Article written by London swaminathan
Date: 25 May 2016
Post No. 2838
Time uploaded in London :– 11-00 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஐந்து தீய செயல்களை இந்துக்கள் பெரிய பாவச் செயல்களாகக் கருதுகின்றனர். அவை
கள், களவு, கொலை, பொய், காமம் (பிறர் மனைவியை விரும்பும் காமம்).
ஓதநீர் மண் இவை முதல் ஓதிய
பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அஞ்சியே
வேத நூல் வரன் முறை விதிக்கும் ஐம்பெரும்
பாதகம் திரண்டு உயிர்ப் படைத்த பண்பினான்
-ஆரண்ய காண்டம், கவந்தன் படலம், கம்ப ராமாயணம்
பொருள்:–
கவந்தன் என்னும் அசுரன் பஞ்ச பூதங்களால் மட்டும் ஆனவன் அன்று; பஞ்ச மா பாதகங்கள் ஒன்று சேர்த்து ஒரு உருவம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தானாம்.
அந்தக் கவந்தன், குளிர்ச்சி பொருந்திய நீரும் பூமியும் ஆகிய இவை முதலாகக் கூறப்பட்ட பஞ்ச பூதங்களினால் இவன் உடல் ஆக்கப்பட்டது அல்லாமல், வேத நூல்கள் முறைப்படி உரைக்கும் கள், களவு, பிறர் மனை விரும்புவதாகிய காமம், பொய், கொலை ஆகிய பஞ்ச மா பாதகங்கள் ஒன்றாகச் சேர்த்து உயிர்பெற்று வந்தவன் என்னும் தன்மை உடையவன்.
பகவத் கீதை
பகவத் கீதையில் (1-36) அர்ஜுனன், போர் புரிய மறுத்து அதற்குப் பல காரணங்களைக் கூறுகிறான். அதில் ஒன்று கொடும் பாவிகளான, திருதராஷ்டரன் பிள்ளைகளான கௌரவர்களைக் கொன்றால் மிகவும் பாபம் வருமே என்கிறான். கொடும் பாவிகள் என்பதற்கு அர்ஜுனன் பயன்படுத்தும் சொல், ‘ஆததாயின:’ என்பதாகும்.
யார் ஆததாயினர்கள் என்பதை ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் அழகாக விவரிக்கிறது. அதில் பஞ்ச மஹா பாதகங்களோடு, ‘தீ வைத்தல்’ என்ற மற்றொரு பாபமும் சேர்க்கப்படுகிறது:–
அக்னிதோ கரதச்சைவ சஸ்த்ரபாணிர்த் தனாபஹ:
க்ஷேத்ர தார ஹரச்சைவ ஷடேதே ஹ்யாததாயின:
பொருள்:
தீவைப்பவன், விஷம் வைப்பவன் (கொலை), ஆயுதம் கொண்டு ஆயுதமில்லாதவரைக் கொல்பவன், பிறர் பொருளை அபகரிப்பவன், பிறர் நிலத்தை அபகரிப்பவன், பிறர் மனைவியை அபகரிப்பவன் – இந்த ஆறு பேரும் ஆததாயிகள் (கொடும் பாவிகள்) எனப்படுவர்.
ஆக வேத காலம் முதல் இந்தப் பாவப் பட்டியல் இருப்பதால்தான் “வேத நூல் வரன் முறை விதிக்கும் ஐம்பெரும் பாதகம்” என்று கம்பன் சொல்கிறான். வேத நூல்களைக் கரைத்துக்குடித்தவன் கம்பன்!
சிறுபஞ்ச மூலத்தில், காரியாசான் கொஞ்சம் மாறுதலான பாவப் பட்டியல் தருகிறார்:
பொய்யாமை பொன் பெறினும் கள்ளாமை மெல்லியலார்
வையாமை வார்குழலார் நச்சினும் – நையாமை
ஓர்த்துடம்பு பேருமென்று ஊன்வாய் உண்ணானேல்
பேர்த்துடம்பு கோடல் அரிது
பொருள்:-
ஒருவர்க்கு தங்கக் கட்டிகள் கிடைக்கும் என்றாலும் பொய் சொல்லாதிருத்தல், திருடாமல் இருத்தல், தன்னைவிட வலிமை குறைந்தவரை திட்டாமை, பெண்களே மேலே வந்து விழுந்தாலும் அவர்களை விரும்பாமை, உடல் மெலிகிறதே என்று எண்ணி ஆடு, மாடு, கோழிகளைக் கொன்று உண்ணாமை – இந்த ஐந்தையும் பின்பற்றுவோருக்கு மறு பிறவி இல்லை; முக்தி கிட்டும்.
தம்மபதம்
இதையே புத்தமதத்தினரின் வேத நூலான தம்மபதத்திலும் புத்தர் கூறுவார்:-
யார் ஒருவன் மற்ற உயிரைப் பறிக்கிறானோ (கொலை), யார் ஒருவன் தனக்குக் கொடுக்கப்படாததை எடுத்துக் கொள்கிறானோ (களவு), யார் ஒருவன் பிறர் மனைவியை அனுபவிக்கிறானோ (காமம்), யார் ஒருவன் பொய் சொல்கிறானோ, யார் ஒருவன் மதுபானம் அருந்துகிறானோ அவன் தனக்குத்தானே வேர் செல்லும் ஆழத்துக்குக் குழி பறித்துக் கொள்கிறான். (தம்மபதம் -246, 247)
ஆன்றோர் சொல்லை மனதில் கல்லெழுத்தாகப் பதித்து, அவர் சொற்படி நடப்போம்.
–சுபம்–
You must be logged in to post a comment.