தமிழ், சம்ஸ்க்ருத, ஆங்கில இலக்கண அகராதி -9 (Post.8748)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8748

Date uploaded in London – –28 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ், சம்ஸ்க்ருத,  ஆங்கில இலக்கண அகராதி -9

அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் மூன்று முக்கிய நூல்களில் உளது. ஸம்ஸ்க்ருதத்தை அகற்றினால் மூன்று நூல்களும் சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழ் வாழ்த்துப் பாடல் போல சிதைந்து விடும்.(சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழ் வாழ்த்தில் ஒரு வரியை நீக்கிவிட்டு தமிழ் வாழ்த்து என்று சொல்லிக்  கொண்டாடுகிறோம். அதுவோ முழுக்க ஸம்ஸ்க்ருதச் சொற்கள் நிறைந்த  பாடல். “தமிழ் வாழ்த்தை மாற்றுக” என்ற எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க)

திருக்குறளில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன என்று கேட்டால் 133 அதிகாரங்கள் என்போம்.

தமிழில் மிகச்  சிறந்த  காவியம் எது என்று கேட்டால் , சிலப்பதிகாரம் என்போம். அதனால்தான் பாரதியாரும் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ் நாடு’ என்று புகழ்ந்து பாடினார்; விதந்து ஓதினார்.

தமிழில் மிகப்பழைய நூல் என்று நாம் சொல்லிக்கொள்ளும் தொல்காப்பியத்தில் எத்தனை அத்தியாயங்கள்/ பிரிவுகள்  என்று கேட்டால் நாம் மூன்று பிரிவுகள் என்போம். அவையாவன

எழுத்ததிகாரம் , சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் .

இவைகளில் வரும் அதிகாரம் என்பது ஸம்ஸ்க்ருதச் சொல் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. இது 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினி காலச் சொல்.

(இந்த அதிகாரம் என்ற சொல் வழக்கினாலும், வேறு பல காரணங்களாலும் மூன்று நூல்களும் கி.பி. 4 அல்லது 5ம் நூற்றாண்டில் தோன்றியவை அல்லது தொகுக்கப்பட்டவை  என்பது எனது ஆராய்சசியின் முடிபு. அதனை ‘தொல்காப்பியர் காலம்’ என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரைத் தொடரில் காண்க)

இப்பொழுது சில திராவிட ‘’பரிதாபக் கேசுகள்’’ அதை ‘’இயல்’’ என்று மாற்றி  புஸ்தகம் போடுகின்றன. ஆனால் ‘கப்ஸா கருணாநிதி’ தவிர பழைய உரைக்காரர்கள்  அனைவரும் ‘அதிகாரம்’ என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர். அவர்கள் காலத்தில் தமிழில், ‘அரசியல் சாக்கடை’ கலக்கவில்லை.

அதிகாரம் என்பது பற்றிய அற்புதமான விளக்கத்தை சிவ ஞான முனிவர் எழுதிய ‘தொல் காப்பிய விருத்தி’ என்ற நூலில் இருந்து தருகிறேன். அவருடைய விருத்தியில் வரும் சொற்களுக்கு திருவாவடுதுறை ஆதின வித்துவானும் புகழ்பெற்ற தமிழ் அறிஞருமான தண்டபாணி தேசிகர் விளக்கம் தருகிறார்.

“தொல்காப்பியத்தில் முதல் அதிகாரம் எழுத்து அதிகாரம் .

எழுத்ததிகாரம் என்பது ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைக் களத்துப் பிறந்த அன்மொழித்தொகை

அதிகாரம் என்பதற்கு முறைமை எனப் பொருள் காண்பர் நச்சினார்க்கினியர் , மயிலைநாதர், இராமானுச கவிராயர் முதலியோர்.

அதிகாரம் என்பது பலபொருளை உணர்த்தும் ஒரு சொல். ஈண்டு , ஒரு பொருளை நுதலி வரும் பல ஒத்தினது  தொகுதியை உணர்த்திற்று  என்பர் சேனாவரையர் .

அதிகாரம் – அதிகரித்தல் (Increasing)  என்பர் சுவாமிகள். அதிகாரம் என்பது ஆரியச் (Sanskrit, Cultured) சொல் . இதனால் இதற்கு அதிகரிக்கப்படுகிறது; அதாவது ஈண்டு எழுத்தினது அதிகரித்தலையுடையது எனப் பொருள்பட்டு, எழுத்து அதிகரிக்கும் பல  ஒத்தினது  தொகுதியை (Collection) உணர்த்திற்று  என்றலே சிறத்தல் காண்க. முறைமை (Orderly arrangement) என்னும் பொருள் சொற்பொருளாகாது . பல ஒத்தினது தொகுதியை (collection of such things) உணர்த்துதலின்  முறைமை எனல்  கருத்துக் பொருளேயாயினமை காண்க.

