பொன் (அயஸ்) என்றால் என்ன?

(English version of this article is already posted in the blogs: swami)

பொன் என்றால் என்ன? தங்கமா? இரும்பா? ஐந்து உலோகங்களில் எதையும் பொன் என்று கூறலாமா?

பொன் என்றால் இரும்பு, தங்கம், ஐந்து உலோகங்களில் எதையும் குறிக்கலாம். இதனால்தான் கோவிலில் உள்ள சிலைகளை ஐம்பொன் சிலைகள் (பஞ்ச லோக) என்று கூறுகிறோம். தற்கலத்தில் பொன் என்றால் தங்கத்தை மட்டுமே நம் நினைத்துக் கொள்வோம். பொற்கொல்லர் என்பது தங்க வேலை செய்வோரை மட்டுமே குறிக்கும்.

திருக்குறளில் இரண்டு பொருள்களிலும் வள்ளுவர் பயன்படுத்துகிறார். “தூண்டில் பொன் மீன் விழுங்கியற்று” என்னும் இடத்தில் இரும்பு என்ற பொருளிலும், “சுடச்சுட ஒளிரும் பொன்” என்ற இடத்தில் தங்கத்தையும் நினைவுபடுத்துகிறார்.

இதேபோலத்தான் ரிக் வேதத்திலும் அயஸ் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வெளி நாட்டு அறிஞர்கள் அனைவரும் இதை இரும்பைக் குறிக்கும் என்றும், இரும்பு பற்றி பேசுவதால் வேத காலம் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு பிந்தைய நாகரீகமென்றும் பிரசாரம் செய்து வருகின்றனர். வேதத்திலேயே கறுப்பு அயஸ் (இரும்பு), சிவப்பு அயஸ் (செம்பு) என்ற சொற்களும் உண்டு. ஆக முதலில் அயஸ் என்ற சொல்லைத் தங்கத்துக்குக்கூட பயன்படுத்தி இருக்கலாம். பொன் என்ற சொல்லை  தமிழர்கள் பயன்படுத்திவரும் முறையைப் பார்க்கையில் இது சாத்தியமே என்று தோன்றுகிறது.

“மா” என்றால் என்ன?

“மா” என்றால் மிருகம் என்று பொருள். இதை அரி+மா (சிங்கம்), பரி+மா (குதிரை), அசுண+மா (பாம்பு என்றும் வேறு ஒரு மிருகம் என்றும் கருதப்படுகிறது. ஆ+மா (காட்டுப் பசு), கல்லா+மா (குதிரை) என்ற பின் உறுப்புச் சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். அஸ்வ என்ற சொல்லும் இப்படி மா என்ற பொருளிலேயே துவக்க காலத்தில் பயன்படுத்தி யிருக்கலாம். “மா” என்ற தமிழ் சொல் தனியாக வரும் போது எப்படி இடத்தைப் பொருத்து பொருள் கொள்கிறார்களோ அப்படியே அஸ்வ என்பதற்கும் பொருள் கொண்டால் வேதத்தின் பழமை புலனாகும். ஆனால் மேலை நாட்டோர் எல்லா இடத்திலும் அஸ்வ என்பது குதிரையே என்று வாதிட்டு, சிந்து சமவெளியில் குதிரை இல்லாததால் வேத காலத்தை அதற்குப் பிந்தியது வாதிடுகின்றனர்.

துவக்க காலத்தில் அஸ்வ என்பது, ‘வேகம்’, ‘மிருகம்’ என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தி இருக்கலாம். இது ஒரு புறமிருக்க சிந்து சம்வெளியில் குதிரை எலும்பு கிடைத்ததாகச் சொல்லுவோரும் சிந்துவெளி முத்திரைகளில் ஒற்றைகொம்புடன் காணப்படும் மிருகங்கள் குதிரையே என்று சொல்லுவோரும் உண்டு.

ஆக அஸ்வ, அயஸ் ஆகியன மிகப் பழங்காலத்தில் வேறு பொருள்களில் வழக்கில் இருந்ததாகக் கொண்டால் பல புதிய உண்மைகள் புலனாகும். வேதத்தில் வரும் சமுத்திரம் என்ற சொல்லை கடல் அல்ல ,வெறும் நீர் நிலையே என்று விதண்டாவாதம் செய்யும் மேலை நாட்டு அறிஞர்களும் உண்டு.