மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 21 (Post No.3676)

Written by S NAGARAJAN

 

Date: 28 February 2017

 

Time uploaded in London:-  8-23 am

 

 

Post No.3676

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 6

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

 

 

 • தராசு என்னும் நூலிலிருந்து ஸி.ஆர் ஸ்ரீநிவாஸன் (1939) எழுதிய கட்டுரை ஒன்றை குமரி மலரில் காண்கிறோம்.

 

அந்தக் கட்டுரை:

 

     எந்த தேசக் கவியுடனும், எந்த முறையில் சோதித்தாலும் பாரதி சளைக்க மாட்டார் என்பது உறுதி. ஆனால் அவர் செய்த சேவையில் சிறு பகுதியையே அது குறிக்கும். பாஷைக்குப் பெர்ருமையைத் தேடியதே அவர் செய்த அரிய சேவை.

 

 

 

     தமிழ் நாட்டிலே தாய் பாஷையின் மாற்று மங்கியிருந்தது; அன்னிய ஆட்சியில். அன்னிய பாஷைக்கு அளவு கடந்த மதிப்புக் கொடுத்து, ஆணவத்தை இழந்து விட்டனர் தமிழ் மக்கள். பதவியும் பொறுப்பும் படைத்த பெரியோர் சுயபாஷையில் பேசக் கூச்சப்பட்டனர்; குறைவென்றும் நினைத்தனர்.; பாஷையின் மீது பழியைச் சுமத்தினர். பாரதி தோன்று முன் இருந்த நிலைமையை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

 

      மாறுதலுக்கு முக்கிய காரணம் பாரதி என்பது என் சித்தாந்தம். தமிழை உயிர்ப்பித்தவர் அவர்; ஊட்டம் அளித்தவர் அவர்; பாஷையின் லாகவத்தை மெய்ப்பித்தவர் அவர்; பாஷைக்கு மேனி அளித்தவர் அவர்.

 

 

       பாரதி வாழ்ந்தது சுதேசி இயக்கம் தோன்றிய காலம்; விடுதலை வேட்கை பிறந்த காலம்; வெற்றி முரசு கொட்டினார் பாரதி. உறக்கம் தெளிய, வீரம் சொரியப் பாடினார் பாரதி. அன்று தாயகத்திற்கு அவர் செய்த ஸேவை அளவிடற்பாலதன்று.

 

 

41) இதே குமரி மலர் இதழில் பாரதியார் பாமணம் என்ற தலைப்பில் பண்டித ஜனாப் K. அப்துல் சுகூர் (1933) எழுதிய கவிதையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

 • கண்ணிகள் கொண்ட இந்தப் பாடல் பாரதி என்ற மாதப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

 

பாரதியார் பாமணம்

 

தேனிருக்குது தினையிருக்குது தென்பழனியில் என்ற மெட்டு

 

