Written by London swaminathan
Date: 17 December 2016
Time uploaded in London:- 7-21 AM
Post No.3457
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருவெம்பாவை உள்பட 51 பகுதிகள் உள்ளன. அவற்றில் 656 பாடல்கள்; அதவது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகள் இருக்கின்றன.
51 பாடல் பகுதிகளில் இருபதுக்கும் மேலான பகுதிகளுக்கு “பத்து” அல்லது “பதிகம்” என்றே தலைப்பிட்டுள்ளார். இதி லிருந்து இவருக்கு மிகவும் பிடித்த எண் பத்து என்பது தெளிவு; இதோ சில பகுதிகளின் பெயர்கள்:-
அச்சப் பத்து, அடைக்கலப் பத்து, அதிசயப் பத்து, அருட்பத்து, அற்புதப் பத்து, அன்னைப் பத்து, ஆசைப்பத்து, உயிருண்ணிப் பத்து, கண்டபத்து, குயில் பத்து, குலாப்பத்து, குழைத்த பத்து, செத்திலாப்பத்து சென்னிப் பத்து, பிடித்த பத்து, பிரார்த்தனைப் பத்து, புணர்ச்சிப்பத்து, யாத்திரைப் பத்து, வாழாப்பத்து. இது தவிர பல பாடல்கள் பதிகம் என முடிவுறும்.
பத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியாமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்
-திருவெம்பாவை 3 (திருவாசகம்)
பொருள்:-
முத்தைப் போன்ற வெண்மையான பற்களை உடைய பெண்ணே! முன்பெல்லாம் எனக்கு முன்னே எழுந்து, எதிரே வந்து, என் தந்தை; இன்ப வடிவினன்; அமுதம் போல இனியன் என்று வாயூறித் தித்திக்கப் பேசுவாய்; எழுந்து வந்து வாயிற் கதவைத் திற!
அள்ளூறல்= நாவில் எச்சில் ஊறுதல்
இதில் பத்துடையீர் என்ற சொல்லுக்கு இருவிதமாகப் பொருள் கூறுவர் சான்றோர்; பத்து என்பது பற்று என்பதன் மரூஉ; அதாவது மருவிய வடிவம்
மற்றொரு பொருள் பத்து குணங்களுடையவர். இது எப்படிப் பொருந்தும்? என்று கேட்கலாம். அப்பர் பெருமானும் “பத்துகொலாம் அடியார் செய்கைதானே” — என்கிறார்.
அப்படியானால் அந்த 10 குணங்கள் என்ன,என்ன என்ற கேள்வி எழும்
அவை:
1.விபூதி, உருத்திராக்கம் அணிதல்
2.குரு வழிபாடு
3.அன்புடன் சிவனைத் துதி பாடல்
4.மந்திர ஜெபம்
5.இறை வழிபாடு செய்தல்
6.யாத்திரை செய்து சிவத் தலங்களைத் தரிசித்தல்
7.சிவபுராணம் கேட்டல்
8.சிவன் கோவில்களை சுத்தமாக வைத்துப் பரிபாலித்தல்
9.சிவன் அடியாரிடத்து உண்டல் (கண்ட இடங்களில் சாப்பிடாமல் இருத்தல்)
- தொண்டர்க்குத் தொண்டு செய்தல்
என்று சான்றோர் உரை எழுதியுள்ளனர்.
இவைகளில் 3, 4, 5 ஆகிய மூன்றும் ஒன்று போலத் தோன்றும் ஆயினும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் வேறு வேறு என்பது விளங்கும்.
திருச்சத்தகம் என்னும் பகுதியில் “எட்டினோடு இரண்டும் அறியேனையே” (பட்டிமண்டபம் ஏற்றினை) என்று கூறுவதும், திருமூலரும் “எட்டும் இரண்டும் இனிதறிகின்றலர்” என்று பாடி இருப்பதும் ஒப்பு நோக்கற்பாலது. எட்டும் இரண்டும் என்பதற்கு வேறு பல விளக்கங்களும் உண்டு.
–Subham–