தினமணியும் முரசொலியும்!

MURASOLI

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1373; தேதி அக்டோபர் 27, 2014.

தினமணியில் ‘லவ் லெட்டர் நோட் புத்தகம்’ — என்ற முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.

இந்தப் பகுதி தினமணி ஆசிரியர் ( காலஞ்சென்ற ) ஏ.என்.சிவராமன் (A.N.S) அவர்களுடன், சப் எடிட்டர் என்ற முறையிலும், குடும்ப உறுப்பினர் என்ற முறையிலும் உள்ள தொடர்பு பற்றியது. நான் 1971 முதல் 1986 வரை மதுரை தினமணியில் சீனியர் சப் எடிட்டராக இருந்துவிட்டு 1987-ஆம் ஆண்டில் லண்டன் வந்து விட்டேன். பி.பி.சி. தமிழோசை ஒலிபரப்பா ளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆகவே இங்கே குறிப்பிடப்படும் சம்பவங்கள் அனைத்தும் 1987-க்கு முந்தையவை.

மதுரையில் நான் வேலை பார்த்த தினமணி அலுவலகத்தில்,
“டேய், முரசொலி என்னடா சொல்றான்: ‘ஏய் சிவராமா?-வா’ அல்லது ‘சிவராம அய்யரா?” என்று சொல்லி, சிரித்துக்கொண்டே எங்களை நோக்கி ஏ.என்.எஸ் வருவார்.

நாங்கள் தினமணிப் பத்திரிக்கையில் வேலை பார்க்கும்போது எங்களுக்கு முரசொலி, விடுதலை, தினத் தந்தி, தினமலர், மாலைமுரசு முதலிய பத்திரிகைகள், “எக்ஸேஞ்சு காப்பி” வரும் – அதவது நாங்கள் எங்கள் பத்திரிக்கையை அனுப்பினால் அவர்கள் தங்களுடைய பத்திரிக்கை ஒன்றை அனுப்புவர். அவைகளைப் படித்து, ரசித்து, சுவைத்து, சிரித்து, அசைபோட்டு மகிழ்வோம். அதை ஏ.என். எஸ். புரிந்துகொண்ட அளவுக்கு நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர், “டேய், முரசொலி என்னடா சொல்றான்: ஏய் சிவராமா?-வா அல்லது சிவராம அய்யரா?” என்பார். இதன் பொருள் என்ன?

தி.மு.க.கொள்கைக்கோ அல்லது ஆட்சிக்கோ பிடிக்காத, ஒவ்வாத செய்தியை தினமணி வெளியிட்டிருந்தால் அடுத்த ஓரிரு தினங்களுக்குள் தி.மு.க.வின் கட்சிப் பத்திரிக்கையான முரசொலியில் “ஏய் சிவராமா” என்று ஏக வசனத்தில் துவங்கி திட்டித் தீர்ப்பார்கள். ஆரம்ப காலத்தில் பார்ப்பனர் முதலிய ஜாதி விஷயங்களையும் இழுத்து வம்பு செய்வார்கள். பின்னர் அது குறைந்துவிட்டது.

தி.மு.க. அரசின் சில கொள்கைகளைப் பாராட்டி தினமணி எழுதிவிட்டால், மறு நாளைக்கே முரசொலி பத்திரிக்கையில் “சிவராம அய்யர் அவர்கள் கூட” — என்று பஹுவசனத்தில் தலையங்கம் எழுதுவர். ஓரிரவில் ஏக வசனம் பஹுவசனமாக மாறிவிடும். இதை நாங்கள் ரசிப்பது போலவே அவரும் மறு நாள் ரசிப்பார். இதைத்தான் “டேய், முரசொலி என்னடா சொல்றான்: ஏய் சிவராமா?-வா அல்லது சிவராம அய்யரா?” என்று கேட்பார். அதாவது மாற்றுப் பத்திரிக்கை கருத்துக்களையும்—குறிப்பாக அப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியின் கருத்துகளையும் — கவனிக்க வேண்டும் என்பதே இதன் சாரம்.