 1. பூ மணக்குது புகழ் மணக்குது

     புண்ணியர் பாடலிலே                               \           

   பாமணக்குது பயன் மணக்குது

     பாரதி பாட்டுள்ளே

 1. இனிமை மொழி இனிசையிலங்குது

      இன்பப் பாடலிலே

   பனிமொழிச்சியர் கலை மணக்குது

      பாரதி பாட்டுளே

 1. காவியக்கனி  கனிந்திருக்குது

       காமர்ப் பாடலிலே

   பாவியலணி பரந்திருக்குது

       பாரதி பாட்டுளே

 1. புண்ணிய நெறி பொலிந்திருக்குது

       புதுமைப் பாடலிலே

   பண்ணியல்களின் நடை நடக்குது

       பாரதி பாட்டுளே

 1. தகைமை தத்துவந் தவழ்ந்திருக்குது

        தண்ணார் பாடலிலே

    பகைமை குன்றிய வாழ்க்கை தங்குவது

         பாரதி பாட்டுளே

 1. தேஞ்சார்ம் பசுந் தேறலிருக்குது

         தேசப் பாட்லிலே

   பாஞ்சாலி நிறை படர்ந்திருக்குது

         பாரதி பாட்டுளே

 1. ஜெயந்தொனிக்குது திறனொலிக்குது

       திவ்யப் பாடலிலே

   ப்யந்தொதுங்குது தீண்டாமைப் பேய்

        பாரதி பாட்டுளே

 1. சாதிக் கொடுமைகள் தகர்ந்தழியுது

       சங்குப் பாடலிலே
பாதகர் செயும் மோசமோடுது

       பாரதி பாட்டுளே

 1. சேவை முறைகள் சேர்ந்திருக்குது

       தேசப் பாடலிலே

   பாவையர் சுதந்திரமிலங்குது

        பாரதி பாட்டுளே

 1. விடுத்லையெனும் வீணையொலிக்குது

        வித்தகப் பாடலிலே

   படுப்வத் தொழில் பறந்திரியுது

        பாரதி பாட்டுளே

 1. அச்சமென்ற சொலகன்றிருக்குது

          அன்புப் பாடலிலே

      பச்சமென்ற சொல் பரவி நிற்குது

          பாரதி பாட்டுளே

 1. கொஞ்சுங்காதல் திறந்தொனிக்குது

        குயிலின் பாடலிலே

   பஞ்சமோடிட வழியிருக்குது

        பாரதி பாட்டுளே

 1. அடிமையென்ற சொலகன்றிருக்குது

        அமுதப் பாடலிலே

   படிதலென்ற சொல பழுதுபட்டது

         பாரதி பாட்டுளே

 1. முத்தமிழெனும் வெற்றிமுழங்குது

        முரசுப் பாடலிலே

   பத்தழகுகள் பரவி நிற்குது

       பாரதி பாட்டுளே

 1. அண்டத்தை வெல்லும்

       ஆண்மை தங்குது அழகுப் பாட்லைலே

   பண்டைத் தமிழர் வீறிலங்குது

       பாரதி பாட்டுளே

 1. பாரதியென்றிட சக்தி ஜெனிக்குது

      பாப்பாப் பாடலிலே

  “பாரதி” மாளிகை தன்னிலுலாவுது

      பாரதி பாடல்களிலே

 • “பாரதி”

மாதப் பத்திரிகை

உத்தமபாளையம் 1933 ஆகஸ்டு

அடுத்து சில சுவையான கட்டுரைகள் உள்ளன.

 

இதைத் தொகுக்க திருஏ.கே. செட்டியார் அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் என்பதை நினைத்துப் பார்த்தால் அவரின் அருமை தெரியும்.

 

                   -தொடரும்

***

 

ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! –2

 

Picture shows Arctic Circle (North Pole)

ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! –பகுதி – 2

                                       ச.நாகராஜன்

தெய்வப் பணி, நாட்டுப் பணி, தமிழ்ப் பணியை முனைந்து செய்து வந்த செட்டியார் குலத்தில் தோன்றிய உலகம் சுற்றிய தமிழன் திரு ஏ.கே.செட்டியார் குமரி மலரில் வெளியிட்ட மகாமேரு யாத்திரையின் சென்ற இதழ் தொடர்ச்சியைக் கீழே படிக்கலாம் :

இவ்விடத்தில் ஒரு ஆப்சர்வேடரி ( நக்ஷத்திர யந்திரசாலை) வைக்கப் பட்டிருக்கிறது.கணித சாஸ்திரம், வான சாஸ்திரங்கள் படிக்கும் ஐரோப்பியர், அமெரிக்க மாணவர்கள் பள்ளிக்கூடப் படிப்பு முடிந்தவுடன் ஒரு வருஷம் இவ்விடம் வந்து பயிற்சி பெற்றுப் போவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் ஜர்மன் தேச மாணவருடன், சூரியன் நாடோறும் மாறும் வர்ணங்களைக் குறித்தும் படவுதவியுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது இதற்கு அடுத்தது உருக்கின தங்க

 

