எதிர்க் கட்சிகள் தேவையே; எதிரிக் கட்சிகள் கூடாது! ((9837

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9837

Date uploaded in London – 11 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனநாயகம் சிறக்க எதிர்க் கட்சிகள் தேவையே; எதிரிக் கட்சிகள் கூடாது!

ச.நாகராஜன்

ஆட்சி முறைகளில் சிறந்ததாகக் கருதப்படுவது ஜனநாயக ஆட்சி முறையே. அதில் பல குறைபாடுகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. காசுக்கு ஒட்டு போடுவது, நல்ல விஷயங்களை அரசியலாக்கிக் கெடுப்பது. லஞ்சத்தை அனைத்துத் துறைகளிலும் புகுத்துவது உள்ளிட்ட பல குறைகள் உள்ளன என்றாலும் மக்கள் நினைத்தால் ஊழல் புரிவோர்களையும் சொந்த லாபம் கருதி அராஜகம் செய்வோரையும் தூக்கி எறியும் சக்தியை ஜனநாயகம் தருகிறது.

ஆட்சியாளர்கள் தவறு செய்தோலோ, ஒரு விஷயத்தில் முடிவு எடுக்கத் தடுமாறினாலோ எதிர்க் கட்சிகள் தட்டிக் கேட்கும்; தக்க ஆலோசனையையும் தரும்.

இஸ்ரேலை ஒரு லட்சிய நாடாகப் பார்க்க முடிகிறது – தேசத்திற்கு ஒரு ஆபத்து வருகிறது என்கின்ற போது அங்கு கட்சிகள் நடக்கும் விதத்தைப் பார்த்து!

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேடானியாஹுவின் (Benjamin Netanyahu) பதவிக்கு ஆபத்து. நாற்காலி ஆடியது. உடனே அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பென்னி கான்ட்ஸை (Benny Gantz) ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். இதற்கிடையில் இஸ்லாமிய தீவிரவாதிகளான ஹமாஸுக்கும் (Hamas) இஸ்ரேலுக்கும் ஒரு போர் ஆரம்பித்தது. போர்க்காலம் முழுவதும் எதிர்க்கட்சியும் பென்னி கான்ட்ஸும் பிரதமர் பெஞ்சமின் நேடானியாஹுவிற்கு ஆதரவு அளித்தது. காஸா ஸ்ட்ரிப்பில் (Gaza Strip) ஹமாஸுடனான போரைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியது எதிர்க்கட்சி. பென்னி புது அரசை அமைப்பதைப் பற்றி ஹமாஸ் போர் முடிந்தவுடன் ஆலோசனை செய்வதாக பிரதம மந்திரியிடம் தெரிவித்தார்.

பதவியில் அமர அவர் ஆசைப்படவில்லை.

இங்கு இந்தியாவிற்கு வருவோம். பாகிஸ்தானுக்கும் பங்களா தேஷுக்கும் போர். அப்போது இந்தியா பங்களா தேஷை ஆதரித்தது. இந்திரா காந்தி முழு ஆதரவையும் அளித்தார். பாகிஸ்தான் இரண்டானது. பங்களா தேஷ் உருவானது. அப்போது எதிர்க்கட்சியின் பிரதான தலைவராக இருந்த வாஜ்பாய் இந்திரா காந்தி அவர்களை துர்கா மாதா என்று கூறிப் புகழாரம் சூட்டினார். இந்திரா காந்தியே வியந்து போனார் – இப்படிப்பட்ட புகழாரத்தைக் கண்டு.

தேச நலனையே முன் வைத்தார் வாஜ்பாயி.

இப்போது? இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக்கை செய்த போது எதிர்க்கட்சிகள் பாராட்டவில்லை. அட, சும்மாவாவது இருந்தார்களா? இல்லை.

ராகுல் காந்தி ராணுவத்தின் திறமையைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் சந்தேகப்பட்டார். எதற்காக சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று கேள்வி கேட்டார். ராணுவத்திற்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்காமல் சர்ஜிகல் ஸ்டிரைக் செய்வதற்கு காரணம் என்ன, அதற்கு ஆதாரம் எங்கே என்று கேள்வி கேட்டார்!

இஸ்ரேலில் எதிர்க்கட்சித் தலைவர் புதிய அரசை  தன் தலைமையில் ஆரம்பிக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும், அவர் ஹமாஸை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுங்கள், உறுதுணையாக இருக்கிறோம் என்று பிரதம மந்திரிக்கு உறுதி அளித்தார். ஆதாரங்கள் எதையும் கேட்கவும் இல்லை, இஸ்ரேல் ராணுவத்தின் திறமை குறித்து சந்தேகத்தையும் எழுப்பவில்லை. தேசமே முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர்.

   ஆனால் இங்கோ புல்வானா ஒரு பிரச்சினையே இல்லை, அது தேர்தலுக்காக எழுப்பப்பட்டது என்று ராகுல் காந்தியும் அவருடன் இணைந்த எதிர்க்கட்சியினரும் கூறினர்.

இஸ்லாமிய தீவிரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலிய மக்கள் ஒருமித்தமாக ஒன்று இணைகின்ற போது இங்கு நம்மை ஆக்கிரமிக்க நினைக்கும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தால் அதைக் கூட கேள்வி கேட்கின்றன நமது எதிர்க்கட்சிகள். இவை எதிர்க் கட்சிகள் அல்ல, எதிரிக் கட்சிகள். இந்த நிலை மாற வேண்டும்!

ஆனால் பாரத மக்கள் புத்திசாலிகள்! அவர்களுக்கு 1947லிருந்து என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆகவே அரசுக்கு ஆதரவு தெரிவித்து அரசைப் பலப்படுத்துகின்றனர்.

எதிர்க் கட்சிகள் தேசத்திற்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் தாங்கள் இன்னொரு கட்சி என்பதை மறந்து ஒரே கட்சி என்ற நிலைக்கு வர வேண்டும். அப்படி வந்தால் சீனாவைக் கண்டும், பாகிஸ்தானைக் கண்டும் இந்தியா அவை என்ன செய்யப் போகின்றன என்று யோசிக்குமா என்ன?

வாஜ்பாயி போன்ற அரசியல் முதிர்ச்சியும் தேசபக்தியும் கொண்ட தலைவர்களே இன்று நாட்டுக்குத் தேவை – எதிர்க் கட்சிகளில்.

தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தால் தான் என்ன, ஒரே குரலாக இந்தியர்கள் 130 கோடி பேரும் சேர்ந்து ஜெய்ஹிந்த் என்று முழங்கினால் இந்தியா வெல்லும், வெல்லத்தானே செய்யும்!

ஜெய்ஹிந்த்!

***

INDEX

இஸ்ரேல், ஹமாஸ் போர், பிரதம மந்திரி பெஞ்சமின் நேடானியாஹுவின் அழைப்பு, எதிர்க்கட்சி தலைவர் பென்னி கான்ட்ஸ், இந்தியா, வாஜ்பாயி- இந்திரா காந்தி, பங்களா தேஷ் போர், புல்வானா, எதிர்க் கட்சிகள், ஜெய்ஹிந்த்

tags- எதிர்க் கட்சிகள் ,எதிரிக் கட்சிகள் , இஸ்ரேல்