வேதத்தில் சிகை அலங்காரம்

9bfdf-kundal2bazaku

Written by London swaminathan

Research Article No: 1826

Date: 24 April 2015; Uploaded in London at 13-25

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்துக்களின் கலைக் களஞ்சியம் வேதங்கள் ஆகும். அவைகள் சமயம் சம்பந்தமான புத்தகங்கள். இருந்தபோதிலும் அவற்றில் பல வகை பொது விஷயங்களும் வருகின்றன. அதில் ஒரு சுவையான விஷயம் சிகை அலங்காரம்.

2000 ஆண்டுப் பழமையுடைய தமிழ் இலக்கியத்தில் ஐம்பால் கூந்தல் பற்றிய தகவல் பல இடங்களில் வருகின்றது. ஐம்பால் கூந்தல் என்பது

குழல், அளகம், கொண்டை, பனிச்சை துஞ்சை என்ற கூந்தலின் ஐந்து பகுப்புகள் என்று பதிற்றுப்பத்து (18-4)உரை கூறும். இவ்வாறு 5 வகை என்பதை விட்டு 5 பிரிவுகளாகப் பின்னிக் கொண்டனர் என்றும் பொருள் கொள்ள ஐம்பால் திணை போன்ற சொற்கள் உதவும்.

தமிழ் இலக்கியத்துக்கு 1700 ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்த வேதத்தில் நாற்பால் கூந்தல் பற்றிய விஷயம் கிடைக்கிறது.

இராக் நாட்டில் மலைப் பகுதிகளில் வசிக்கும் யசீதி பழங்குடி மக்கள் தீயை வணங்குவது, மயிலைப் புனிதப் பறவையாக வணங்குவது ஆகியன எல்லாம் அவர்கள் பழங்காலத்தில் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்பதை காட்டுவதை முன்னர் இரண்டு கட்டுரைகளில் தந்தேன். அவர்களும் இப்படிப் பலவகையாக நாற்பால், ஐம்பால் எனப் பிரிப்பது ஒப்பிடற்பாலது.

09f7f-yazid-boys-plait-like-girls

அமிபால், நாற்பால்  கூந்தல்—-யசீ்தீ  இன மக்கள்

கூந்தலை, தலை முடியை வைத்து சிவ பெருமான், புலஸ்த்ய மகரிஷி ஆகியோருக்கு பெயர்களும் உண்டு. சிவனுக்கு அவருடைய கேசம் (ஜடை) உயர்த்திக் கட்டியதால் “கபர்தின்” என்று பெயர். இன்றும் சாது சந்யாசிகள் இப்படி ஜடாதாரிகளாக வலம் வருவதை நாம் காணலாம். புலஸ்த்ய என்பது நீண்ட நேரான முடியைக் குறிக்கும். (எ.கா. புலஸ்த்ய மகரிஷி)

“அபாச” என்ற சொல் பெண்கள் பின்னல் போட்டுக் கொண்டதைக் காட்டும்; ரிக் வேதத்தில் 4 பின்னல் (இரட்டைச் சடைப் பின்னல் போல 4 சடை) போட்ட பெண் பற்றிய பாடல் (RV 10-104-3) உள்ளது.

அதர்வண வேதம், வாஜசனேயி சம்ஹிதையில் கேசம் என்ற சொல் பயிலப்படுகிறது (AV 5-19-3, 6-136-3). கத்தி, கத்தரிக்கோல் (மயிர் குறைக் கருவி) ஆகியன தமிழ், வேத இலக்கியங்களில் இருக்கின்றன.