வர்ணம் நாளைக்குப் படத்தில் வருமென்று நான் சொன்னவுடன் அவருக்கு ஆச்சரியமுண்டாயிற்று.”எப்படி ஐயா, தங்களுக்கு இவ்வளவு நிச்சயமாகத் தெரியும்?” என்று என்னைக் கேட்டார். உடனே நான், உத்தராயண முதலில் தாமிர வர்ணமும், பிறகு அருணம், அப்புறம் பப்புரு நிறம் கடைசியில் ஸுமங்கல் (உருக்கின தங்க வர்ணமென்று) ஸ்ரீ ருத்திரத்தில் கூறியிருப்பதைச் சொன்னேன். உடனே அம்மாணவர் வியப்புற்றார்.ருக் வேதத்தில் சூரியனுக்குத் தங்க வர்ணத்திற்கு மேலான வெண்மை நிறத்தை வர்ணிக்கவில்லை என்பது ஆர்க்டிக் பிரதேச சூரியனைக் குறிப்பதாகும்.இதற்கு நேரே வடக்கில் “மேரு நுனி” இருக்கிறது. இந்த இடத்திலிருந்து தான் பௌதிக நூல் வல்லார் மேரு நுனியைக் காணப் போய்க் காலமடைந்தார்கள். அவர்களது யந்திரம் முதலியவைகளை ஞாபகார்த்தமாக இவ்வூர்க் கோவிலில் வைத்திருக்கிறார்கள்.

 

இது முதல் வடக்கே சென்றால் அவிச்சின்ன சூரியனைப் பார்க்கலாம். ஆகையால் “உதயாஸ்தமனம் இல்லாத”  சூரியனைச் சில விரதக்காரர் உபாசிக்க வேண்டுமென்று வேதத்தில் கூறியதை அனுஷ்டிக்க விரும்பினால் அவர்கள்  இந்த ஸ்தானத்தை அடைய வேண்டும்.

 

என் வாழ்நாள் முழுதும் கண்ணுக்குக் கண்ணாடியில்லாமலும் கண்ணாடி போட்டுக் கொண்டிருப்பவர்களை யோகப்பயிற்சியின் பலனாக எடுக்கும்படியும் செய்திருப்பதுண்டு.நாம் அதை உபயோகியாததினால் ஸம்ஸ்கிருதத்தில் கண்ணிலணியும் கண்ணாடிக்குப் பெயர் இல்லை. நாள்தோறும் சுமார் பத்து மணி வரை பகலில் ஏட்டுச் சுவடியிலுள்ள சிறிய எழுத்துக்களைப் படித்துக் காலங் கழித்து வருவேன். ஒரு நாள் பகலில் சூடான ஓரிடத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது சூரிய ஒளி மூளையில்  (ஸன் ஸ்ட்ரோக்) விழக் கண்களுக்குக் கெடுதல் நேர்ந்தது. கர்ம விபாக சாஸ்திரப்படி உதயாஸ்தனமில்லாத சூரியனைத் தரிசித்து அவனைப் பார்த்துக் கொண்டே சூரிய அஷ்டோத்திரத்தை சில ஆயிரம் ஜபித்துப் பிறகு ஸ்ரீ ருத்திரத்தினாலும் “வயஸ் ஸுபர்ணா” என்கிற மந்திரத்தினாலும் புரச்சரணை செய்து விரத சமாப்தி செய்வதாக சங்கல்பித்தேன். உடனே யாத்திரையை ஆரம்பித்து ஆர்க்டிக் பிரதேசம் வந்தேன்.

 

நாள்தோறும் கப்பல் எஜமானனைப் பார்த்து ‘ட்றோம்ஸோ போனவுடன் சூரியன் மேகத்தாலும், பனிமழைகளினாலும், மறைபடாமல் எனக்கு தரிசனம் கிடைக்குமா?” என்று ஆவலுடன் கேட்பேன்.அப்பொழுதெல்லாம் அவரும் கப்பலில் அமைந்திருக்கிற யந்திரத்தைப் பார்த்துக் கொண்டே கால நிலைமையை முன்னே யறிந்து சொல்ல முடியாதென்று கூறுவார்.

