கம்பவர்மன் கல்வெட்டில் பாவ புண்ணியம் பற்றிய சுவையான செய்தி (Post No.4098)

கம்பவர்மன் கல்வெட்டில் பாவ புண்ணியம் பற்றிய சுவையான செய்தி (Post No.4098)


Written by London Swaminathan


Date: 20 July 2017


Time uploaded in London- 13-50


Post No. 4098


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பவர்மன் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பல்லவ மன்னன். கி.பி.900 வாக்கில் ஆட்சி செய்தவன். அவனது பல கல்வெட்டுகள், நடுகல் கல்வெட்டுகளாகும். உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நடுகல் நட்டு அதற்கு ஊர் மக்களும் அந்தப் பக்கம் போய்வரும் யாத்ரீகர்களும் வழிபாடு செய்வதை சங்க இலக்கிய நூல்கள் செப்புகின்றன.

 

போர்க்காலங்களில் தாமாக முன்வந்து களபலி கொடுக்கும் வழக்கம் மஹாபாரத காலம் முதல் இருந்து வருகிறது. இதை நவகண்டம் பற்றிய எனது கட்டுரையில் காண்க. அப்படிப்பட்ட நவகண்டம் ஒன்று நடந்த பின்னர் நட்ட கம்பவர்மன் நடுகல்லில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன:-

 

  1. இந்த நாடு கங்கை தோன்றும் கங்கோத்ரி இருக்கும் இமயம் முதல் குமரி வரை ஒன்று!

2.போருக்கு முன், ஒருவன் உயிர்ப்பலி கொடுத்து நாட்டைக் காக்க மக்களுக்கு வீரம் ஊட்டும் வழக்கம் மகாபராத காலம் முதல் — அஸ்தினாபுரம் முதல் — குமரி வரை – இருந்துள்ளது!

 

  1. கல்வெட்டுகளுக்கு தீங்கிழைப்போருக்கு பாவம் வரும்; அவைகளைக் காப்போருக்கு புண்ணியம் கிடைக்கும்.

 

கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு

ஸ்ரீ கம்ப பருமற்கு

யாண்டு இருபதாவது

பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க

தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று

படாரிக்கு நவகண்டங் குடுத்து

குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது

எமூர்ப் பறைகொட்டக்

கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்

பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்

குடுத்தார்கள்

இது அன்றென்றார்

கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்

செய்தான் செய்த பாவத்துப் படுவார்

அன்றென்றார் அன்றாள் கோவுக்கு

காற்ப்பொன் றண்டப்படுவார்

 

உதவிய நூல்; கல்வெட்டு ஓர் அறிமுகம், தமிழ்நாடு தொல்பொருள்துறை ஆய்வுத்துறை வெளியீடு, 1976

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் பாவ புண்ணியங்களுக்குப் பயந்ததால்தான் நமக்குப் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இன்றோ கோவில் சிலைகளையே திருடி விடுகின்றனர்.

 

மேலும் கங்கையையும் குமரியையும் குறிப்பிட்டதன் காரணம் இவ்விரண்டும் புனித நீர்த்துறைகளாகும். இதன் பொருள் என்ன வென்றால் சாதாரண இடத்தில் பாவம் செய்வதைவிட புனித இடத்தில் பாவம் செய்வது பல மடங்கு கொடியது என்பது தமிழரின் நம்பிக்கை.

 

கல்வெட்டின் பொருள்:-

பல்லவ மன்னன் கம்ப வர்மனின் 20-ஆவது ஆட்சி ஆண்டில் இது பொறிக்கப்பட்டது. பட்டை பொத்தன் என்பவனின் வெற்றிக்காக ஒக்கொண்டநாகன் ஒக்கதித்தன் என்பவன் தன்னுடைய தலையை அறுத்து பிடாரியின் பீடத்தில் வைத்தான். அவனுக்கு திருவான்மூர் மக்கள் பறைகொட்டி , கல் நட்டு சிறப்பு செய்தார்கள். நிலமும் கொடையாக அளிக்கப்பட்டது.

 

இக்கொடைக்கு ஊறு செய்வோர் கங்கைக்கரை முதல் குமரி வரையுள்ள மக்கள் செய்த அனைத்து பாவங்களையும் பெறுவார்கள். மேலும் மன்னனுக்கு கால் பொன் அபராதமும் கட்ட வேண்டும்.

 

நாகர்கள் பெயர்கள் சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் இருபது பேர் வரை உள்ளனர். குபதர் கால கல்வெட்டுகளிலும் பலர் நாகன் என்ற பெயர் உடையவர்கள் ஆவர்.

TAGS: கம்பவர்மன், நவகண்டம்,  கங்கை குமரி, பாவம்

–subham–