Written by London Swaminathan
Date: 8 November 2016
Time uploaded in London: 10-14 am
Post No.3333
Pictures are taken from various sources; they are only representational; thanks.
contact; swami_48@yahoo.com
இலக்கியத்தில் மிகைப்படக் கூறல் என்பது ஒரு குற்றமாகக் கருதப்பட்டபோதும் நமது தமிழ்ப் புலவர்கள் கொஞ்சம் தாராளமாகவே மிகைப்படுத்துவர். நூலின் குற்றங்களின் பட்டியலில் மிகைப்படக் கூறலையும் தொல்காப்பியர் சேர்த்துள்ளார். கம்பன் கிஷ்கிந்தா காண்டத்தில் சொன்ன ஒரு “பொய்யை” ஆராய்வதே இந்தக் கட்டுரையின் கருத்து.
ஒன்பதினாயிர கோடி உற்றது
நின்பெருஞ்சேனை அந்நெடிய சேனைக்கு
நன்கூறுமவதி நாள் நாளைய நண்ணிய
பின்செயத்தக்கது பேசற்பாற்று என்றான்
–கிட்கிந்தா காண்டம், கிட்கிந்தைப்படலம்
பொருள்:-
இப்போது என்னுடனே ஒன்பதினாயிரம் கோடிக் கணக்கான உன் பெரிய படை வந்துள்ளது. இனி வரவேண்டிய அப்பெரிய படைக்குத் திரண்டு வருவதற்குரிய நாளும் நாளையே! அப்படையும் வந்த பின்பு செய்ய வேண்டியவற்றைப் பற்றிப் பேசுதல் தக்கதாகும் – என்று சுக்கிரீவன் கூறி முடித்தான்.
கம்பன் அறிவுக்கடல். அவன் பாட்டைக் குறை கூறுவது இக் கட்டுரையின் கருத்து அன்று.
அட! உலக ஜநத்தொகை இன்றைய கணக்கிலேயே 700 கோடிதானே; கம்பன் இப்படி ஒரு நகைப்புக்குரிய நம்பரைச் சொல்லுவானா என்று நாம் எண்ணலாம். இலக்கியத்தில் பல இடங்களில் வரும் எண்ணை அப்படியே கணக்கில் எடுத்துக்கொண்டால் ஏராளமான பிழைகள் வரும் அதைக் குறிப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.
கம்பன் ஏன் இப்படி சொன்னான்?
சுக்க்ரீவன் சவடால் பேர்வழி என்பதை காட்டுவதற்காக இப்படி சொல்லி இருக்கலாம்.
அல்லது பாட்டில் எதுகை, மோனையின் காரணமாக எழுதியிருக்கலாம்.
அல்லது கம்பராமாயணததைப் “படி” எடுத்தவர்கள் பிழையாகச் சொற்களைப் புகுத்தி இருக்கலாம்.
இப்படிப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆயினும் கம்பன் வேறு பல இடங்களிலும் 70 வெள்ளம் சேனை என்பான். வள்ளுவனோ எழுபது கோடி என்னும் சொல்லைக் குறளில் பயன் படுத்துவான்.
உண்மை என்னவென்றால் ஒவ்வொரு மொழியிலும் “நிறைய , எண்ணற்ற, கணக்கற்ற” — என்பததற்கு பல வகையான மரபுச் சொற்றொடர்களைப் பயன்படுத் துவர். தமிழில் “நாலு பேர் சிரிப்பார்கள், ஊரே சிரிக்கும்” என்றெல்லாம் பேச்சு வாக்கில் சொல்லுவோம். ஆங்கில நாட்டில் அம்மா எனக்கு இந்த பொம்மையை வாங்கித் தா, உனக்கு “மில்லியன் கிஸ்” (பத்து லட்சம் முத்தம்) தருகிறேன் என்று குழந்தை சொல்லும். புத்த மத நூல்களில் 500 என்ற எண் அடிக்கடி வரும். பைபிள் முதலியவற்றில் 40 என்ற எண் அடிக்கடி வரும்.
இதை எல்லாம் அறிஞர் பெருமக்கள் அறிவர். ஆனால் ரிக் வேதத்தையும் ராமாயணத்தையும் மொழி பெயர்த்த வெளி நாட்டு “அறிஞர்கள்” மட்டும் அதில் வரும் எண்களை அப்படியே எடுத்துக் கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்வர். நான் முன்னர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் இந்திரன் கொன்றதாகக் கூறும் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் அது மிகைப் படுத்தப்பட் ட புலவர் கூற்று என்பது விளங்கும். தசரதருக்கு 60, 000 மனைவியர் என்றால் வழக்கத்திற்கும் மாறாக அதிக மனைவியர் என்று பொருள்
இது தெரிந்தும் ராமாயணம், ரிக் வேதத்தைக் குறைகூறும் அரைவேக்காடுகள் உண்டு.
ஒரு மார்கசீய “அறிஞர்” எழுதிய நூலில், சர்மன் நதிக்கரையில் ஒரு அரசன் செய்த யாகத்தால், யாக உயிர்க்கொலைகளால் அந்த நதியே சிவந்து போய்விட்டது என்று “ஆதாரத்துடன்” எழுதியுள்ளார். அதாவது ஏதாவது ஒரு ஸ்லோகம் கிடைத்தால்போதும் அதை உண்மைபோல காட்டி பெரிய வியாக்கியானம் செய்வர். உண்மையில் சங்க இலக்கிய புற நானூற்றிலும் ரத்த ஆறு, பிராமணர்களுக்கு தானம் கொடுத்து ஓடிய தண்ணீர் ஆறு பற்றி எல்லாம் கவிஞர்கள் பாடி இருக்கின்றனர். இவைகளை நாம் அப்படியே அர்த்தம் செய்யாமல் அதன் பின்னுள்ள கருத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம். ஆனால் வெள்ளை,,,, வெளிநாட்டினரும், திராவிட, மார்கசீய அரை வேக்காடுகளும் வேண்டு மென்றே சில பாடல்களை எடுத்துக்கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்வதெல்லாம் பொய்யுரை என்று காட்டவே நான் கம்பனை வம்புக்கு இழுத்து இக்கட்டுரையை வரைந்தேன்.
கட்டுரையிலிருந்து பெறப்படும் நீதி: மெய்ப்பொருள் காண்பதறிவு
–Subham–