நானோ இந்தியாவிலிருந்து சுமார் 8000 மைல் வரை யாத்திரை செய்து பெருஞ் செலவில் அதை நிறைவேற்றப் போனவன். “அவிச்சின்ன சூரிய” தரிசனமில்லாமல் திரும்பினால் இதை விட மனோ துக்கம் எனக்கு வேறு என்ன வேண்டும்? எனக்காகக் கப்பலை நிறுத்த முடியுமா?

 

ஒரு நாள் மாலை என் மனத்தில் ஈசுவர கிருபையினால் ஒன்று தோன்றிற்று. அதாவது சூரியனை நினைத்து “சூரியனே! நீ நாளை முதல் மூன்று தினங்கள் மேகம் முதலியவற்றால் மறையாமல் தரிசனம் கொடுத்து என் விரதத்தை முற்றுப் பெறச் செய்யாவிடில் என் சாபத்துக்கு உட்பட நேரும். ஈசுவராதிகளெல்லாம் பக்தர் சாபத்தால் தசாவதாரம் எடுக்க நேர்ந்ததை ஞாபகப் படுத்துகிறேன்” என்று சொல்லி விட்டு என் அறைக்குள் போய் சிரம பரிகாரம் செய்து கொண்டேன்.

 

சில மணி நேரத்துக்கெல்லாம் கப்பல் தலைவன் என்னிடம் ஓடி வந்து ‘சூரியன் இனிப் பிரகாசமாகுவான்; யந்திரமும் அப்படியே தெரிவிக்கிறது. தாங்களும் விரதத்தை நிறைவேற்றலாம்” என்று சொன்னான். நான் அவரை ஒரு தேவ தூதனாக நினைத்து உடனே விரதத்தை மேற்கொண்டேன்.

 

கப்பல் போகக் கூடிய “வடக்கு முக்கு” என்று ஓர் இடம் இருக்கிறது. அதையடைந்த  பிறகு  கொஞ்சம் தென் கிழக்காகக் “கர்கிஸ்” என்ற சிற்றூர் போய்ச் சேர வேண்டும். அது தான் யாத்திரா முடியும் இடம். இவ்விடத்தில் நிலக்கரி கிடைக்கிறது. ஆகையால் ஒரு காலத்தில் இந்த இடம் நம் தேசம் போல அதிக வெப்பமுள்ளதாய் மரம் செடிகள் நிரம்பப் பெற்று பூகம்பம் முதலானவற்றால் அழிந்து ஆயிர வருஷக் கணக்காக அப்படியே யிருந்திருக்க வேண்டுமென்று நம்பலாம்.

சில காலங்களில் வருஷம் பூராவும் சூரிய ஒளியின்றி பனி மழையால் உணவுக்கு வேண்டிய பயிர் முதலாயின உற்பத்தியாகாமல் போனதினால் நம் முன்னோர் இதை விட்டுத் தெற்கே சென்றார்கள் என்று சாந்தோக்கிய உபநிஷத்தில்  முதல் அத்தியாயத்தில் கூறியிருக்கிறது.

 

வடக்கு நுனியிலிருந்து மேற்கு நுனிக்கு சுமார் 190 மைல் இருக்கிறதென்று ஆராய்ச்சியாளர் சொல்லுகிறார்கள். அந்த இடம் எப்படியிருக்கிறதென்பதைப் பார்க்க அறிஞர்களால் முடியவில்லை. ஆகாயவிமானமாவது கப்பலாவது அவ்விடம் போகவியலவில்லை. மேரு நுனியை நெருங்கின விமானமும், கப்பலும் கிழக்கே யிழுக்கப்பட்டு சுமார் 500 மைலுக்கு அதிக தூரத்தில் தள்ளப்படுகின்றன.

