
Post No. 9924
Date uploaded in London – 2 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

அமெரிக்க சிறுகதை எழுத்தாளர் ஓ ஹென்றி O HENRY , சிறுகதைகளை எழுதுவதில் ஒரு புதிய பாணியை உருவாக்கினார். பெரும்பாலான கதைகளில் திடீர் முடிவு இருக்கும். இதனால் மாப்பாசான் போன்ற புகழ்பெற்ற சிறுகதை ஆசிரியர் வரிசையில் இவரும் நிற்கிறார். ஓ ஹென்றியின் உண்மைப் பெயர் WILLIAM SIDNEY PORTER வில்லியம் சிட்னி போர்ட்டர். அவருடைய கதைகளை விமர்சகர்கள் குறைகூறியபோதும் ரசிகர்கள் விரும்பினர். இதனால் அமெரிக்காவில் 1918 முதல் அவருடைய பெயரில் பத்திரிகைகளில் வெளியாகும் சிறந்த சிறுகதைக்கு பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாநிலத்தில் பிறந்தார். அதிகம் படிக்கவில்லை. இதனால் அவர் எந்த நிலையான வேலையிலும் நிற்க இயலவில்லை. தவளை போல தாவிக்கொண்டே இருந்தார்.1882ல் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் ஆஸ்டின் நகரில் குடிபுகுந்தார். திருமணமும் செய்துகொண்டார். ஒரு வங்கியில் வெளியே பார்த்துக் கொண்டே ‘த ரோலிங் ஸ்டோன்’ THE ROLLING STONES என்ற வாரப் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்தார். அப்போது அதிகமாகக் குடித்துக் குடித்து குடலைக் கெடுத்துக் கொண்டார். குடல் கேட்டு உடல்நலம் குன்றியது. 1894ம் ஆண்டில் அவர் வேலை பார்த்த பேங்க்கில் (Bank) நிறைய பணம் மாயமாய் மறைந்தது. ஓ ஹென்றி மீது குற்றம்சாட்டப்படுவதற்கு முன்னரே அவர் ஹான்டுராசுக்கு (Honduras) ஓடிப்போனார். அதே நேரத்தில் அவர் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கலானது .மனைவி மரணப்படுக்கையில் இருந்ததால் அடுத்த ஆண்டில் ஹாண்டுராஸ் நாட்டிலிருந்து அமெரிக்காவின் ஆஸ்டின் நகருக்குத் திரும்பினார்.
1898ல் அவர் பேங்க் Bank பணத்தைத் திருடியது நிரூபிக்கப்பட்டதால் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது. அது அவருக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று, சிறையில் சிந்தனையும் கற்பனையும் சிறகடித்துப் பறந்தது. சிறுகதைகள் மலர்ந்தன. சிறையின் முதல் ஆண்டு வாசத்திலேயே அவருடைய சிறுகதை ஒரு தேஸீய பத்திரிகையில் வெளியானது. சிறு கதை என்று சொல்வதைவிட சிறைக்கதை என்றே சொல்லவேண்டும். அப்போது அவருக்கு 36 வயது. அவர் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 1901ல் சிறையிலிருந்து வந்தபின்னர் நியூயார்க்கில் வாழவைத் தொடங்கினார் . அதற்கு முன்னரே அவருடைய புகழ் கதைகள் மூலம் பரவியது 1904, 1905ம் ஆண்டுகளில் வாரத்துக்கு ஒரு கதை எழுதினார். அத்தனையும் முத்துக்கள்; எதுவும் சொத்தை இல்லை.
ஓ ஹென்றி தன்னுடைய கதைகளை தொகுதி தொகுதியாக வெளியிட்டார். ‘நான்கு மில்லியன்’ Four Million என்ற தொகுதியில் Magi மாகி கதை, மாமன் Mamon கதை ஆகியவற்றில் இவருடைய திடீர் முடிவுகளைக் காணலாம்.

பிறந்த தேதி – செப்டம்பர் 11,1862
இறந்த தேதி- ஜூன் 5, 1910
வாழ்ந்த ஆண்டுகள் — 47
எழுதிய கதைகள்- PUBLICATIONS
1904- CABBAGES AND KINGS
1906 – THE FOUR MILLION
1907 – THE TRIMMED LAMP
1907 – THE HEART OF THE WEST
1908- THE VOICE OF THE CITY
1908 – THE GENTLE GRAFTER
1909- ROADS OF DESTINY
1909 – OPTIONS
1910- STRICTLY BUSINESS
1910- WHIRLIGIGS
-SUBHAM–


tags- பாங்கு, சிறை , சிறுகதை ஆசிரியர், ஓ ஹென்றி, O Henry