
WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 12 NOVEMBER 2019
Time in London – 7-10 am
Post No. 7204
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ஒரு கதையைப் படிப்பதற்கும் அதை உணர்ச்சி ததும்ப சொல்வதற்கும் ஏராளமான வேறுபாடு உண்டு.
சிறுவர்களுக்குப் பாட்டிமார்களும், தாய்மார்களும் கூறும் கதைகள் அவர்களிடம் ஒரு நிரந்தரமான நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மஹாத்மா காந்திஜி இளமையில் கேட்ட ஹரிச்சந்திரன் கதை அவரை இறுதி வரை சத்தியத்தில் நாட்டம் அடையச் செய்தது. அவர் வாழ்க்கையையே சத்திய சோதனை ஆக்கியது.
தொட்டிலில் இருக்கும் குழந்தையைத் தூங்க வைக்க தாய்மார்கள் பாடும் தாலாட்டுப் பாடல் குழந்தையின் இதயத்துடிப்பை மெதுவாக்கி ஒரு அருமையான ஒய்வு உணர்வைத் தந்து அதைத் தூங்க வைக்கிறது.
இரவு நேரத்தில் நாம் கேட்கும் தேர்ந்தெடுத்த தேனிசைப் பாடல்கள் உணர்வு பூர்வமாக நம்மைக் கவர்ந்து ஒரு பெரிய சாந்தத்தை மனதிற்கு அளிக்கிறது.
எத்தனை பேர் தனக்குத் தானே பாடி மகிழ்ச்சி அடைகிறோம் – பாத் ரூம் பாடல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தானே!
உடலுக்கு நன்மை; உள்ளத்திற்கும் ஊக்கம் தந்து உதவுவது இசை தான்; அதன் அற்புதமான ஒலி தான்.
மருத்துவ சிகிச்சையில் சிலருக்கு இந்தப் பாடல் உடலின் சில தசைகளை வலுப்படுத்துகிறது.
பழங்குடி மக்கள் தங்களது பாடலில் ஒரு விதமான லயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்லி உடலின் பல வியாதிகளைப் போக்குகின்றனர்.
நாராசமான ஒலி நமக்கு எரிச்சலை ஊட்டுகிறது. நமது கவனத்தைச் சிதற அடிக்கிறது. ஓவென்று கத்தும் ஓசை நம்மைத் துடிக்க வைக்கிறது.
தொடர்ந்து கேட்க முடியாத ஒரு ஓசையை நாம் வலுக்கட்டாயமாக கேட்க வைக்கப்பட்டால் காதிலிருந்து ரத்தம் கொட்டும்; உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இசை இன்பத்தேனையும் வெல்லும்
என்பார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இசையின் மகிமை பற்றி ஏற்கனவே பல கட்டுரைகள் எழுதி விட்டதால் அதை மீண்டும் இங்கு தரத் தேவை இல்லை.
ஒலியின் இந்த அபூர்வ ஆற்றலை உணர்ந்த நமது மஹரிஷிகள் அதை ஆராயப் புகுந்தனர்.
அவர்கள் கண்டது இந்த பிரபஞ்சமே ஒலியின் அதிர்வுகளே என்பதைத் தான்.
நாத பிரம்மம் என்று சுருக்கமாக அவர்கள் இதைச் சொல்லி விட்டனர்.
காஞ்சி பரமாசார்யாள் இதைப் பற்றிப் பல இடங்களில் விரிவாக விளக்கி அருளியிருக்கிறார்.
அதில் ஒரு பகுதி இதோ :-
(“தெய்வத்தின் குரல்”இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற கட்டுரையில் “ஒலியும் படைப்பும்” என்ற உட்பிரிவில் முழுக் கட்டுரையையும் படிக்கலாம்).
வியாகரண சாஸ்த்ரத்தில் சப்தத்தையே ப்ரம்மமாக நிலைநாட்டியிருக்கிறது. இதற்கு சப்த ப்ரம்மவாதம் என்று பேர்.
