WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,365
Date uploaded in London – – 22 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வருகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.
இணையதளம் : https://onlineradiofm.in/tamil-nadu/chennai/all-india-air-chennai-pc
16-11-2021 காலை ஒலிபரப்பான ஆறாவது உரை கீழே தரப்படுகிறது.
ஓசோனைக் காப்போம்!
ச.நாகராஜன்
ஓசோன் படலம் (OZONE LAYER) என்பது பூமி வாழ் உயிரினத்தைக் காக்கும் படலமாகும். ஓசோன் என்றால் என்ன? அதைக் காப்பதற்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்த மூலக்கூறு (O3) ஆகும். பூமியிலிருந்து 15லிருந்து 35 கிலோமீட்டர் உயரத்தில் வளி மண்டலத்தில் அடர்த்தியாக உள்ள பெரிய பரப்பாகும். இது வெளிர் நீல நிறமுள்ள நிலைத்தன்மையற்ற வாயு ஆகும்.
சூரியனிலிருந்து வரும் அல்ட்ரா வயலட் ரேஸ் (Ultra Violet Rays) எனப்படும் புற ஊதாக் கதிர்கள் மூலம் பூமிக்கு ஏற்படும் ஆபத்தை இந்த ஓசோன் படலம் தடுத்து நிறுத்துகிறது. புற ஊதாக் கதிர்கள் பூமியில் விழுமானால் அனைத்து உயிரினமும் அழிந்துபடும். ஆகவே இந்த ஓசோன் படலத்தைக் காப்பாற்றுவது மனித குலத்தின் இன்றியமையாத கடமை ஆகிறது.
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஸ்பிரே வேதிப் பொருள்கள், குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வரும் குளோரோ புளுரோ கார்பன்கள், பிளாஸ்டிக் நுரையிலிருந்து வரும் வேதிப் பொருள்கள் ஆகிய இவை அனைத்தும் மெதுவாக மேலே வானத்தில் சென்று புற ஊதாக் கதிர்களில் பட்டு உடைகிறது. குறிப்பாக குளோரோ புளோரோ கார்பன்கள் புற உதாக் கதிர்கள் மூலம் உடைக்கப்படும் போது ஒரு குளோரின் அணு உருவாகிறது. இந்த ஒரு அணு மட்டும் சுமார் ஒரு லட்சம் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை நாசமாக்குகிறது. ஆகவே வளி மண்டலத்தில் ஓசோன் அடர்த்தி குறைந்துவிட்டது.
இந்த அடர்த்தி குறையவே புற ஊதாக் கதிர்கள் பூமியில் இப்போது விழ ஆரம்பித்து விட்டன. இதனால் தோல் புற்று நோய், கண்ணில் புரை ஆகியவை உருவாவதோடு உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியும் குறைவு படுகிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் குளோரின், புரோமின் போன்ற அணுக்களே ஓசோன் அழிவதற்கான காரணம் ஆகும்.
1995ஆம் ஆண்டு இரசாயனத்தில் – வேதியியலில் – நோபல் பரிசு பெற்ற ஷெர்வுட் ரோலெண்ட், பால் க்ரட்சன், மரியா மொலினா (Sherwood Rowland, Paul Crutzen and Mario Molina) போன்றவர்கள் கூட இது பற்றிய மர்மம் விளங்க மேலும் ஆராய்ச்சி தேவை என்கின்றனர்.
ஆகவே தொழிற்சாலை நச்சுக் கழிவுகளையும், லக்ஷக்கணக்கான வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப் புகையையும் தடுத்து நிறுத்துவது இன்றைய அவசர, அவசிய தேவையாகிறது. இது மட்டுமின்றி இந்தப் பேராபத்தால் உணவு உற்பத்தி குறையும் நிலை ஏற்படுகிறது. மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அதாவது சுருக்கமாகச் சொல்லப் போனால் சுற்றுப்புறச் சூழலே மாசுபட்டு கெடுகிறது.
ஆகவே 1985இல் வியன்னா கருத்தரங்கிலும், (Vienna Convention) தொடர்ந்து 1987இல் உருவாக்கப்பட்ட மாண்ட்ரீல் நெறிமுறையிலும் (Montreal Protocol) நம்மைக் காக்கும் ஓசோன் படலத்தை நாம் காக்க பல வழிமுறைகள் வகுக்கப்பட்டன. 198 நாடுகள் ஒப்புக் கொண்ட இந்த நடைமுறையின் அடிப்படைக் கருத்து குளோரோ புளோரோ கார்பன் நச்சுக் கழிவை நிறுத்த வேண்டும் என்பதே ஆகும்.
அதை ஒவ்வொரு மனிதனும் தலைப் பொறுப்பாகக் கொள்வோம். ஓசோன் படலத்தைக் காப்போம்!
***
tags — ஓசோன் படலம் ,OZONE LAYER,