annadurai

அண்ணாதுரை டெலிபோன் ரகசியம்
1965 ஆம் ஆண்டில் ஜனவரி இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து 4, 5 மாதங்களுக்கு தமிழ்நாடு வன்முறைக்களமாக மாறியது. நாங்கள் எல்லோரும் அப்போது பள்ளி மாணவர்கள். “போலீஸ் மந்திரி கக்கா, மாணவர் என்ன கொக்கா? பக்தவத்சலக் குரங்கே மரத்தை விட்டு இறங்கு, தாய்த் தமிழ் இருக்க ———– யாள் இந்தி எதற்கு?” என்றெல்லாம் அர்த்தமே இல்லாமல் ரோட்டில் கோஷமிட்டுக்கொண்டு ஊர்வலம் செல்வோம். முடிந்தால் கற்களையும் வீசி எங்கள் வீர, தீர, சூரத் (அசுர) தனத்தைக் காட்டுவோம் ( அப்போது காங்கிரஸ் ஆட்சி இருந்தது. பக்தவத்சலம் என்பவர் முதலமைச்சர், கக்கன் என்பவர் போலீஸ்/ உட்துறை அமைச்சர்)

தமிழ்நாட்டில் தீவைப்பு, மாணவர்கள் தீக்குளித்தல் முதலியன கட்டுக் கடங்காமல் போயின. அப்போதைய தி.மு.க.தலைவரும் பிற்கால முதலமைச்சருமான சி.என்.அண்ணாதுரை, தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனுக்கு போன் செய்து, இந்த வன்முறையை எப்படியாவது நிறுத்துங்களேன். பத்திரிகையில் கொஞ்சம் பெரிதாக எழுதினால் மக்கள் செவிசாய்ப்பரே என்று சொன்னார். அதற்கு “வன்முறையைத் தூண்ட மட்டுமே எல்லோராலும் முடியும், அதை நிறுத்த யாராலும் முடியாது. காட்டுத் தீ எப்படி முழுவதையும் எரித்துவிட்டு தானாகத் தணிகிறதோ அது போலத் தணியும்—என்று ஏ.என்.எஸ். பதில் சொன்னார். இது ஒரு ரகசிய (கான்பிடென்சியல்) விஷயம். இதை ஏ.என். எஸ்ஸே எங்கள் மேஜைக்கு அருகே வந்து பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.

திருநெல்வேலிக்காரன் என்பதற்கு என்ன அடையாளம் என்பதை ஒரு கெட்ட வார்த்தை சொல்லிக் காட்டி இப்படித் திட்டினால்தான் நெல்லைக்காரன் என்பார். அந்த கெட்ட சொல்— எழுத்தில் வடிக்கக் கூடாத சொல் என்பதால் இத்தோடு விடுகிறேன்.

அவர் நீண்ட கட்டுரைகள் எழுதும் போது எல்லாம் மதுரைக்கு வந்து விடுவார். பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் தங்குவார். ஏனெனில் சுதந்திரப் போராட்ட காலத்தில் என் தந்தை வேங்கடராமன் சந்தானம், ஏ.என்.எஸ் எல்லோரும் ஒரு சேரப் போராடி சிறை சென்ற தியாகிகள். சென்னையில் திருவல்லிக்கேணியில் அவரது வீட்டில் ஒரு நாள் சமையல்—- எங்கள் வீட்டில் ஒரு நாள் சமையம் —- என்று முறைவைத்து சமைத்துச் சாப்பிடுவார்களாம். அப்போது நான் பிறக்கக்கூட இல்லை. எல்லாம் என் அம்மா சொல்லித்தான் தெரியும். எனது தந்தை தன்னைப் பற்றி ஒன்றுமே சொன்னதில்லை. இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. நான் அதற்கு நேர் மாறாக எவ்வளவு சுய புராணம் எழுதுகிறேன் என்று!!
dinamani

சென்னை தெருக்களில்
“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறு ஒன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டார், கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ?”

என்ற பாரதி பாட்டைப் பாடிக்கொண்டு ஊர்வலம் போவார்களாம்.
“மணிக்கொடிக் காலம்” — என்ற பி.எஸ்.ராமையா புத்தகத்தில் எனது தந்தை வெ.சந்தானம் பற்றி இரண்டு பக்கங்கள் எழுதி இருக்கிறார்.

