Written by London swaminathan
Date: 19th August 2016
Time uploaded in London: 5-40 AM
Post No.3072
Pictures are taken from various sources; thanks for the pictures.
காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் சென்று நீரில் மூழ்கினால் பெரும் பயன் கிட்டும்; பாவங்கள் தொலையும் என்பது நல்ல நம்பிக்கைதான். ஆனால் அதைவிட சுலபமான, செலவில்லாத, ஒரு எளிய தீர்த்த யாத்திரை பற்றிக் கூறுகிறது ஒரு அழகான சம்ஸ்கிருத ஸ்லோகம்:-
க்ஷமா தீர்த்தம் தபஸ்தீர்த்தம் தீர்த்தம் இந்த்ரிய நிக்ரஹ:
சர்வ பூத தயா தீர்த்தம் த்யானம் தீர்த்தம் அனுத்தமம்
பொறுமை என்ற தீர்த்தம்
தவம் என்ற தீர்த்தம்
புலனடக்கம் என்ற தீர்த்தம்
எல்லா உயிரிடத்திலும் அன்பு என்ற தீர்த்தம்
தியானம் என்ற தீர்த்தம்
சத்ய/ உண்மை தீர்த்தம்
ஏதானி பஞ்சதீர்த்தானி சத்யதீர்தம் ச சர்வதம்
தேஷு திஷ்டந்தி சர்வஸ்ய தேஷு ஸ்நானம் சமாசரேத்
ஐந்து தீர்த்தங்களோடு சத்ய தீர்த்தத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்; உடலிலேயே இருக்கும் அதில் எப்போதும் குளியுங்கள்
இவ்வைகளுக்கு மேலான தீர்த்தம் எதுவுமில்லை!
இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட தீர்த்த யாத்திரைக்கும் மேலான பலன் கிடைத்துவிடும்!
கழுதைக்கு கங்கா ஜலம்
இதை விளக்க ஏகநாத் வாழ்வில் நடந்த ஒரு சின்ன சம்பவத்தைக் கூறலாம்:
மஹாராஷ்டிர மாநிலமும் தமிழகத்தைப் போலவே ஏராளமான அடியார்கள் வாழ்ந்த பூமி; அங்கும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் போல பலர் வாழ்ந்தனர். அவர்கள் பல்வேறு தொழில்களைச் செய்தவர்கள்; சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்; எப்படி தமிழ்நாட்டில் நந்தனார், கண்ணப்பர் போன்றோர் போற்றப்பட்டனரோ அப்படி கீழ்மட்டத்தில் இருந்தோரும் புனிதராக வழிபடப்படும் பூமி மஹாராஷ்டிரம்.
நிவ்ருத்தி, ஞானதேவ், சோபான முக்தாபாய் ஏக கநாத், நாமதேவ் , துக்காராம், சமர்த்த ராமதாஸ் போன்றோர் தினசரி பஜனைகளில் பாடப்படும் பேறு பெற்றவர்கள்.
ஒரு முறை ஏகநாத், பல அடியார்கள் புடை சூழ காசிக்குச் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு இரண்டு பானைகளில் கங்கை ஜலத்தை எடுத்துக் கொண்டு நடந்தார். தோளில் ஒரு கம்பை வைத்துக் கொண்டு அதன் இரு புறங்களிலும் கங்கை ஜல குடங்களை தொங்க விட்டுக் கொண்டு ராமேஸ்வரம் வரை வருவர். அங்குள்ள சிவலிங்கத்துக்கு அந்த கங்கை நீரால் அபிஷேகம் செய்வர். அப்பொழுதுதான் யாத்திரை நிறைவு பெறும் என்பது ஐதீகம்.
ஏக நாதரும் கங்கை நீரைச் சுமந்து கொண்டு ராமேஸ்வரத்தை நோக்கி நடந்துவந்தார். அடியார்கள் கோஷ்டி பின்னால் நடந்து வந்தது. அப்பொழுது கடுமையான கோடை காலம்,வெய்யில் எல்லோரையும் வாட்டி வதைத்தது. மக்கள் ஆங்காங்கே நின்று தாக சாந்தி செய்து வந்தனர்.
ஒரு பொட்டல் காட்டில் ஒரு கழுதை வாடி வதங்கி சோர்ந்து நிற்பதை ஏகநாதர் கண்டார். அது தாகத்தினால் தவிப்பதை உணர்ந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர் என்பதே இல்லாத வறண்ட பூமி அது. உடனே இரண்டு பானைகளிலும் இருந்த கங்கை நீரை கழுதைக்கு வார்த்தார். அதைக் குடித்தவுடன் கழுதைக்கு உயிர் வந்ததது. அது ‘காழ் காழ்’ என்று கத்திக்கொண்டு துள்ளிக் குதித்து ஓடியது.
சிறிது நேரம் கழித்து, அடியார்கள் கோஷ்டியும் அவ்விடம் வந்து சேர்ந்தது. ஏகநாதரின் காவடியின் இரு புறப் பானைகளும் காலியாக இருப்பதைக் கண்டு என்ன ஆயிற்று என்று வினவினர். அவர் கழுதைக்கு கங்கா ஜலம் கொடுத்து காப்பாற்றியதை பெருமிதத்துடன் பகர்ந்தார்.
அதைக்கேட்ட பல பக்தர்கள் பொங்கி எழுந்தனர். என்ன அபவாதம் செய்துவிட்டீர்! கங்கை நீரைக் கழுதைக்குக் கொடுத்து பாவத்தை கட்டிக்கொண்டீர்களே. இப்பொழுது ராமேஸ்வரம் சென்றால் எதை வைத்து அபிஷேகம் செய்யப்போகிறீர்? என்று கேள்விக் கணைகளை த் தொடுத்தனர்.
ஏகநாதர் அமைதியாகச் சொன்னார்:
“என்னுடைய அன்பு சிவ பெருமானுக்குத் தெரியும்; அது போதும். அவர் என்னை மன்னித்து விடுவார்.”
ஆக உயிர்களிடத்தில் அன்பு காட்டுவது தீர்த்த யாத்திரைக்குச் சமம் என்பதை ஒரு பெரிய மகான் நமக்குக் கற்பித்துவிட்டார்.
அதனால்தான் இன்றும் அவர் புகழைப் பாடிக்கொண்டிருக்கிறோம்.
“நீதி, உயர்ந்த மதி, கல்வி — அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர்களிடத்தில் அன்பு வேணும்; — தெய்வம்
உண்மை என்று தானறிதல் வேண்டும்”.
–மஹா கவி பாரதி.
–subham–
You must be logged in to post a comment.