தமிழ் இலக்கியத்தில் ஓம்காரத்தின் பெருமை (Post No. 3461)

Written by London swaminathan

 

Date: 18 December 2016

 

Time uploaded in London:- 10-44 AM

 

Post No.3461

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

உலகின் மிகப்   பழமையான நூல் ரிக்வேதம். அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்.

ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம் என்று முடிப்பர்.

 

ஓம்காரத்தில் வேதம் துவங்குவதை  யார் சொன்னார்?

உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் சொன்னான்:

 

வைவஸ்வதோ மனுர் நாம மானனீயோ மனீஷிணாம்

ஆசித் மஹீக்ஷிதாம் ஆத்ய: ப்ரணவ: சந்தசாம் இவ

–ரகுவம்சம் 1-11

 

வேதங்களுக்கெல்லாம் முதலில் பிரணவம் இருப்பது போல அரசர்களுக்கெல்லாம் முதல் அரசராக இருந்தவர் வைவஸ்வத மனு என்பவர். அவர் சூரியனுடைய புத்ரர். அறிவாளிகளாலும் மதிக்கத் தக்கவராய் இருந்தார்.

 

திருவாசகத்தில்

 

ஓம்காரத்தின் மற்றொரு பெயர் பிரணவம். இதை ஏகாக்ஷரம் என்று பகவத் கீதை பகரும். எப்படி ரிக்வேதம் ஓம்காரத்தில் துவங்கியதோ அப்படி மாணிக்க வாசகரின் திருவாசகமும் ஓம்காரத்தில்  துவங்கி அதில் முடிவடைகிறது. திருவாசகத்தில் 51 பாடற் பகுதிகளில் முதலில் உள்ளது சிவ புராணம். அதில்

உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா – என்று சிவபுராணத்தில் ஓம்காரத்தை அமைத்துள்ளார்.

 

கடைசியாக அமைந்த பாடற்பகுதி அச்சோ பதிகம். அதிலும், உய்யு நெறி காட்டுவித்திட்டோங்காரத்துட் பொருளை ஐயனெனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே – என்று சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார்.

மாணிக்கவாசகர் செய்த எல்லாவற்றையும் செய்ய முயன்ரறவர் பாரதியார். மணிவாசகப் பெருமானைப்போல திருப்பள்ளி எழுச்சி, அகவல், திருத்த்சாங்கம்,  குயிற்பாட்டு முதலிய பல செய்யுட்களை யாத்த பாரதி, அவரது புகழ் மிகு நூலான பாஞ்சாலி சபதத்தையும் ஓம்காரத்தில் துவங்கி அதிலேயே முடிக்கிறார்.

 

பாரதி பாடலில்

பாஞ்சாலி சபதத்தின் முதல் பாடல்:

ஓமெனப் பெரியோர்கள் – என்றும்

ஓதுவதாய் வினை மோதுவதாய்,

தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்

தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்

நாமமும் உருவும் அற்றே – மனம்

நாடரிதாய் புந்தி தேடரிதாய்

ஆமெனும் பொருளனைத்தாய் – வெறும்

அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்

 

நின்றிடும் பிரமம் என்பார் – அந்த

நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்

 

என்று பாடுகிறார். இதில் ஓம்காரத்தின் பெருமை முழுதும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

பாஞ்சாலி சபதத்தின் முடிவுப் பாடல் ஓம்கார கர்ஜனையுடன் முடிகிறது:

 

ஓமென்றுரைத்தனர் தேவர் – ஓம்

ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்

பூமியதிர்ச்சி உண்டாச்சு – விண்ணை

பூழிப்படுத்தியதாஞ் சுழற் காற்று

சாமி தருமன் புவிக்கே – என்று

சாட்சியுரைத்தன பூதங்களைந்தும்!

நாமுங் கதையை முடித்தோம் – இந்த

நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க.

 

அருமையான முடிவு.