அப்பலோ-13 விண்ணீல் சென்று சிக்கலில் மாட்டியது பற்றியும், குன்னர் மிர்தலின் ஏசியன் ட்ராமா புத்தக அடிப்படையில் ரஷ்யா முதலிய கம்யூனிஸ்ட் நாடுகளின் மற்றும் இந்தியப் பொருளாதாரம் பற்றியும், பெட்ரோல் விலை ஏறியபோது பெட்ரோலியம் பற்றியும் கட்டுரைகள் எழுதினார் ஏ.என்.எஸ். அப்போது எல்லாம் எங்கள் வீட்டுக் கூடத்தில்— (பிராமணர் வீடுகளில் ஹால் என்பதை இப்படி கூடம் என்றும் குறுகிய பகுதியை ரேழி என்றும், பின்பகுதியை முற்றம் என்றும் சொல்லுவர்) — உட்கார்ந்து கொள்ளுவார். அவரைச் சுற்றி மலை போல புத்தகங்கள் – நாலா புறங்களிலும் – குவிந்திருக்கும்.

எனது தம்பி ச. சூரியநாராயணன் அப்போது கெமிஸ்ட்ரி பேராசிரியர் (பின்னர் சரஸ்வதி நாராயணன் கல்லூரி பிரின்ஸிபால்). இன்னொரு தம்பி பிசிக்ஸ் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். ஆகையால் ஏதேனும் ரெபரன்ஸ் வேண்டுமானால் அவர்களைப் பார்க்கச் சொல்வார். பெட்ரோலியம் நெருக்கடி பற்றி கட்டுரை எழுதுகையில் விஞ்ஞான விஷயங்கள் எல்லாவற்றையும் என் தம்பிகளிடம் சொல்லி சரி பார்த்துக் கொள்வார். ஏனெனில் அவர், என் தந்தை எல்லாம், சுதந்திரப் போராட்டத்துக்காக பாதியில் படிப்பை நிறுத்தியவர்கள் — எத்தனை வயதிலும் புதிய விஷயங்களைக் கற்கலாம்—அது முடியும் – என்பதற்கு ஏ.என்.எஸ். ஒரு உதாரணம். மணிக் கணக்கில் உட்கார்ந்து எழுதுவார் படிப்பார்—ஆனால் அவர் எழுதியதைப் படிப்பது மிகக் கடினம். அவ்வளவு கிறுக்கலாக இருக்கும். மதுரையில் தினமணியில் வேலைபார்த்த சதாசிவம் என்ற மோனோ ஆப்பரேட்டர் (Mono Machine Operator) மட்டுமே அவர் எழுத்தைப் படிக்கமுடியும்.

எங்கள் வீட்டில் சாப்பிடும் போது என் அம்மா இன்னும் வேண்டுமா? இன்னும் வேண்டுமா? என்று உபசரிப்பார். இதோ பார், இப்படிக்கேட்டால் நான் கூச்சத்தினால் கொஞ்சம்தான் கேட்பேன். கூட்டு, காய்கறிகளை இப்படி வைத்துவிடு. நானே போட்டுக் கொள்கிறேன் என்பார். அதன்படியே செய்வோம்.

vedapatasala

பத்திரிக்கைகளில் சாமி, பூதம் என்று போடுவதெல்லாம் அவருக்கு அதிகம் பிடிக்காது. ஆனால் என் தந்தை இதற்கு நேர் மாற்று. முதல் பக்க தினமணியில் சாமி, சாமியார் செய்திகளைப் போடுவார். அதை ஏ.என்.எஸ். கிண்டல் செய்வார்.

டேய் சந்தானம் நெல்லை ஜில்லாவில் — (அவரது சொந்த ஊர் ஆம்பூர், நெல்லை மாவட்டம்) — ஒரு கோவிலுக்குப் போனேன். நீங்கள் யார் என்று கோவில் பட்டர் கேட்டார். தினமணி பத்திரிக்கை எடிட்டர் ஏ.என்.சிவராமன் என்றேன். சந்தானம் அல்லவா எடிட்டர், நீங்கள் இல்லையே- என்று சொன்னார் என்பார். என் தந்தை அதைக் கேட்டு ஒரு புன்சிரிப்பு மட்டுமே செய்வார். அந்த அளவுக்கு தென் மாவட்டங்களில் என் தந்தை சமயச் சொற்பொழிவுகள் நடத்தியும் அந்தச் செய்திகளை வெளியிட்டும் பிரபலமானவர்.