 

(வடக்கே காட்டுகிற முள்ளை) நீங்கள் சாதாரணமாகப் பார்த்திருப்பீர்கள். மேரு நுனிக்குப் போனால் அந்த முள் எந்தப் பக்கம் திரும்புகிறதென்று தெரிய வேண்டும். இது தான் ரஹஸ்யம். இந்த வடக்கு நுனியிலிருந்து கொஞ்ச தூரத்தில் வடமேற்காக ‘ஸ்விஸர்பர்கு தீவு’ இருக்கிறது.அவ்விடத்திலிருந்து மேரு நுனி சுமார் இருநூறு மைலுக்குள்ளேயே இருக்கக் கூடும். அங்கிருந்து மேரு நுனிக்குப் போனாலும் முன் நேர்ந்த கதி தான். ஆண்டுதோறும் உத்தராயணத்தில் மேல் நாட்டுப் பேரறிஞர் பலர் முயற்சி செய்துகொண்டே வருகிறார்கள். ஏதாவது ஒரு தடை நேருகிறது.

அதனாலேயே தைத்திரிய ஆரணத்தில் ஒரு ரிஷி மற்றொருவரைப் பார்த்து ‘நான் மேருவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய பார்த்ததில்லை” என்றார்.

அதற்கு மற்றொருவர், “நான் நேரே பார்த்தேன்” என்றார்.

அவர் மகான்; நாம் மனிதர்; ஆகையால் மேருவைப் பார்க்க முடியாது. நான்கு தினங்களில் சூரியனைத் தரிசித்து ஜபம் செய்து திரும்பவும் ட்றோம்ஸோவுக்கு வந்தேன்.

 

மேரு யாத்திரை முற்றும்.

 

ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! –பகுதி – 1

Picture shows Sun is visible 24 hours a day.

ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! –பகுதி – 1

ச.நாகராஜன்

கோவில்களைக் கட்டுவதற்கும் கட்டிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கும் தமிழ் வளர்ச்சிப் பணிக்கும் தங்கள் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்த அற்புதமான குலம் செட்டியார் குலம். இவர்களின் பணிகளைப் போற்றுவார் இன்று இலர். தமிழகத்தின் இன்றைய பல துரதிர்ஷ்டங்களில் இதுவும் ஒன்று!

உலகம் சுற்றும் தமிழன் என்று புகழப்பட்ட திரு ஏ.கே.செட்டியார் (தோற்றம்: 3 நவம்பர் 1911 மறைவு 10 செப்டம்பர் 1983)சிறந்த தேசபக்தர். நேதாஜியை படம் எடுத்தவர். குமரி மலர் என்ற அற்புதமான பத்திரிக்கை மூலம் தமிழ்ப் பணி ஆற்றியவர்.

வெள்ளை வெளேரென்று தும்பைப் பூ போல சட்டையும் வேஷ்டியையும் அணிந்து வருவார். தும்பைப் பூ போன்ற ஆவி பறக்கும் சூடான இட்டிலிகளின் மேல் தேனை ஊற்றிக் கொண்டு சாப்பிடுவார். மென்மையான குரல். எப்போதும் புன்முறுவல் தான்! அழகிய வெள்ளைப் பற்கள் தெரிய அவர் பேசுவதைக் கேட்பதும் ஓர் இனிய அனுபவம். குமரி மலர் சந்தாவைத் தானே நேரில் பெற வருவார்.

அவரது குமரி மலர் பத்திரிக்கை ஒரு பெரும் பொக்கிஷம். பார்த்துப் பார்த்துப் பழைய கட்டுரைகளை வெளியிடுவார்.

அவரது குமரிமலர் பத்திரிக்கையில் வெளி வந்த ஒரு அற்புதமான கட்டுரையைப் பார்ப்போம்!

கட்டுரையின் தலைப்பு : மகா மேரு யாத்திரை (1934)

எழுதியவர் :   ஆர். அனந்த கிருஷ்ண சாஸ்திரி

நார்வே தேசத்தில் ட்றோணியம் என்ற கடற்கரை நகரிலிருந்துதான் மகாமேரு பிரதேசத்திற்குப் புறப்பட வேண்டும். மகாமேரு பிரதேசத்திற்கு ஆர்க்டிக் பிரதேசம் என்று பெயர் வழங்குகிறது. இவ்விடத்திலிருந்து மகாமேரு சுமார் ஆயிரம் மைல் தூரத்திலிருக்கிறது.

