மனிதர்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மையே!

This is already posted in English by me: swami

மனிதர்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மையே!

பிரபல விஞ்ஞான பத்திரிக்கை செய்தி!

மனிதர்களின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மைதான் என்பதை பிரபல அறிவியல் வார பத்திரிக்கை ஜனவரி 5ம் தேதி இதழில் வெளிட்டிருக்கிறது. ஆதி சங்கரர், புத்தர், ஏசு கிறிஸ்து, குரு நானக் முதலிய பெரியோர்களின் தலையைச் சுற்றி ஒரு வட்டம் பிரகாசமாக வரையப் பட்டிருக்கும். இது தவ சீலர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் நம்மைப் போன்றோர் படங்களில் மட்டுமே காண்கிறோம்.

இவ்வளவு காலமாக இதை ‘பாரா நார்மல்’ (மாய மந்திரம்) என்று அறிவியலுக்கு அப்பால் வைத்திருந்தனர். இப்போது ஒரு ஆராய்ச்சியின் மூலமாக இதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

இதோ நியூ சைன் டிஸ்ட் செய்தியின் சுருக்கம்:

“ ஒரு கிராமப் புற கதை போலத் தோன்றும் செய்தி இது. ஒரு சில மக்கள் மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஒளி வளையத்தைக் காணமுடியும். ஐம்புலன்கள் ஒன்றை ஒன்று குறுக்கிடும் போது சிலர் மற்றவர்களைச் சுற்றி இருக்கும் வண்ண ஒளியைக் காணமுடியும், இது மன உணர்ச்சிக்குத் தக்கவாறு கலரில் வேறுபடும்.

டி.கே. என்னும் ஒருவர் ஆஸ்பர்கர் நோயால் கஷடப்பட்டுவந்தார். அவருக்கு வயது 23. அவர் இப்படி ஒளி வட்டத்தைக் காண்பதாகக் கூறியவுடன் வில்லயனூர் ராமசந்திரன் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஒரு சோதனை நடத்தினார். சோதனைக்காக அவர் முன் ஒரு ஆளை நிறுத்தியவுடன் அவரை சுற்றி நீல வண்ணம் இருப்பதாகக் கூறினார். நீல வண்ணத்தில் நீல எழுத்துக்கள் தெரியாது. மற்ற வண்ண எழுத்துக்கள் தெரியும் அல்லவா? ஆகையால் அவரை ஒரு வெள்ளைத் திரையின் முன் நிற்க வைத்து அவர் தலையைச் சுற்றி நீல வண்ண எழுத்துக்களை காட்டினர். யார் ஒளிவட்டத்தைக் கண்டாரோ அவரால் நீல வண்ண எழுத்துக்களைப் படிக்க முடியவிலை. தலையில் இருந்து விலகி அதே எழுத்துக்களைப் போட்ட போதும் வேறு வண்ண எழுத்துகளைப் போட்டபோதும் அவரால் படிக்க முடிந்தது. இதன் மூலம் நீல நிற ஒளிவட்டம் நிரூபணமானது.

இந்தியாவில் சில சன்யாசிகள், சிலருக்கு உடனே அநுக்ரகம் செய்கிறார்கள் இன்னும் பலரைப் பாராமுகமாக இருந்து விடுகிறார்கள் இதற்கும் நம் தலையைச் சுற்றி இருக்கும் ஒளிவட்டமே காரணம். குழந்தைகளுக்கு இது நன்றாகத் தெரியுமாம். அம்மா அப்பா தலையை சுற்றி இருக்கும் அதே ஒளி வளையம் உள்ளவர்களிடம் குழந்தைகள் எளிதில் போகும். மற்றவர்களைக் கண்டாலேயே அலறும்.

ஒருவர் நல்ல எண்ணத்துடன், நல்ல செயல்கள் செய்தால் இது பிரகாசமாக தெரியும். கெட்டவர்களாக இருந்தாலோ பூர்வஜன்மத்தில் கெட்டது செய்திருந்தாலோ தலையைச் சுற்றி கருப்பு வளையம் தான் இருக்கும். ஞானிகளுக்கு இது நன்கு தெரியும். விவேகானந்தரைப் பார்த்த மாத்திரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் அருள் மழை பொழிந்தார். விவேகானந்தர் நாஸ்தீக வாதம் பேசியபோதும் அவருடைய பூர்வ ஜன்ம புண்யம் நல்லது என்பதால் உடனே உபதேசம் கிடைத்தது. ஒளி வளையத்தை ஒருவரின் ஆன்மீகக் கைஎழுத்து அல்லது தலை எழுத்து என்று சொன்னால் மிகை இல்லை.

 

எனக்கும் கூட இதில் சில அனுபவங்கள் உண்டு. என் தந்தைக்கு மிகவும் வேண்டிய சுவாமிஜி பெரிய கணபதி உபாசகர். மதௌரையில் ஒரு நகரசபை வார்டு தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரை என் தந்தை ழைத்துச் சென்று அந்த சுவாமிஜியிடம் ஆசி பெற முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறை அவரை அறிமுகப் படுத்த என் தந்தை முயன்றபோதெல்லாம் சுவாமிஜி வேண்டும் என்றே முகத்தை எதிர்ப்புறம் திருப்பினார். என் தந்தைக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இறுதியில் மதுரைக்குக் கிளம்ப விடை பெறும் போது, இவர் மதுரையில்………….. என்று என் தந்தை துவங்கியதுதான் தாமதம். நீ தேர்தலில் வெற்றி பெறுவாய் போ என்று அவரை ஆசிர்வதித்தார். என் தந்தைக்கும் மிக்க மகிழ்ச்சி. அவர் சொன்னது போலவே தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