திடீரென்று ஏ.என்.சிவராமனுக்கு வேதங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தோன்றிவிட்டது. அப்போது எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். எனது பெரிய அண்ணன் சீனிவாசனும், கடைசி தம்பி மீனாட்சிசுந்தரமும் அவருடன் மதுரை, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி வேத பாடசாலைகளுக்குச் சென்று எல்லா வேதங்களையும் டேப் ரிகார்டரில் பதிவுசெய்தனர். அற்புதமான ‘’கலெக்சன்’’ அது. பழைய கால கிரண்டிக் டேப்ரிகார்டரில் (ஸ்பூல் டைப்) செய்துவிட்டதால் பின்னர் பயன்படுத்த முடியவில்லை. டேப்புகள் மட்டும் என் தம்பியிடம் உள்ளன. வாக்ய பாடம், க்ரம பாடம் கன பாடம், ஜடா பாடம் என்று பலவகையில் ரிகார்ட் செய்தனர். இது பல மாதங்களுக்கு நடந்தது. இந்த ஆர்வத்தில் கண பாராயணம், ஜடா பாராயணம் என்றால் என்ன என்று தினமணியில் எழுதத் துவங்கினார். சில கடுமையான எதிர்ப்புக் கடிதங்கள் வந்தன. உடனே நிறுத்திவிட்டார். பத்திரிக்கை என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது என்பது அவர் கருத்து.

தொடரும்… …….. …………

இதே வரிசையில் நான் எழுதிய முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.என் அப்பாவிடம் கற்றது (posted on 8-9-14)
2.என் அம்மாவிடம் கற்றது (4–10–2014)
3.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள் (posted on 9-9-14)
4.தினமணியில் ‘லவ் லெட்டர் நோட் புத்தகம்’ (20—10—2014)

தினமணியில் ‘’லவ் லெட்டெர்’’ நோட்டுப் புத்தகம்

old dinamani1

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1359; தேதி அக்டோபர் 20, 2014.

எல்லோருக்கும் காதல் கடித நோட்டுப் புத்தகம் என்றால் ஏதோ சுவையான, ருசியான செய்தியாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் தினமணிப் பத்திரிக்கையில் ஏ.என்.சிவராமன் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ‘’காதல் கடித நோட்டுப் புத்தகம்’’ — அதாவது லவ் லெட்டர் LOVE LETTER NOTE BOOK நோட்டுப் புத்தகம் என்றால், என் உள்பட எல்லா சப் எடிட்டர்களுக்கும் (SUB EDITORS) குலை பதறும்.

தமிழில் தினமணிப் (DINAMANI) பத்திரிக்கையை அறியாதோர் யாரும் இருக்க முடியாது. அதில் ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் (ஏ.என்.எஸ் A.N.S) என்ற பெயரும் பலருக்கும் நினைவிருக்கும். அரைகுறைப் பாமரன், கணக்கன் என்ற பல புனைப் பெயர்களில் பல கட்டுரைகளை எழுதி அவை நூலாக வெளிவந்து நன்றாக விற்பனையும் ஆனது.

நான் மதுரை தினமணியில் சீனியர் சப் எடிட்டராக (Senior Sub Editor) வேலை பார்த்தபோது, அவர் அடிக்கடி மதுரைக்கு வருவார். வேட்டி கட்டிக் கொண்டு, ஒரு கதர் ஜிப்பா அல்லது அதுவும் இல்லாமல் வெறும் மேல் துண்டுடன் காரில் அலுவலகத்துக்கு வந்து விடுவார்.— அன்று வெளியான தினமணிப் பத்திரிக்கையை ஒரு நோட்டம் விடுவார்.–உடனே “டேய் ராமா அல்லது ராமச்சந்திரா” (வேலைக்காரர்கள்) என்று கூவி, அந்த “லவ் லெட்டர்” நோட்டை இப்படி கொண்டுவா’’ என்பார்.

