ராமாயணத்தில் எறும்பின் கதையும் கைகேயி வம்சமும் (Post No.9738)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9738

Date uploaded in London – –15 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்ப ராமாயணத்தின் அயோத்யா கண்டத்தில் ஒரு சுவையான கதை வருகிறது. கோடிப்  பேரில் ஒருவருக்கு மட்டும் பிராணிகள் பேசுவதைக் கேட்கும் அபூர்வ சக்தி இருக்கும். இந்து மத நூல்களில் விக்ரமாதித்தன், கழற்றறிவார் , ஆனாய  நாயனார் ஆகியோர் இவ்வாறு அபூர்வ சக்தி படைத்தவர்கள்  வால்மீகி ராமாயணத்தில் கைகேயியின் தந்தை அசுவபதிக்கும்  இந்த சக்தி இருந்ததாக செய்திகள் உள . கம்பரும் நமக்கு போகிற போக்கில் ஒரே வரியில் சுட்டிக்காட்டுகிறார்.

பிரபஞ்சத்தில் 4 விதமான ஒலிகள் உண்டு என்றும் அவற்றில் மனிதன் கேட்கும் ஒலி ஒன்று மட்டும்தான் என்றும் ஒரு அற்புதத் தகவலை உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் தீர்க்க தமஸ் (RV1-164) என்ற அந்தகக்  கவிராயர் நமக்கு அளிக்கிறார். ஆக நாம் கேட்க முடியாத ஒலிகளில் ஒன்று பிராணிகளின் ஒலி – பாஷை என்பது சொல்லாமலேயே விளங்கும்.

இதோ கம்பன் சொல்லும் கதை

வன்மா யாக்கை கேசி வரத்தால் என்றான் உயிரை

முன் மாய் விப்பத் துனிந்தாளேனும்  கூனி மொழியால் ,

தன் மாமகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி

என்மாமகனைக்  கான் ஏகு என்றாள் எறும்பின் கதையாள்

நகர் நீங்கு படலம், அயோத்யா காண்டம் , கம்ப ராமாயணம்

பொருள் –எறும்பின் சரித்திரத்தைக் கொண்டவளின் மகளாகிய கைகேயி வஞ்சனையால் ,

கூனியால் தூண்டப்பட்டுத் தன் வரத்தாலே என் உயிரை வாங்கத் துணிந்துள்ளாள். மேலும் தன்னுடைய பெருமை மிக்க மகனும் தானுமாக இவ்வுலகினைப் பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உயர்ந்த  மூத்த மகனையும் காட்டிற்குச் செல்க என்றாள்  என்று கைகேயியின் கொடுமையை கோசாலையிடம் கூறி, தசரதன் வருந்தினான்.

இங்கே ‘எறும்பின் கதையாள்’ என்ற 2 சொற்களின் பின்னால் ஒரு கதை உளது

அது என்ன கதை?

கைகேயியின் தந்தை பெயர் அஸ்வபதி. அவன் கேகய நாட்டின் மன்னன்.அவனுக்கு ஈ , எறும்பு போன்ற உயிர் இனங்கள் பேசும் மொழி தெரியும். இதை அவனுக்கு ஒரு முனிவர் கற்றுக் கொடுத்தார். ஒரு முறை மனைவியுடன் படுக்கையில் படுத்திருந்த போது அஸ்வபதி. திடீரென வெடிச் சிரிப்பு சிரித்தான். மனைவிக்குக்     கோபமும் சந்தேகமும் வந்தது. “ஓய் , என்ன என்னைக் கிண்டல் செய்கிறீர்களா? எதற்காக எம்மைப் பார்த்து இளித்தீர் ?” என்று வினவினாள். அஸ்வபதி சொன்னார்:- “அன்பே, ஆருயிரே, உன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை. நம் படுக்கையின் கீழே போன இரண்டு எறும்புகள் பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்டுச் சிரித்தேன்”  என்றார்.

ஐயா நீவீர் ‘டூப்’ (பொய்) அடிக்கிறீர். அப்படியானால் எறும்புகள் என்ன பேசின என்பதை எமக்கும் செப்பும். பின்னர் உம்  மீதுள்ள ஐயப்பாடு அகலும் என்று புகன்றார்   .

அஸ்வபதி சொன்னார்:- அம்மே; சினம் தணிக !ஐயம் அகல! எனக்கு உயிரின மொழி கற்பித்த முனிவர், அவற்றின் பாஷையை எவருக்கும் நீர் புகலக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அப்படிச் சொன்னால், மரணம் சம்பவிக்கும்; நான் உயிர் வாழ முடியாது என்றான்.

அவளோ அட, நீர் செத்தால் செத்துத் தொலையும் ; எனக்கு எறும்பின் குறும்புப் பேச்சைப்  பகரும் என்றாள். மறு  நாள் முனிவர் அனுமதி பெற்று உரைக்கிறேன் என்றான். முனிவரோ அத்தகைய  கொடியாள் நாட்டில் இருப்பது நல்லதல்ல அவளை நாடு கடத்து என்றார் .

முனிவரின் சொற்படி மனைவியை நாடு கடத்தி விட்டு அஸ்வபதியும் இனிதே அரசாண்டான். அந்தத் தாய்க்குப் பிறந்தவள்தானே கைகேயி! அவள் குணமும் அப்படியே; கணவன் செத்தாலும் ராமன் காட்டுக்குப் போகவே வேண்டும் என்று எண்ணுகிறாள்! என்னும் பொருள் தொனிக்க தசரதன் ஒரு சொல்லைப் போட்டான். அந்தச் சொல்தான் எறும்பின் கதையாள் .

ராமாயணத்தில்தான் எவ்வளவு உண்மைகள்! இதில் மரபணு இயல் என்னும் (Genetics) ஜெனெடிக்ஸ், பிராணிகளின் பாஷை  (Language of Animals) முதலிய அரிய விஷயங்களும் வந்து விட்டன.

தாயைப் போல (பெண்) பிள்ளை!!

நூலைப்  போல சேலை!!

–சுபம்–

tags- எறும்பின் கதையாள், ராமாயணத்தில், கதை,  கைகேயி,எறும்பு