ஐம்புரி பற்றி அப்பர் பெருமான் தகவல்! (Post No.3860)

Written by London swaminathan

Date: 28 APRIL 2017

Time uploaded in London:- 18-28

Post No. 3860

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

அப்பர் பாடிய தேவாரத்தில் ஆறாம் திருமுறையில் ஒரு பாடலில் ‘ஐம்புரி’  என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த ஐம்புரி  என்னும் சொல், பிராமணர்களிடத்தில் புழங்கும் சொல். அப்பரோ பிராமணர் அல்ல; ஆயினும் அவர் வேத பாராயணத்தில் புழங்கும் ஒரு சொல்லைப் பயன்படுத்தியது அவர் இந்த விஷயங்களில் எவ்வளவு அறிவுள்ளவர் என்பதைக் காட்டுகிறது. அது மட்டுமின்றி வேறு பல வியப்பான விஷயங்களையும்  தெரிவிக்கின்றது. முதலில் பாடலைக் காண்போம்:

 

இடிப்பான்காண், என் வினையை; ஏகம்பன் காண்;

எலும்பு ஆபரணன் காண்; எல்லாம் முன்னே

முடிப்பான் காண்; மூ உலகும் ஆயினான் காண்;

முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்

படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண்;

பராய்த்துறையான்; பழனம், பைஞ்ஞீலியான் காண்;

கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண் —

காளத்தியான் அவன், என் கண் உளானே

 

–அப்பர் தேவாரம், ஆறாம் திருமுறை, காளத்தியில் பாடியது.

 

பொருள்:-

சிவபெருமான் என்னுடைய வினையைத் தீர்க்கும் பரம்பொருள்; ஏகம்பனாகக் கச்சியில் வீற்றிருப்பவர்; எலும்பு மாலையை ஆபரணமாக உடையவர். எல்லாச் செயல்களையும் வகுத்து நடத்துபவர்; மூன்று உலகங்களும் அவரே; ஐம்புரி முதலான வேத பாராயணத்தை வகுத்தளித்த பிரமனின் தலையைக் கொய்தவர். பசுபதியாகத் திகழ்பவர்; திருப்பழனம், திருப்பைஞ்ஞீலி ஆகிய திருத்தலங்களில் உறைபவர். நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சூடியவர்; திருக்காளத்தியில் வீற்றிருப்பவர். அவர் என் உள்ளத்தில் உறைபவர்.

 

 

இங்கு ஐம்புரி என்னும் சொல்லைப் பல உரைகாரர்களும் விளக்குவதில்லை; இது ஒரு அருமையான சொல்; இதற்கு சம்ஸ்கிருதத்தில் ‘பஞ்சாதி’ என்று பெயர்.

 

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) தனது உரை ஒன்றில் பிராமணர்கள் இந்த மண்ணின் மைந்தர்களே என்பதை அழகாக விளக்குகிறார். சங்கத் தமிழ் இலக்கியம் முழுதும் நூற்றுக்கணக்கான இடங்களில் பிராமணர்களையும் அவர்களுடைய வேதங்களையும் சடங்குகளையும் குறிக்க தூய தமிழ்ச் சொற்கள் ( மறை, வேள்வி, நான்மறையாளர், இருபிறப்பாளர், அந்தணர் ) பயன்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மண்ணின் ஒரு பகுதியாக, சொந்தக்காரர்களாக இருப்பதை அறிய முடிகிறது என்பார். (கருத்து அவருடையது; சொற்கள் என்னுடையது)

 

அவ்வகையில் பார்த்தால் பஞ்சாதி என்பதையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அழகாக தமிழில் ‘ஐம்புரி’ என்று சொல்லாக்கம் செய்தது சிறப்புடைத்து.

ஐம்புரி என்றால் என்ன?

 

பிராமணர்கள் போட்டிருக்கும் பூணூலில் மூன்று வடங்கள் இருப்பதால் முப்புரி நூல் என்பர். அவ்வகையில் பார்த்தால் ஐந்து புரிகள் இருப்பது ஐம்புரி. ஆனால் இது எங்கும் அணியும் நூல் அல்ல. கணக்குப் பார்க்க வகுத்த கால்குலேட்டர்/ கணக்கிடு கருவி!