நாங்கள் ஆறு அல்லது ஏழு சப் எடிட்டர்கள் ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் பார்த்துக் கொள்வோம். உடனே எங்களுக்கு எல்லாம் ‘’டென்ஷன்’’ (Tension) ஏறி விடும். நாங்கள் மொழி பெயர்த்த செய்தியில் ஏதாவது தவறு இருக்கும் அல்லது அதை எழுதிய விஷயம் தெளிவில்லாமல் இரு பொருள்பட எழுதப்பட்டிருக்கும். இனி மேல் அப்படி செய்யக் கூடாது என்பதற்காக அந்த தவற்றைச் சுட்டிக்காட்டி ஒரு குறிப்பு எழுதுவார். அதோடு நிற்காமல் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்து “டேய், இதை யாரடா எழுதினீர்கள்?” — என்று ஏக வசனத்தில் கேட்பார். அந்த ‘’சிப்டில்’’ (SHIFT) உள்ள சப் எடிட்டர் என்றால் அவர் சப்தம் போடத் துவங்குவார். சொல்லியதையே பலவித கோணங்களில் சொல்லத் துவங்குவார்.

old dinamani 3

எங்கள் சப் எடீட்டர்களைத் தாண்டி ‘’ப்ரூப் ரீடர்’’ (PROOF READERS) ஒரு பத்துப் பேர் எதிரும் புதிருமாக உடகார்ந்திருப்பர். அதற்கு நேராக இந்தப் பக்கம் டெலிப்ரிண்டர் (TELE PRINTER) அறை இருக்கும். இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு நடந்து போய்விட்டு மீண்டும் வந்து திட்டுவார். பிறகு இந்தப் பக்கம் போய்விட்டு வந்து திட்டுவார். இப்படி ஒரு மணி நேரம் நடக்கும்.

குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட சப் எடிட்டர் தவிர மற்ற எல்லோரும் குனிந்த தலை நிமிராமல் — கல்யாணப் பெண் போல அமர்ந்து — வேலை செய்வோம். இதற்குள் உள்ளே ‘’கம்பாசிட்டர் ரூம்’’ (COMPOSITORS ROOM) முதலிய அறைளுக்கும் செய்தி பரவிவிடும். அவர்கள் எல்லோரும் —நாங்கள் எழுதியதில் சந்தேகம் கேட்க வருவது போல— வந்து எங்களை வேடிக்கை பார்த்துவிட்டுப் போவர்.

மாலை ஐந்து மணிக்கு எல்லா சப்பெடிட்டர்களும், வழக்கமாக தனலெட்சுமி பவன் வரை நடந்து சென்று இட்லி தோசை காப்பி சாப்பிட்டு வருவோம். அப்போதுதான் எல்லோருக்கும் உயிர் வரும். சிரிப்பும் வந்துவிடும். குற்றவாளிக் கூண்டில் அன்று நின்ற சப் எடிட்டர் — ‘’இன்று நான் யார் முகத்தில் விழித்தேனோ?” —என்று அங்கலாய்ப்பார். நாங்கள் எல்லோரும் “கவலைப் படாதே இன்று உன் முறை, நாளை எங்கள் முறை” என்போம். அதே போல மறு நாள் வேறு ஒரு சப் எடிட்டர் சிக்கிவிடுவார்.

049-dinamani-sivaraman

இதற்கு ஏன் ‘’லவ் லெட்டர் நோட்டுப் புத்தகம்’’ என்று பெயர் வைத்ததையும் ஏ.என்.எஸ்.ஸே எங்களிடம் கூறியிருக்கிறார். அவர் போத்தன் ஜோசப் என்ற பிரபல பத்திரிக்கையாளரிடம் வேலை பார்த்தவர். அவர் இப்படித்தான் லவ் லெட்டர்— அதாவது தவறுகளைச் சுட்டிக் காட்டும் நோட்டு— எழுதுவாராம். இப்படிச் சில மாதங்கள் ஓடும். பின்னர் அவர் தலைமையகத்துக்கு (சென்னைக்கு) சென்றுவிடுவார். எங்கள் எல்லோருக்கும் உற்சாகம் கரை புரண்டோடும். “அட, பள்ளிக்கூட நாளில்தான் ஆசிரியருக்குப் பயந்தோம் என்றால் — எருமை மாடு வயதாகிக் கல்யாணமும் ஆகி குழந்தையையும் பெற்ற பின்னர் இவரிடம் திட்டு வேறா?” என்று சிரித்து மகிழ்வோம்.