 

ட்றோணியத்திலிருந்து யாத்திரை செய்த கப்பல் தபால் கொண்டு போவது; ஆகையால் ஒவ்வோரிடத்திலும் தபாலைக் கொடுத்து வாங்கச் சுமார் அரை மணி நேரம் வரை நிற்கும். அப்பொழுது நான் கீழே இறங்கி அந்தக் கிராமங்களைச் சுற்றிக் கொண்டு வருவேன். தலையில் தலைப்பாகையும் கழுத்தில் சால்வையும் அணிந்து கொண்டுள்ள மஞ்சள் நிற மனிதனை அத்தேசத்தார் பார்த்திராததினால் என்னைப் பார்த்து வியப்புற்றனர்.சிலர் கப்பல் அதிகாரியிடத்தில் போய் என் வரலாற்றை வினவியதுமுண்டு.

 

கப்பல் ஏறின முதல் நாளில் கப்பல் அதிகாரியைச் சந்தித்து மறுநாள் காலையில் தண்ணீரில் ஸ்நானத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லப் போனேன்.தண்ணீரில் வைகறையில் ஸ்நானம் செய்தலென்பதை அவர் கேட்டிராதவர்.ஆதலால் அஞ்சி உடலுக்குத் தீமை வந்தால் தாம் பொறுப்பேற்க நேருமாகையால் நான் எவ்வளவு தூரம் பிரார்த்தித்தும் சாவியைக் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார். அவருடைய மனைவியிடத்தில் சென்று சிறிது நேரம் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்த பிறகே இந்தியாவில் குளிர்காலத்தில் கூடப் பலர் கங்கை முதலான நதிகளில் வைகறையில் நாலு மணிக்கு ஸ்நானம் செய்யும் வழக்கத்தையும் இந்துக்களின் ஆசாரத்தையும் சொல்லி உறுதிப் படுத்தினேன். அவ்வம்மை தயையால் தண்ணீர் அறைச் சாவியை வாங்கி மறுநாள் வைகறையில் ஸ்நானம் செய்தேன். பிறகு ஜபம் பூஜை முதலிய எல்லாம் முடிந்து வெளியில் வந்தவுடன் எனக்கு ஸ்நானத்தினால் கெடுதல் உண்டா என்று பார்க்கப் பலர் வந்தார்கள்.

பால், பழம், பச்சைக் காய்கறியாகிய உணவைப் பார்த்து நான் ஒரு ஸித்த புருஷன் என்றும் கீழ் நாட்டில் அவதரித்திருப்பதாகவும் சொல்லலாயினர்.

என்னைப் போல் இந்தியாவில் கோடிக்கணக்கான  பேர் உண்டு என்று சொல்லியும் அவர்கள் நம்பவில்லை.இதை வழக்கத்தினால் சம்பாதிக்கலாம்; இஃது ஒன்றினாலேயே மோக்ஷம் கிடைத்து விடாது என்று நான் அவர்களுக்குக் கூறுவேன். என்ன சொன்னாலும் அவர்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை.

பிறகு மெள்ள மெள்ள 66-வது கோடு (லாடிடியூட்) தாண்டினேன். கணித சாஸ்திர வித்வானாகிய பாஸ்கராசாரியார் சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன் எழுதிய ‘சித்தாந்த சிரோமணி” என்னும் நூலில்

66-வது கோடு தாண்டி வடக்கே போகப் போகப் பகல் நேரம் மிகுதியாகவும், மேருவில் ஆறு மாதம் ஒரே பகலாகவும் இருக்கும் என்று கூறியது ஞாபகத்துக்கு வந்தது; பகல் அதிகரிக்கலாயிற்று.