பாஷை இலக்கணத்தைச் சொல்லும்போது இப்படி வையாகரணிகள் (வியாகரண சாஸ்திரக்காரர்கள்) அதை பிரம்ம ஸ்வரூபமாகச் சொல்லியிருப்பதையே இன்னொரு விதத்தில் ஸங்கீத சாஸ்திரக்காரர்களும் ஸ்தாபித்திருக்கிறார்கள். ஸங்கீதத்திலே நாதப்பிரம்ம உபாஸனை, நாதோபாஸனை என்கிற இடத்திலும் நாதம் என்பது வெறும் ஆதார சப்தம் மட்டுமில்லை. பாடுகிறவன் ஒரு ஸ்வர ஸ்தானத்தை ச்ருதியோடு சுத்தமாக தீர்க்கமாகப் பிடித்து அது பூர்ணமாக ஓங்கி முடிந்து விழுந்து லயிக்கிற இடத்தில் அது ச்ருதியோடு கவ்வி அத்வைதமாகக் கரைந்து, நிறைந்து போகிறதே அதைத்தான் நாதம் என்பது. இந்த இடத்திலே பாடுகிறவனும் அதோடு கரைந்து நிறைந்து விடுவான். அவன் மட்டுமில்லை. கேட்கிற ஸஹ்ருதயர்களானவர்களும் அப்படியே சொக்கித் தன்னை மறந்து அந்த நாதத்தில் ஐக்யமாயிருப்பார்கள்.
இதிலே பெறுகிற ஆனந்தந்தான் ஆத்மானந்தம், பிரம்மாநந்தம் என்று மத சாஸ்திரங்களின் உச்ச லக்ஷ்யமாய் சொல்லியிருப்பது.
நாதம் பிரம்மத்துக்குக் கொண்டுபோகிறது, சப்தம் நாதத்துக்குக் கொண்டுபோகிறதென்றால் இதில் ஒன்றின் தன்மை இன்னொன்றுக்கு இல்லாவிட்டால் எப்படி முடியும்? அதனால்தான் சப்தமே பிரம்மம் என்று சொல்வதாக சாஸ்த்ரம் ஏற்பட்டிருக்கிறது.
சப்த பிரம்ம வாதத்தில் சப்தம் நித்யமானது, பூர்ணமானது என்று இரண்டு லக்ஷணங்கள் சொல்லியிருக்கிறது. Time என்கிற காலத்துக்குக் கட்டுப்படாமல் இருப்பதுதான் ‘நித்யம்’. Space என்னும் இடக் கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பதுதான் ‘பூர்ணம்’. இப்படி எக்காலத்திலும் எவ்விடத்திலுமாக நிறைந்திருப்பது சப்தம் என்று நம் பூர்விகர்கள் சொன்னதை இப்போதுதான் ஸயன்ஸ் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
பதினாயிரம் மைலுக்கு அந்தண்டை பாடுவதை இங்கே நாம் ரேடியோவில் கேட்கிறோமென்பதால், சப்தம் space-ல் எங்கும் வியாபகமாயிருப்பது prove ஆகிறது. இதோ இப்போது நான் பேசுவதை ஒருத்தர் டேப்-ரிக்கார்ட் பண்ணுகிறார்; க்ராமஃபோன் என்று ரிகார்ட் பண்ணுகிறார்கள். எத்தனையோ வருஷத்துக்கு அப்புறம் இந்த ரிகார்ட்களைப் போட்டாலும் சப்தங்கள் மாறாமலே ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்ன prove ஆகிறது? சப்தம் காலத்தால் நசிக்காமல் நித்யமாய் இருக்கிறது என்று நிரூபணமாய் விடுகிறதோல்லியோ?
பூர்விகர்களின் அதீந்த்ரிய சக்தியும் போய், நவீன ஸயன்ஸும் வராத காலத்திலே, ‘சப்தம் நித்யமானது, பூர்ணமானது’என்றால் “இதென்ன பேத்தல்?நாம் எழுப்புகிற ஒலி இதோடு தீர்ந்துபோனதுதான். இதெப்படி நித்யம்? மிஞ்சினால் அது நூறு, இருநூறு கஜம் போகட்டும். பெரிய இடி இடித்தால்கூட நாலைந்து மைலுக்கு மேல் ஓசை போகிறதில்லை. இதை பூர்ணம் என்றால் எப்படி?” என்றுதான் தோன்றியிருக்கும். இப்போது ஸயன்ஸ் வந்து நம் சாஸ்த்ர அபிப்ராயத்தைக் காப்பாற்றிக் கொடுக்கிறது!”
இனி மந்திரங்களின் ஒலி மகிமை பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம் – மந்திர மகிமை என்ற அடுத்த கட்டுரையில்!
ஒலியின் ஆற்றல் தொடர் நிறைவுறுகிறது.
குறிப்பு: இத்தொடரில் உள்ள பல கருத்துக்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ள கட்டுரை – Sound Bites என்ற கட்டுரை. எழுதியவர் – Linda Leary , 2001ஆம் ஆண்டு வெளி வந்த கட்டுரை.