ஆனால் அவர் பத்திரிகைத் துறையில் ‘’பழமும் தின்னு கொட்டையும் போட்டவர்’’. செய்தியின் ஆங்கில வடிவைப் பார்க்காமலேயே, ஆங்கிலத்தில் என்ன வந்திருக்கும்? அதை சப் எடிட்டர் எப்படி தவறுதலாகப் புரிந்து கொண்டார் என்பதை துல்லியமாக ஊகித்தறிவார்.

ஒரு சப் எடிட்டர் டேராடூன் (Dehradun) என்பதை டெஹ்ராடன் என்று எழுதிவிட்டார். ஏனெனில் ஆங்கிலத்தில் அப்படித்தான் ஸ்பெல்லிங் (Spelling) இருக்கும். இன்னொருவர், திமிங்கிலம் என்பதற்குப் பதிலாக வேல் மீன் என்று எழுதிவிட்டார். திமிங்கிலத்துக்கு ஆங்கிலத்தில் ‘’வேல்’’ (WHALE) என்று பெயர். ஆனால் அது மீன் வகைப் பிராணி அல்ல. இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் மாட்டிக் கொள்வோம்.

old dinamani1.jpg2

எங்கள் காலத்தில் எல்லா செய்திகளும் ஆங்கிலத்தில் வரும். தமிழில் மொழி பெயர்ப்பது, எடிட் (editing) செய்வது, பேஜ் போடுவது (Page Makeup) முதலியன எங்கள் பணிகள். இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று நான்தான் சீனியர். –உடனே அன்றைய தலைப்புச் செய்தி — ((ஆங்கிலத்தில் பேனர் Banner Item ஐட்டம் என்றும் நாங்கள் எட்டுக் காலம் Eight Column என்றும் சொல்லுவோம்)) – எழுதும் பணி என் தலையில் விழுந்தது. உலகையே உலுக்கும் செய்தி என் கையில் வந்தது எனக்கு மகிழ்ச்சிதான். ஆகையால் வளைத்து வளைத்து எழுதினேன். மறு நாளைக்கு ஒரே பாராட்டு!!

என்னுடைய சீனியரில் ஒருவர் என் காதருகே வந்து, “சாமிநாதா, மிகவும் அழகாக எழுதினாய், நேரடியாகப் பார்ப்பது போல நல்ல வருணனை — ஆனால்……………” என்று இழுத்தார். வயிற்றின் அடியில் இருந்ததெல்லாம் வாய்க்கு வந்துவிடுவது போல வயிற்றை ஒரு கலக்கு கலக்கியது. “ராஜீவ் காந்தி வலம் வந்து — பின்னர் இந்திரா காந்திஜி அமர் ரஹோ என்று விண்ணைப் பிளக்கும் கோஷத்துக்கிடையே சிதைக்கு ………………………………. என்று எழுதி இருக்கிறாய். சுடுகாட்டில் மட்டும் வலம் வர மாட்டார்கள் – இடம் வருவார்கள் என்றார். எனக்குத் தூக்கிவாரி போட்டது. ஏனெனில் ஆங்கிலத்தில் இடம் வலம் என்று வித்தியாசம் இல்லாமல் சொல் இருக்கும். இதற்கெல்லாம் அனுபவம் தேவை.

‘’முன்னப் பின்ன செத்தால்தானே சுடுகாடு தெரியும்’’ – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அப்போதுதான் அந்தப் பழமொழியின் முழுத் தாக்கமும் எனக்குத் தெரிந்தது!!! நல்ல வேளையாக பெரிய ஆசிரியர் (ஏ.என்.எஸ்) சென்னையில் இருந்தார். நான் பிழைத்தேன்.

இதே வரிசையில் நான் எழுதிய முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.என் அப்பாவிடம் கற்றது
2.என் அம்மாவிடம் கற்றது
3.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்

Contact swami_48@yahoo.com