ட்றோம்ஸோ என்கிற இடத்தில் 68-வது கோட்டில் மே மாதம் 14-ந் தேதி இரவு 11-45 மணிக்கு மேற்கு நோக்கி நின்று சூரியன் வரவை எதிர்பார்த்தேன். ஈசுவர கிருபையினால் அன்று வானில் மேகம் பரவுவதும் பனி விழுவதும் இன்றி இருந்தது. மேலைக் கடலிலிருந்து ஒரு ஒளிப்பிழம்பு தோன்றி உடனே வடக்கே ஓடிவிட்டது. இதைத் தான் ‘பாதி ராத்திரி உதய ஸுர்ய’ னென்றும் மேற்கில் உதித்து கிழக்கில் அஸ்தமனமாகிறதென்றும் வேதம் கூறுகிறது.இந்த ட்றோம்ஸோவில் பாதி ராத்திரியில் உதித்த ஸூர்யன் உடனே  அஸ்தமனமாகாமல் சரியாக நூற்றொரு நாட்கள் வானில் குயவன் சக்கரத்தை யொப்ப தணிந்து சுழற்றிக் கொண்டு ஆகஸ்டு மாதம் கடைசியில் கிழக்கே அஸ்தமனமடைகிறான். அப்படியே தக்ஷிணாயனத்தில் 101 நாட்கள் சூரியன் ஒளியின்றி ஒரே இரவாக இருக்கும். இந்த இடத்தில் தான் முன்னையோர் “சதராத்திரக்கிரது” நடத்தியதாக ச்ரௌத சூத்திரங்கள் கூறுகின்றன. 101 நாட்கள் ஒரே இரவாயிருக்கிற வேறோரிடம் இதற்கு நேரே கீழ்ப் பூமியிலாகும்.  அந்தப் பூமி அமெரிக்காவின் வட பாகத்தில் ஆர்க்டிக் பிரதேசத்தில் அலாஸ்கா என்கிற இடமாகும். ஆரியர் அந்தப் பிரதேசத்தில் பண்டைய நாளில்  வசித்து வந்ததாகச் சரித்திரங்களினால் விளங்கவில்லை; ஆகையால் இந்தப் பிரதேசத்திலேயே ஓர் இரவு முதல் நூறு இரவு வரையில் நம் பெரியோர் யாகம் நடத்தியிருக்க வேண்டும்; இதை மனதிற் கொண்டு ருக் வேதத்தைப் படித்தால் அதில் வர்ணித்திருக்கிற சூரிய வர்ணங்கள் ஆறு மாதம் சூரியனும் ஆறு மாதம் சூரியனில்லாத காலமும், பலவித உதய காலமும் மூன்று முதல் ஐந்து வரையிலுள்ள ருதுக்களும் கணித சாஸ்திர முறைப்படி நன்கு விளங்கும்.

 

ஆர்க்டிக் பிரதேசத்தில் சூரியன் எப்பொழுதும் மறைவின்றி யிருப்பதால், பூமியில் உள்ள நிலங்களில் தானியங்கள் மும்முறை விதைத்து அறுவடை செய்யப்படுகிறது.ஆகையால் உணவுப் பண்டங்களுக்கு குறைவேயில்லை. தக்ஷிணாயனத்தில் ஒரே பனி மழை; அப்பொழுது பயிர்த் தொழில்கள் நடப்பதில்லை.கைத்தொழில் வேலைகள் நடக்கும். ஒரே இராத்திரி காலங்களில் சூரிய ஒளியே இல்லாததால் சந்திரனுடைய நிலவாலும் விடியற்கால (அருணோதய) பிரகாசத்தினாலும் மகா மேருவிலிருந்து ஒரே ஒளிப் பிழம்பு தெற்கே பார்த்து வீசும் பிரகாசத்தினாலும்  (ஆறோ போரியாலிஸ்) இருட்டே தெரிவதில்லை. நம் தேசத்தில் சூரியனை மறைத்து இருளுடன்  மழை பெய்யும் காலத்துப் பகல் போல இருக்கும். ஆனால் அடிக்கடி ஒளி மாறும்.

-அடுத்த இதழில் கட்டுரையின் இறுதிப் பகுதி தொடரும்