(நுதலிவர = கருதி  வர)

பதஞ்சலி முனிவரின் மஹா பாஷ்யம் –வேற்றுமையின் 2 வகை

வேற்றுமை ‘காரக வேற்றுமை’ எனவும் , ‘துனைச் சொல் வேற்றுமை’ எனவும் இருவகைப்படும் . இவற்றை மாபாடியக்காரர்

‘காரக விபக்தி,  உபபத விபக்தி’ – என்பர்.

காரக வேற்றுமையாவது வேற்றுமை ஏற்ற பெயர்ச் சொல் வினைகொண்டு முடிய நிற்பதாம்

‘மரம் வெட்டினேன்’,

‘முருகனைக் கண்டேன்’,

‘சிவனாற்  செய்யப்பட்டது’ என்பன போல .

ஆறாம் வேற்றுமை ‘எனது புத்தகம்’, ‘தன் கைகள்’ எனப் பெயர்கொண்டு முடிதலே  வழக்காய் வினைகொண்டு முடியாது . ஆயினும் ‘தாயது நினைவு, அவனது வரவு’ என்பவற்றுள் ஆறாம் வேற்றுமை  தொழில் தற்கிழமைப் பொருளவாய்  ‘நினைவு, வரவு’ என்பவற்றின்  வினைப்பகுதியைக் கொண்டு முடித்தலின்   இதுவும் காரகமேயாம் என்பது. இதனைக் ‘காரக சஷ்டி’ என்பார் பாடியக்காரர்.

ஈண்டு எழுத்தினது அதிகாரத்தையுடையது  என்னும் பொருளதாய் , எழுத்தின் என்னும் ஆறாம் வேற்றுமை அதிகரி என்னும் வினைப்பகுதியைக் கொண்டு முடிவதாய்த் தனது கிழமைப் பொருளை உணர்த்தாது  எழுத்து உடையது என வினைமுதற் பொருண்மை உணர்த்துதலின் வினைமுதற் பொருண்மைக் கண் வந்த காரகம் எனப்பட்டது .

மாபாடியத்தும் ‘கார்த்திரு காரக சஷ்டி’  எனப்படுவது காண்க.

எழுத்ததிகாரம் என்பது  எழுத்துணர்த்தினமை  காரணத்தான் வந்த பெயர் எனவும் , எழுத்தை உணர்த்திய அதிகாரம்  என விரிக்க எனவும் கூறுவர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் .

****

ஒத்து

ஒன்றோடொன்று நேரான மணிகளை முறையாக வைத்தாற்போல ஒரேயினமான பொருள்களை  ஒரு வழியே தொகுப்பது  மொழிவர் உயர்ந்த மொழியியல்பாய்  யுணர்ந்த அறிஞர் என்றவாறு .

***

என் கருத்து

இதைப் படிக்கையில் வேதங்களை தமிழில் ‘ஒத்து’ என்று ஏ ன் சொன்னார்கள் என்று விளங்குகிறது. சம்ஹிதை — ஒரே இழையில் தொகுக்கப்பட்டது- ‘ஒத்து’

மற்ற  ஒரு  கருத்தும் நினைவுக்கு வருகிறது.பகவத் கீதை யில் கண்ணனும் ‘ சூத்ர மணி கணா’ இவ (7-7 ) என்பதை பயன்படுத்துகிறார். ‘நூலில் முறையாக கோர்க்கப்பட்ட ரத்தினைக் கற்கள் போல’ ஈதெல்லாம் என்னிடத்தில் கோர்க்கப்பட்டுள்ளன என்கிறார் ஆக ‘அதிகாரம்’ என்பது பழைய சம்ஸ்கிருதத் சொல் என்பதும்   அதைத் தமிழர்கள் எந்த காழ்ப்புணர்ச்ச்சியும் இல்லாது நூலில் பயன்படுத்தினர் என்பதும்   தெளிவாகிறது .

(அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுத்தது என் வேலை)

tags – இலக்கண அகராதி -9, ஒத்து, வேற்றுமை  வகை

—சுபம்–