Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 3 November 2018
GMT Time uploaded in London – 12-28
Post No. 5619
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
என் அண்ணனிடம் (ஸந்தானம் ஸ்ரீநிவாஸன்) இலவசமாக ஜோதிடம் கேட்க நிறைய பேர் வருவார்கள். அதில் ஒரு சுவையான சம்பவம்.
பரோடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி “என் பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளாகக் கல்யாணத்துக்குப் பார்க்கிறோம்; ஒன்றும் அமையவில்லையே; யாரையும் பிடிக்கவில்லை என்று சொல்லுகிறாள்” என்று சொல்லி வருத்தப்பட்டார்.
என் அண்ணன் சொன்னார்–
“அந்தப் பெண்ணின் மனதில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று நாசுக்காக கேட்டுப் பாருங்கள்; ஏனெனில் இது லவ் மேரியேஜ் (LOVE MARRIAGE) ஜாதகம்” .
அந்தப் பெண்மணி சொன்னார்:
“ஐய்யய்யோ!அப்படி எல்லாம் நடக்கவே நடக்காது. என் பெண் ஒரு ‘நெருப்பு’. யாரையும் அப்படியெல்லாம் அண்ட விடமாட்டாள்”- என்று.
அந்த அம்மணி போகிறபோக்கில் இந்தப் பெண்ணின் கல்யாணத்துக்காக, தான் RS.1,57,000 செலவழித்த கதையைச் சொன்னார்.
அவர் பார்த்த ஒரு ஜோஸ்யர் சொன்னது:
“இதோ பாருங்கள்; உங்கள் பெண்ணின் ஜாதகம் , தோஷ ஜாதகம்; நவக்ரஹ சாந்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிரஹத்துக்கும் சாந்தி ஹோமம் செய்ய 17,500 ரூபாய் ஆகும், ஒன்பது பேருக்கு வேஷ்டி, ஒன்பது பேருக்கு சாப்பாடு. ஆனால் ‘எனக்கு குரு தட்சிணை ஒரே ரூபாய்தான்!”
இப்படிச் சொல்லி பலவித கணக்குப் போட்டு ரூ.1 57 000 வாங்கிவிட்டார். இன்னும் கல்யாணம் ஆகவில்லையே!
கொஞ்ச காலம் கழித்து அந்தப் பெண்மணி மீண்டும் வந்தார். நீங்கள் சொன்னது சரிதான் நீங்கள் (என் அண்ணன்) சொன்ன படியே அவள் காதல் கல்யாணம் செய்து கொண்டாள்.
லண்டன் வந்திருக்கும் என் அண்ணன் சந்தானம் சீனிவாசன் சொன்ன சம்பவம் இது.
ஸ்வாமிஜி அடித்த ஜோக்!
எங்களுக்கு எல்லாம் மந்திரோபதேசமும் அறிவுரைகளும் வழங்கியவர் ஆயக்குடி (தென்காசி- செங்கோட்டை) ஸ்வாமிஜி கிருஷ்ணா.
அவர் சொல்லுவார்–
‘யாரையும் நம்பக்கூடாது; எந்த சாமியாரையும் நம்பக் கூடாது; சிருங்கேரி, காஞ்சி சங்கராசார்யார்களைத் தவிர வேறு யாரையும் நம்பவேண்டாம்’- என்று 50 ஆண்டுகளுக்கு முன் சொல்லுவார்.
அவர் சொன்ன விஷயம்:
ஒரு சாமியார் திருவனந்தபுரத்துக்கு வந்தாராம்.
அவர் சொன்னாராம்–
“நான் ஸந்யாஸி; எனக்கு அதிகம் உணவு வேண்டாம்; கொஞ்சம் அன்னமும் மோரும் போதும்; ஆனால் சிஷ்யர்களுக்கு பஞ்சபக்ஷ பரமான்னம் போடுங்கள்; வடை பாயஸம், அப்பளம், ஸ்வீட் எதுவும் குறைவு வைக்கக் கூடாது”- என்று.
அவர் அறைக்குள் ஜன்னல் வழியாகப் பார்த்தால் அவர் அத்தனை வகைகளையும் ‘அடித்து நொறுக்கினாராம்’. (கபளீகரம் செய்தார்).
முன்னர் சொன்ன ஜோதிடர் ‘தனக்கு ஒரே ரூபாய் குரு தக்ஷிணை’ என்று சொன்னவுடன் இது நினைவுக்கு வந்தது!
தலைவனை நம்பாதே; தத்துவத்தை நம்பு.
ஸ்வாமிஜி கிருஷ்ணா எங்களுக்கு சொன்ன இன்னொரு அறிவுரை முன்னரே மநு தர்மசாஸ்திரம் சொன்ன அறிவுரைதான்.
“உண்மையே பேசு; பொய் பேசாதே உண்மையே ஆனாலும் கசப்பானதைச் சொல்லாதே” (MANU SMRITI 4-138).
எவ்வள வு அருமையான அட்வைஸ்!
சுவாமிஜி சொல்லுவார்:
“டேய், யார் ஆத்துக்காவது போய் சாப்பிட்டால் எதையும் நல்லா இல்லை என்று சொல்லாதே; மோர் மிகவும் நன்றாக இருந்தது” என்று சொல்லு என்று சிரித்துக் கொண்டே சொல்லுவார்.
அதாவது எதையும் பாஸிட்டிவாக (POSITIVE) சொல் என்பதே இதன் தாத்பர்யம்!
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்- குறள் 291
மநு சொன்னதை அப்படியே வள்ளுவனும் செப்பினான்.
-சுபம்–