 

திருமந்திரத்தில்

 

ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்

ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்

ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன

ஓம்கார சீவ பரசிவ ரூபமே

பொருள்:-

நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும் ஓம் என்னும் பிரணவத்திலிருந்தே உண்டாயின –ஓம்காரத்திலிருந்துதான் அசையும், அசையாப் பொருட்கள் உண்டாயின. ஓம் எனும் பிரணவத்துள்ளே விஞ்ஞானகலர் (ஆணவ மலம் பற்றிய ஆன்மா), பிரளயாகலர் (ஆணவம், கன்மம் இரண்டும்), சகலர் (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் பற்றிய ஆன்மா) ஆகிய மூன்று வகைப்பட்ட உயிர்களும் ஒடுங்கியுள்ளன. ஓம்காரம் என்பது சிவ சொரூபமாகவும் பரசிவ வடிவமாகவும் அமைந்தது. ஓம் எனும் பிரணவம் மந்திரம் மட்டும் அல்ல; மகேசனின் உருவமும் ஆகும்.

 

திருப்புகழில்

 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் நிறைய இடங்களில் ஓம்காரப் பெருமை கூறப்படுகிறது. இதோ ஒரே ஒரு திருப்புபுகழ்:

காமியத்தில் அழுந்தி இளையாதே

காலர் கைப்படிந்து மடியாதே

ஓமெழுத்தில் அன்பு மிகவூறி

ஓவியத்தில் அந்தமருள்வாயே

தூமமெய்க் கணிந்த சுக லீலா

சூரனைக் கடிந்த கதிர்வேலா

ஏமவெற்புயர்ந்த மயில்வீரா

ஏரகத்தமர்ந்த பெருமாளே

 

வள்ளலார் பாடலில்

அகத்திய முனிவனுக்கு முருகப் பெருமான் ஓம்கார மகிமையை உபதேசித்ததை, தெய்வ மணிமாலையில் வள்ளலாரும் பாடுகிறார்:-

 

சேமமிகு மாமறையின் ஓமெனும் அருட்பதத்

திறனருளி மலைய முனிவன்

சிந்தனையின் வந்தனையும் வந்த மெய்ஞ்ஞானசிவ

தேசிகாரத்னமே

 

என்று புகழ்கிறார்.

 

 

சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–

ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா

கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ

–பாதஞ்ஜலதர்சனம்

பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.

பழங்கால சம்ஸ்கிருத நூல்கள் அனைத்தும் இவ்விரு சொற்களுடனேயே துவங்கும்.

சுவாமி விவேகாநந்தர்  ஒரு அருமையான கருத்தை முன்வைக்கிறார்; எல்லா எண்ணங்களுக்கும் ஒரு சொல் உண்டு. சொல்லையும் அந்த எண்ணத்தையும் (Thought and Word cannot be separated) பிரிக்கமுடியாது. எல்லாப் பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு அவை இரண்டையும் பிரிக்க முடியாது (Word and Meaning). ஆனால் ஒவ்வொரு எண்ணத்துக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பல சொற்கள் இருக்கும்– கடவுள் என்றால் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல் இருக்கும்— தண்ணீர் என்றால் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல் இருக்கும். ஆகையால் ஒரே சொல்லை வைத்து அந்தப் பொருளை விளக்கமுடியாது. ஆனால் ஓம் என்ற சொல் மட்டும் மொழிக்கு அப்பாற்பட்ட சப்தம் – அது இறைவனையே குறிக்கும். வைஷ்ணவர்கள் விஷ்ணு என்றால்தான் கடவுள் என்று ஒப்புக்கொள்வர்; சைவர்கள் சிவன் என்றால்தான் கடவுள் என்று ஒப்புக்கொள்வர். ஆனால் ஓம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். சைவ வைஷ்ணவ சாக்தர்கள் மட்டுமின்றி, சமணர்கள், பௌத்தர்கள் சீக்கியர்களும் ஓம்காரத்தை ஒப்புக் கொள்கின்றனர் என்பார்.

 

இது மிகப்பெரிய உண்மை: இந்தியாவில் தோன்றிய எல்லா மதங்களுக்கும் ஓம் என்பது பொது; அதை சம்ஸ்கிருதத்திலும் எழுதலாம்; தமிழிலும் எழுதலாம் வெவ்வேறு உருவில் இருக்கும். ஆனால் சப்தம் ஒன்றே!