 

பிராமணச் சிறுவர்கள், வேத பாட சாலைகளில் ஆசிரியரின் காலடியில் அமர்ந்து வேதம் கற்கும் போது அவர் ஐம்பது, ஐம்பது  சொற்களாகச் சொல்லிக் கொடுப்பார். அதை எல்லா மாணவர்களும் பத்து முறை சொல்ல வேண்டும். இதைத் தமிழில் அழகாக திருவை என்பர். திரும்பத் திரும்பச் சொல்லுவதால் திருவை.

இப்படி ஒரு ஐம்பது  சொற்களைச் சொல்லிக் கொடுத்தபின் அடுத்த வரிகளைச் சொல்லுவார். அந்த வரிகளில் ஐம்பாதாவது சொல் எங்கு வருகிறதோ அத்தோடு நிறுத்திவிட்டு அதைப் பத்து முறை சொல்லச் சொல்லுவார். இதுவே பஞ்சாதி; அதாவது ஒவ்வொரு 50 சொல்லும் ஒரு பஞ்சாதி= ஐம்புரி. இது அத்தோடு நிற்பதல்ல; இப்படி ஒவ்வொரு பத்து முறை சொன்னபிறகும் அந்த பிராமணச் சிறுவர்கள் அவர்கள் அணிந்திருக்கும் பூணூலை ஒரு விரலில் ஒரு சுற்று சுற்றிக் கொள்வர். இப்படி ஐந்து பஞ்சாதிகள் முடிந்த பின்னர் ஐந்து விரல்களிலும் நூல் சுற்றப்பட்டிருக்கும். இப்பொழுது அந்த நிமிடம் வரை சிறுவர்கள் எவ்வளவு சொற்களை மனப் பாடம் செய்தனர் அல்லது பத்துப் பத்து    முறை திருப்பிச் சொன்னார்கள் என்று அவர்களுக்கே கணக்குத் தெரியும்.

 

சிலேட்டு வேண்டாம்; குச்சி (பல்பம்) வேண்டாம்; நோட்டு வேண்டாம்; பென்சில் வேண்டாம்; கால்குலேட்டர் வேண்டாம். ஒரு சிறுவன் அந்த நிமிடம் வரை எத்தனைச் சொற்களைப் படித்திருக்கிறான் என்பதை அவன் கைவிரல்களே காட்டிவிடும். என்ன அற்புதமான முறை; அதற்கு என்ன அற்புதமான தமிழ் சொல்! அதை அற்புதமாக நமக்கு நினைவு படுத்தும் அப்பர் பெருமான்!

 

அப்பர் பெருமான் பாடல்களில் நிறைய அற்புத விஷயங்கள் இருக்கின்றன. நால்வரில் அதிக வயது வாழ்ந்தவர் அவர்; அதிக உலக அநுபவம் பெற்றவர் அவர். ஆகையால் போகிற போக்கில் நிறைய விஷயங்களைச் சொல்லுகிறார். அவர் பெரிய வரலாற்று நிபுணர். நரியைப் பரியாக்கிய திருவிளையாடலைச் சொல்லி மாணிக்கவாசகர் தமக்கு முன் னே வாழ்ந்தவர் என்பதைக் காட்டுகி றார். தருமி என்னும் பிராமணப் புலவன் தமிழ்ச் சங்கத்தின் படிக்கட்டுகளில் ஏறி நக்கீரருடன் மோதிய திருவிளையாடலை நமக்கு நினைவூட்டுகிறார். அந்தக் காலத்தில் எத்தனை வகைக் கோவில்கள் இருந்தன  என்பதை ஒரு பாடலில் அடுக்குகிறார். இன்னொரு பதிகத்தில் 1400 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் பழமொழிகளைப் பட்டியல் இடுகிறார். மகேந்திர பல்லவனுடன் அவர் மோதிய செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. அப்பர் ஒரு சிவ பக்தர்; ஒரு வரலாற்றுப் பேரறிஞர்.

 

(திருவை, ஐம்புரி பற்றிய விஷயங்களை மாயூரம் சுவாமிநாத சிவாச்சாரியார், திருச்சி கல்யாண சுந்தர சிவாச்சார்யார் ஆகியோருடன் கலந்துரையாடியபோது அறிந்தேன்; நன்றி)

 

–subham–