நீண்ட கூந்தல் என்பது பெண்மையின் இலக்கணம் என்று சதபத பிராமணம்(SB 5-1-2-14) கூறும். மஹாபாரதத்தில் தன்னை இழிவு படுத்திய துச்சாதனனின் ரத்தம் தன் கேசத்தில் படும்வரை தலையை முடிக்கமாட்டேன் என்று திரவுபதி செய்த சபதம் அனைவரும் அறிந்ததே. அதாவது கேசம் (தலை முடி) என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. தனது கணவரைத்தவிர, வேறு எந்த ஆடவரும் கேசத்தைத் தொடக் கூடாது என்றும், கணவர் வேற்று தேசம் (வணிக நிமித்தம்) சென்ற போது பெண்கள் சிகை அலங்காரம் செய்வதில்லை என்றும் தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் படிக்கிறோம். முஸ்லீம் பெண்களும் தங்கள் குடும்பத்தினர் தவிர வேறு யாரும் தலை முடியைக் காணக்கூடாது என்று மறைப்பதும் ஒப்பிட வேண்டிய விஷயம்.

7d176-kundal

சிற்பத்தில் கூந்தல்

சீமந்தம், வளைகாப்பு !

சீமந்த என்றால் தலையில் வகிடு எடுப்பது என்று பொருள். ஒரு கர்ப்பிணிக்கு நடக்கும் வளைகாப்பு, சீமந்த விழாவில் தலை வகிடை முள்ளம்பன்றி முள் கொண்டு பிரிப்பர். இந்த வழக்கம் காடக சம்ஹிதையில் (23-1) சொல்லப்படுகிறது. இது நல்ல சுகப் பிரசவத்துக்கும் ஆண் குழந்தை கிடைக்கவும் செய்யப்படுவதாக ஐதீகம். இது “அக்குபங்சர்” (ஊசி மருத்துவம்) என்பது என் சொந்தக் கருத்து. பீஷ்மர் அம்புப் படுக்கையில் 58 நாட்கள் படுத்து ஆரோக்கியமாக இருந்து, தான் நினைத்தபோது உயிர் துறந்ததும் அக்குபங்சர் விஷயமே என்று முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

வேதத்தில் வரும் ‘ஸ்தூக’ ( RV 9-97-17; AV 7-74-2 )  -என்ற தலை முடி அலங்காரம் — தலையில் புத்தர் போல முடிச்சு போடுவதாகும். இதைத் தென் கிழக்காசிய நாடுகளின் பெண்களின் சிகை அலங்காரத்தில் இன்றும் காணலாம். சிகா, சிகண்ட என்பது உச்சுக் குடுமியைக் குறித்தன.

ஆண்களும் பலவகை சிகை வகைகள் வைத்ததை புலஸ்த்ய, கபர்தின் (ருத்ரம்/யஜூர் வேதம்), மருத்துகள், பூசன் ஆகியோர் தொடர்பான வேத மந்திரங்கள் மூலம் அறிகிறோம்.

வேத கால இந்துக்கள் நீண்ட கூந்தல், அடர்ந்த கூந்தல் வளர ஆசைப்பட்டதை சிகை வளர்க்கும் அதர்வண வேத ஆரோக்கியக் குறிப்புகளில் (6-21; 6-2; கௌசிக சூத்திரம் 8-15; 8—9) இருந்தும் அறிய முடிகிறது. இதற்காக அவர்கள் சீர்ச மரம் (vanquiena spinosa), கடுக்காய் (bellerica Terminalia) ஆகியவற்றைப் பயன் படுத்தினர்.

755a4-shiva_meditating_rishikesh

கபர்தீன் (சிவன்)

சுருங்கச் சொன்னால் வேத கால மக்கள் நாகரீகத்தில் முன்னேறியவர்கள், கூந்தல்-சிகை, அலங்காரத்தில் கவனம் செலுத்தும் அளவுக்கு ‘பாஷன்’ வளர்ச்சி கண்டிருந்தது. வெளிநாட்டு “அறிஞர்கள்”, வேத கால மக்களை நாடோடிகள் என்று வருணித்தது எவ்வளவு நகைப்புக்குரியது என்பது வேதங்களை நேரடியாகப் படிப்போருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி (உள்ளங்கை பூசனிக்காய் என!!) என விளங்கும்!!!

8db7c-sadhwi