கடவுளை சப்தப் பிரம்ம என்பர்; இந்த உலகமே ஓம்காரத்தில் துவங்கியது. ஓம்காரத்தின் பெருமையை எல்லா முக்கிய உபநிஷத்துகளும் பறை சாற்றுகின்றன.

 

சிவபரத்துவ நிச்சயம் 

பாடல் 2

பிரணவத்தின் அர்த்த மாத்திரையிற் சிவலோக மிருக்குமென்பதால் அவ்வர்த்த மாத்ரா தெய்வம் சிவ பிரானே யென்பது.

 

அவ்வதி லிருக்கும் பூமி யந்தர மிருக்கு முவ்வில் 

மவ்வதி லிருக்குஞ் சொர்க்கம் வாக்கொடு மனமுஞ் செல்லாத 

திவ்விய வுமைவாழ் பாகச் சிவபிரான் சோம லோக 

மெவ்வமி லருத்தந் தன்னி லிருக்குமென் றுரைக்கும் வேதம். 

 

(அ-ரை) அந்தரம் – அந்தரிக்ஷம்; உமைவாழ் பாகச்சிவபிரான் என்றது சோமன் என்றதை விளக்கியபடி; சோமலோகம் – சிவலோகம்; எவ்வம் – கேடு; அருந்தந் தன்னில் – அருத்த மாத்திரையில்.

 

‘கேவலமகாரோகார மகாரார்த மாத்ரா ஸஹிதம் ப்ரணவமூஹ்ய’ என்ற ராம ரஹஸ்யோபநிஷத்தும், ‘அகாரோகார மகாரார்த மாத்ராத்மிகா’ என்ற வராகோபநிஷத்தும், ‘அர்த்தமாத்ரா ஸமாயுக்த: ப்ரணவோ மோக்ஷதாயக:’, “ப்ருதிவி – – அகாரே – – அந்தரிக்ஷம் – – உகாரே – – த்யெள: – – மகாரே – – பஞ்ச தைவதம் ஓங்காரம் ‘ என்ற தியாநபிந்தூப நிஷத்தும், ‘ப்ருதிவ்யகார: – – அந்த ரிக்ஷம் ஸ உகார: – – த்யெள: ஸ மகார: – – ஸோமலோக ஒங்கார:’ என்ற நரஸிம்ஹ பூர்வ உத்தாதாபிநியுபநிஷத்துக்களும் அதர்வ சிகோபநிஷத்தும், ‘அரைமாத்திரையி லடங்கும்மடி’ என்ற தேவாரமும், ‘மஹோசாநமவாங்மநஸகோசரம்’ என்ற சரபோநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.

 

ஓமின் புகழை ஒரு கட்டுரையில் அடக்க முடியாது.சுட்டிக்காட்டவே இயலும்!

ஓம் நம சிவாய; ஓம் நமோ நாராயணாய

 

–subam–

 

 

ஐரோப்பாவில் ஓம் சின்னம்! 4000 ஆண்டுக்கு முந்தையது!

220px-Om.svg

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1481; தேதி 13 டிசம்பர், 2014.

ஓம், சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவையும் கொல்லு.
ஒம், சக்தி அருளால் உலகில் ஏறு- ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன்னருளே என்று மனது தேறு — சுப்பிரமணிய பாரதி

ஓம்காரத்துக்கும் எண் மூன்றுக்கும் உள்ள தொடர்பை ஒருவர் புரிந்து கொள்ள பேரறிஞராக இருக்க வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் அந்த சின்னத்தைப் பார்த்த உடனேயே மூன்று என்பது அதில் இருப்பதைக் கண்டுபிடித்து விடுவர். நீங்களே கீழ்கண்ட படங்களைப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

முதலில் இந்து மதத்தில் ஓம்காரத்தின் சிறப்பைக் காண்போம். இது ஆன்மீகக் கட்டுரை இல்லை- வெறும் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகவே மூன்று தொடர்புள்ள இடங்களை மட்டும் காண்போம்.