சில மாதங்களுக்குப் பின்னர் அந்த சுவாமிஜியை வேறு ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவரே விளக்கம் கொடுத்தார்; “ சந்தானம் (எனது தந்தையின் பெயர்)  தனது குடும்பத்துக்காகக் கூட எதையும் கேட்டதில்லை. ஆனால் ஜெயிக்காத ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டுவந்து கேட்டவுடன் நான் கனபதியுடன் “சண்டை போட்டு” அவருக்கு வெற்றி பெற ஆசியை வாங்கினேன் என்றார். எனது தந்தை அழைத்துச் சென்ற ஆள் எல்லா கெட்ட பழக்கங்களும் உடையவரே. நண்பர் என்ற முறையில் என் தந்தை அவருக்கு உதவி செய்யச் சென்றபோது இத்தனையும் நடந்தது. ஆக ஆளைக் கண்டவுடனேயே சந்யாசிகளுக்கு நம்மைப் பற்றித் தெரிகிறது.

 

கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் ரிக் வேதத்தில் ஒரு சாகை முழுதையும் அத்யயனம் செய்து காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் தங்கக் காசு, சால்வை ஒரு வீடு ஒரு பசு மாடு பெற்றவர். மதுரைக்கு டி.வி.எஸ். பஸ் நிறுவனத்தார் அழைப்பின் பேரில் ஆண்டுதோறும் உபந்யாசம் செய்ய வருவார். எங்கள் வீட்டில் தங்குவதால் பல உண்மைச் சம்பவங்களைச் சொல்லுவார். ஒரு நாஸ்தீகர் அவரைச் சோதிக்க இறந்தவரின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்தபோது அதைத் தொட்டவுடன் அவருக்கு ‘ஷாக் அடித்தது போல இருந்தது. உடனே வந்தவரை எச்சரித்து வெளியேற்றினார்.

 

சென்னையில் என் அண்ணன் பொழுதுபோக்காக அரசியல் துறை சினிமா துறையைச் சேர்ந்தோருக்கு ‘ஓஸி’யாக ஜோதிடம் சொல்லுவதுண்டு. சில பாப ஜாதகங்களைக் கையில் எடுத்தவுடன் ஒரே களைப்படைந்து கொட்டாவி விடத் துவங்கி விடுவார். கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கும். தான் முதல் நாள் இரவில் தூங்காததால் களைப்பாக இருப்பதாக சாக்கு போக்குக் கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பி விடுவார்.

 

இந்த சம்பவங்கள் மனிதர்களுக்கு மட்டும் இன்றி ஜட வஸ்துகளுக்கும் பாப புண்யம் இருப்பதைக் காட்டுகிறது—அதாவது மக்களுடைய பாப புண்யத்தை அது எதிரொலிக்கிறது. என் அண்ணன் லண்டன் வந்தபோது எனக்கு நீண்ட காலமாக வேலை இடத்தில் தொல்லை கொடுத்து வந்த ஒரு பெண்மணியையும் மரியாதையின் பொருட்டு அறிமுகப் படுத்தி வைத்தேன். அவரைக் கண்டவுடன் என அண்ணன் மிக நல்ல பலன்களாகப் பொழியத் துவங்கிவிட்டான். எனக்கோ ஆத்திரம் தாங்க முடியவில்லை. அந்தப் புறம் அழைத்துச் சென்று ஏன் ‘எதிரிக்கு’ உதவினாய் என்று கடிந்து கொண்டபோது அந்தப் பெண் நாட்டை விட்டு லண்டனுக்கு வந்த காலம் முதல் தன் மகள் நன்றாக இருக்கவேண்டும் என்று அவருடைய தாய் கந்த சஷ்டிக் கவசம் படித்ததாகவும் அந்தத் தாயின் பிரார்த்தனை இந்தப் பெண்ணைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போட்டிருப்பதாகவும் கூறினான. என்னுடைய விருப்பு வெறுப்புகளுக்காக் புனிதமான ஜோதிட சாஸ்திரத்தை மாற்றமுடியாது! என்றான்.

ஆக ஒருவரின் தாய் தந்தையின் பிரார்த்தனையும் கூட ஒருவரைச் சுற்றி கவசமாக நிற்கமுடியும்!

 

எனது தந்தை ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியைப் படித்துக் காட்டியதும் நினைவுக்கு வருகிறது. “யமதர்ம ராஜனின் உதவியாளர் பெயர் சித்திரகுப்தன். இவந்தான் நம்முடைய பாவ புண்ணீயங்களைக் கூட்டிக் கழித்துப் போடும் கணக்குப் பிள்ளை. உண்மையில் சித்திர குபதன் என்ரு யாரும் ஒரு ஆள் இல்லை. சித்திர குப்தன் என்ற வடமொழிச் சொல்லுக்கு ரகசிய வரைபடம், மரைட்ந்த ஓவியம் என்று பொருள். அதாவது நாம் மனோ, வாக் காயம் ( மனம் மொழி மெய்) ஆகியவற்றால் செய்யும் ஒவ்வொரு செயலும் வரைபடம் போலப் பதிவாகி நம்முடைய உண்மைப் படத்தை வரைந்துவிடுகிறது!”

நம்மைச் சுற்றி ஒளி வளையம் பிரகாசம் அடைய நாம் நற்சிந்தனையுடன் வாழ்வோமாக.

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்–பாரதி