய ஒன்று அல்ல கீதை. இருந்தாலும் அருள் மீதூற சுருக்கமாக கீதை தத்துவத்தை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அருளி உரைப்பது இது.

 

 

தேவி கீதா ; தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 32ஆம் அத்தியாயமாக மிளிர்கிறது தேவி கீதா. இதே நூலில் பகவதி கீதாவும் இடம் பெறுகிறது.

 

ஹம்ஸ கீதை ; அன்னப் பறவை வடிவில் இருந்த விஷ்ணுவிற்கும் பிரம்மாவின் புத்திரரகளுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையே ஹம்ஸ கீதை.

 

 

 

இதர கீதைகளில் முக்கியமானவை சில

 

வராஹ புராணத்தில் ருத்ர கீதா மற்றும் அகஸ்திய கீதா இடம் பெறுகின்றன.

கூர்ம புரணமோ ஈஸ்வர கீதா மற்றும் வியாச கீதாவை எடுத்துரைக்கிறது.

ரிபு கீதா:  விஷ்ணு புராணத்தில் இடம் பெறும் இதில் ரிபு முனிவர் தனது சீடரான நிதகருக்கு வேதாந்த தத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

சிவ பார்வதி சம்வாதமான குரு கீதா குருவின் பெருமையை எடுத்துரைக்கிறது.

ஹனுமானுக்கும் ராமருக்கும் இடையில் நடந்த சுவையான உரையாடல் ராம கீதையாக அத்யாத்ம ராமாயணத்தில் அமைகிறது.

வசிஷ்ட கீதையில் வசிஷ்ட முனிவர் ராமருக்குப் பல பேருண்மைகளைக் கூறுகிறார்.

 

 

நாரத கீதை கிருஷ்ணருக்கும் நாரத முனிவருக்கும் நடந்த சம்பாஷணையைக் கூறுகிறது.

இன்னும் சூர்ய கீதா, பஞ்ச தச கீதா, சக்தி கீதா, பிங்கல கீதா, சம்பு கீதா, சப்த ஸதி கீதா, ப்ரமர கீதா, ராஸ கீதா, விஷ்ணு கீதா, பித்ரு கீதா, பிருத்வி கீதா, சாந்தி கீதா, போத்ய கீதா, துளஸி கீதா, வைஷ்ணவ கீதா, ஹரித கீதா, பீஷ்ம கீதா, ஞான கீதா, ஜன்ம கீதா, ம்ருத்யுஞ்சய கீதா,ப்ரணவ கீதா என்று இப்படி பெரிய கீதை பட்டியல் தொடர்கிறது.

ஒவ்வொன்றும் ஒரு பிரம்மாண்டமான பேருண்மையை உபதேசிக்கிறது.

 

 

ஆன்மீக நாட்டம் உள்ளவர் உயரிய நிலைக்குச் செல்ல வழி வகுக்கும் கீதைகள் இவை; அதே சமயம் இக உல்க வாழ்க்கையை எந்த வித சிரமமும் இல்லாமல் கடக்க வழி காண்பிப்பவையும் இவையே.

 

இவற்றைத் தொகுத்துப் படிப்பவர் பாக்கியசாலி. ஹிந்துத்வம் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்கும் அருளுரைகளை அற்புதமாகத் தரும் என்பதை இந்த நூற்றுக்கும் மேற்பட்ட கீதைகள் நிரூபிக்கின்றன.

 

பாதை காட்டும் கீதைகளில் நமக்குப் பிடித்த கீதையைப் பயின்றால் இசைவான வாழ்வைப் பெறலாம்!

 

***

ஞான ஆலயம் முகவரி: பழைய எண் 7, புதிய எண் 32, அருணாச்சலபுரம் இரண்டாவது தெரு, அடையாறு, சென்னை  600020 . (வருட சந்தா ரூ 300/)