இந்தப் பிரபஞ்சத்தில் முதலில் இருந்த நாதம் ஓம்கார நாதம். அதற்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. அதுவே பிரம்மன், அதாவது கடவுள். அதுவே பிரம்மா, விஷ்ணு, சிவனாக பரிணமித்தது. சத்வ, ரஜோ, தாமஸ குணத்தின் சின்னம் அது. அதே நேரத்தில் குணங்களைக் கடந்த நிலையும் அதற்கு உண்டு. அ+உ+ம என்ற மூன்று எழுத்துக்களால் உருவான சின்னம் அது. தமிழ் ஓமாக இருந்தாலும் சம்ஸ்கிருத ஓமாக இருந்தாலும் இந்த அ, உ, ம ஆகிய மூன்று எழுத்துகளும் அதில் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு இருப்பதையும், மூன்று என்ற எண் அதில் இருப்பதையும் காணலாம்.

0m-in-Various-Scripts

ஓம்காரம் மிகவும் அபூர்வமான மந்திரம் என்பதால் கிருஷ்ணன் பகவத் கீதையில் மூன்று முறை அதன் பெருமைதனை எடுத்துரைக்கிறார். இதற்கு ஏக அக்ஷரம் = ஓரெழுத்து என்று பெயர். பிரபஞ்சம் மஹா பிரளயத்தில் ஒடுங்கும்போது அது ஓம்காரத்தில் கலந்து விடும். சப்தத்தில் இருந்தே உலகம் தோன்றியது என்பதை விஞ்ஞானமும் ஒப்புக்கொள்ளும்.

படைத்தது—படைக்கப்பட்டது எல்லாவற்றையும் குறிப்பது ஓம். முக்காலத்தையும் குறிப்பது ஓம்காரம்.

மூன்று என்ற எண்ணில் உள்ள சொற்கள் (த்ரி குணம், த்ரி காலம் முதலியன) சம்ஸ்கிருதத்தில் மட்டும் 203 உள்ளன. தமிழில் உள்ள முத்தமிழ், முக்கனிகள் என்ற சொற்களைச் சேர்த்தால் இன்னும் நூறு சொற்கள் கிடைக்கலாம். மற்ற கலாசாரங்களில் உள்ள மூன்றுகளையும் சேர்த்தால் இன்னும் நூறு கிடைக்கலாம்.

Towriepetrosphere
Towrie petrosphere, Aberdeenshire, 3200 BCE

பகவத் கீதையில் ஓம்காரம்

இனி கண்ணன் சொல்வதைக் காண்போம்:
1.நான் எழுத்துகளில் ஓம் – ஆக இருக்கிறேன், அதாவது ஏகாக்ஷரமாக இருக்கிறேன் (10-25)
2.”ஆகையால் ஓம் என்று உச்சரித்து வேதியர்களின் வேள்வி, தானம், தவம் முதலியன துவங்குகின்றன” (17-24)

வேதத்தின் முதல் சொல் ஓம். இது இல்லாமல் எந்த மந்திரமும் சொல்லப்படமாட்டாது. வெறும் பூஜ்யங்களை ஆயிரம் முறை வரிசையாக எழுதினாலும் அது பூஜ்யமே. ஆனால் அதற்கு முன் ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எதை எழுதினாலும் அதன் மதிப்பு அபரிமிதமாகப் பெருகும். அது போலவே ஓம் என்னும் மந்திரத்துடன் மற்ற மந்திரங்களை சேர்க்கையில் அதில் உயிர்ச் சக்தி =பிராண சக்தி பாய்கிறது. இதனால் ஓம்காரத்துக்கு பிரணவம் என்று பெயர்.

(இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியின் பெயர் பிரணவ குமார முகர்ஜி. ஓம்காரம் என்பதைப் பலர் பெயர்களில் சூட்டிக்கொள்வர்)

3.பிரணவத்தை உச்சரித்து, என்னையும் சிந்தித்து உயிர் விடுவோர் மிக உயர்ந்த நிலையை அடைவர் என்று (8—13) மற்றொரு இடத்தில் சொல்லுகிறார்.
Omega_uc_lc.svg.hi
Omega of Greek Alphabet

கிரேக்க நாட்டில் ஓம்காரம்

கிரேக்க லிபியின் கடைசி எழுத்து ஒமெகா அதாவது மெகா + ஓ= பெரிய ஓ. ஓம்காரத்தின் பெருமையைத் தெரிந்து இதை இப்படி வைத்தனரோ என்று எண்ணுகிறோம். இன்னொரு காரணம் அந்த ஊர் பழங்காலப் பானைகளில் மூன்று சுழி சின்னத்தைக் காண முடிகிறது. ஒமேகா என்பதும் கிட்டத்தட்ட ஓம் போலவே எழுதப்படுகிறது.

newgrange.jpg
New Grange Spirals, Ireland

அயர்லாந்து நியூகிரேஞ்ச்

அயர்லாந்து நாட்டில் நியூகிரேஞ்ச் என்னும் இடத்தில் பெருங்கற்காலக் கல்லறைகள் இருக்கின்றன. அதன் முன்னால் வைக்கப்பட்டுள பாறையில் மர்மமான மூன்று சுழிச் சின்னங்கள் இருக்கின்றன. “என்னை நினைத்து ஓம்காரத்தைச் சொல்லி உயிர் விடுபவன் பரம கதியை அடைகிறான்” — என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னதை உறுதிபடுத்தும் வகையில் இச்சின்னத்தைக் கல்லறையில் காண்கிறோம். இதன் காலம் கி.மு 2000 முதல் 3000 என்று பல கணிப்புகள் உள்ளன.

மால்டா என்ற தீவு நாட்டிலும், அயர்லாந்தில் மேலும் பல இடங்களிலும் பிரான்ஸில் பிரிட்டனி என்னும் இடத்திலும் இதே போல மூன்று சுழிச் சின்னங்கள் உளது. ஆயினும் நியூகிரேஞ்ச் சின்னம் தெள்ளத் தெளிவானது. அதில் ஏழு வளைவுக் கோடுகள் கடிகார முறையிலும் எதிர்திசையிலும் செல்லும்படி வரைந்துள்ளனர். இதன் காரணமாக, இதில் உட்பொருள், மறை பொருள் உண்டு என்றே தொல்பொருட்த் துறை அறிஞர்கள் வியாக்கியானம் செய்கின்றனர்.

இதே போல கெல்டிக் ஆர்ட் எனப்படும் ஐரிஷ் கலாசாரம் பரவிய நாடுகளில் கை போன்ற மூன்ற வளைவுகள் உடைய சின்னம் —ட்ரஸ்கெலியான் எனப்படும்—சின்னம் காணப்படுகிறது.

Jug with Triple Spirals
Ancient Greek Jar

இது எல்லாவற்றிலும் ஒரு உண்மை புலப்படும். இவை அனைத்தும் பாஸிட்டிவ் = ஆக்கபூர்வ சக்தி உண்டாக்கும் சின்னங்கள். ஏனெனில் “ஐல் ஆப் மேன்” எனப்படும் தீவில் மூன்று கால்கள் சுற்றும் சின்னம் இருக்கிறது. அதில் எழுதி இருக்கும் வாசகம்:– ‘’இதை எங்கே தூக்கி எறிந்தாலும் இது நிமிர்ந்தே நிற்கும்’’.

இதிலிருந்தே இத்தகைய சின்னத்தை உருவாக்கியவர்களின் மனநிலை நமக்குப் புரிகிறது. எல்லாம் ஓம்காரம் போல ஆக்கபூர்வமான சக்தியைக் குறிப்பதே. மற்றொரு அபூர்வ ஒற்றுமை எல்லாம் மூன்று என்ற எண்ணின் அடிப்படையில் அமைந்த சின்னங்கள்!!

isla of man
Emblem of Isle of Man

ஓம் ஓம் என்று உரைத்தனர் தேவர்- ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
நாமும் கதையை முடித்தோம் – இந்த
நாநிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க! – பாஞ்சாலி சபதம், பாரதியார்

triskailion
traiskelion
–சுபம்—